

வாட்ஸ்அப்பில் ஆன்லைன் மோசடிகள் மற்றும் ஸ்பேம் (Spam) மெசேஜ்களைக் கட்டுப்படுத்த 'ஸ்கேம் அலர்ட்' (Scam Alert) என்ற புதிய ஏஐ (AI) அடிப்படையிலான பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெட்டா (Meta) நிறுவனம் கொண்டு வந்துள்ள இந்த புதிய வசதி, நமக்குத் தெரியாத எண்களில் (Unknown Numbers) இருந்து வரும் சந்தேகத்திற்குரிய மெசேஜ்களைக் கண்டறிந்து, பயனர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும்.
உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத (Unknown numbers) நபர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களின் மொழியமைப்பு மற்றும் உரையாடல் முறையை உங்கள் போனில் உள்ள ஏஐ தொழில்நுட்பம் தானாகவே கண்காணிக்கும்.
அதாவது உங்களது காண்டாக்ட் லிஸ்ட்டில் (Contacts) சேமிக்கப்படாத புதிய எண்களில் இருந்து வரும் சந்தேகத்திற்குரிய மெசேஜ்களை மட்டுமே இது கண்காணிக்கும்.
இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலிக்குள்ளேயே இயங்கும் ஆன்-டிவைஸ் மெஷின் லேர்னிங் (On-device machine learning) தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது. இதன் மூலம், மெசேஜ்களின் உரையாடல் அமைப்பு மற்றும் மொழியியல் சமிக்ஞைகளை (Linguistic signals) ஏஐ தானாகவே பகுப்பாய்வு செய்கிறது. நமக்கு வரும் குறுஞ்செய்திகளின் கட்டமைப்பு மற்றும் வார்த்தைகளைப் பகுப்பாய்வு செய்து, அது மோசடி மெசேஜாக இருக்க வாய்ப்புள்ளதா என்பதைத் தானாகவே கண்டறியும்.
அது ஏதேனும் ஒரு மோசடி மெசேஜ் (வேலை வாய்ப்பு மோசடி, பரிசு விழுந்ததாகக் கூறும் போலி லிங்க், பண மோசடி போன்றவை) என சந்தேகித்தால், உடனே உங்களுக்கு “இது ஒரு மோசடியாக இருக்கலாம்” (This may be a scam) என்ற எச்சரிக்கையைக் காட்டும்.
உங்களுக்கு வரும் ஏதேனும் ஒரு மெசேஜ் மோசடியாக இருக்கலாம் என வாட்ஸ்அப் சிஸ்டம் கருதினால், உங்கள் சாட் திரையின் மேல் “This may be a scam” என்ற எச்சரிக்கை பேனரை (Warning Banner)காண்பிக்கப்படும். இந்த எச்சரிக்கை உங்களுக்கு மட்டுமே தெரியும், மெசேஜ் அனுப்பியவருக்குத் தெரியாது.
இந்த எச்சரிக்கை வந்தவுடன், அந்த எண்ணை நீங்கள் உடனடியாக பிளாக் (Block) அல்லது ரிப்போர்ட் (Report) செய்துகொள்ளலாம். ஒருவேளை அது உங்களுக்குத் தெரிந்த நபர் என்றால், 'Trusted' என்றும் மாற்றிக்கொள்ளலாம். (இதன் மூலம் எச்சரிக்கை பெனர் நீங்கிவிடும்).
இந்தச் செயல்முறை அனைத்தும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (End-to-End Encryption) பாதுகாப்பை மீறாமல், உங்கள் மொபைலுக்குள்ளேயே (On-device) செயல்படுவதால், உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களை வாட்ஸ்அப் நிறுவனமோ அல்லது மெட்டா நிறுவனமோ படிக்க முடியாது.
இதனால் உங்கள் தனியுரிமை (Privacy) மற்றும் சேட்களின் பாதுகாப்பு முழுமையாகப் பராமரிக்கப்படும்.
தற்போது இந்த அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பீட்டா (Android Beta) பயனர்களுக்குச் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இது தானாகவே ஆன் ஆகாது, நீங்கள்தான் ஆன் செய்ய வேண்டும்.
1. வாட்ஸ்அப் செயலியைத் திறந்து Settings பகுதிக்குச் செல்லவும்.
2. அதில் Account என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அங்கே கொடுக்கப்பட்டுள்ள Scam Alerts என்ற புதிய ஆப்ஷனை கிளிக் செய்து ஆன் (Toggle On) செய்து கொள்ளலாம்.
மேலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் அறிமுகமில்லாத எண்களில் இருந்து அதிகப்படியான மெசேஜ்கள் வருவதைத் தடுக்க, Settings > Privacy > Advanced பகுதிக்குச் சென்று ‘Block unknown account messages’ என்ற வசதியையும் நீங்கள் ஆன் செய்து பயன்படுத்தலாம்.
தற்போது இந்த அம்சம் குறிப்பிட்ட பீட்டா (Beta) பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இது அனைத்து பொதுப் பயனர்களுக்கும் முழுமையாக அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.