விஜய்யை அரசியல் களத்தில் இறக்கியது யார்.? பரபரப்பை கிளப்பிய மன்சூர் அலிகான்.!

Mansoor Ali khan not support TVK
TVK Vijay
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளதால் சினிமாவை விட்டு விலகியுள்ளார். இவரது கடைசி திரைப்படமான ஜனநாயகன் வருகின்ற ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், நாளை மாலை 6:45 மணிக்கு இப்படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில், என்னை ஆதரித்த ரசிகர்களுக்காக உழைக்க காத்திருப்பதாக தெரிவித்திருந்தார் விஜய். இந்நிலையில் விஜய் அரசியல் களத்தில் இறங்க காரணம் யார் என்பது குறித்து, நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு நுழைந்த நடிகர்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றவர் எம்ஜிஆர். அவருக்குப் பிறகு ஜெயலலிதா தான் தமிழக அரசியல் களத்தில் ஜொலித்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு கட்சியை தொடங்கிய நடிகர் விஜயகாந்த், ஓரளவு மக்கள் செல்வாக்கைப் பெற்ற போதிலும் அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இருந்து மீண்டும் ஒரு நடிகர் தமிழக அரசியல் களத்தில் நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய்க்கு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பலரும் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர்.

ஆகையால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

வில்லன் நடிகரும், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகானிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான், “தமிழ் சினிமாவில் விஜய் ஒரு நல்ல நடிகர். அவர் அரசியல் களத்திற்கு வந்தபோது முதலில் நானும் அவரை ஆதரித்தேன். ஆனால் அவரை அரசியல் களத்தில் இறக்கி விட்டது யார் என்பதை நான் பிறகு தான் அறிந்து கொண்டேன். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் போல விஜய்யும் மக்கள் போராட்டம் செய்து, பிறகு அரசியலுக்குள் வந்திருந்தால் அவருடன் நாடே துணையாக நின்றிருக்கும்.

பெரும்பாலான ரசிகர்கள் அவரை நடிகராக மட்டுமே பார்க்க விரும்புகிறார்கள். ஜனநாயகன் அவருடைய கடைசி படம் என்பதால் ரசிகர்களும், பொதுமக்களும் அவர் மீது அதிக அன்பை வெளிப்படுத்துகின்றனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாது; ஆட்சியைப் பிடிக்கக் கூடாது என்றெல்லாம் நான் சொல்லவில்லை. அவர் முதலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மக்களின் செல்வாக்கைப் பெற்ற பிறகே, அரசியலில் தனது இடத்தை அவரால் நிரூபிக்க முடியும்.

பல கோடிகளில் சம்பளம் வாங்கும் சினிமா துறையை விலக்கி வைத்து விட்டுத் தான், ரசிகர்களுக்காக அரசியலுக்கு வந்திருப்பதாக விஜய்யும், தவெக நிர்வாகிகளும் தொடர்ந்து கூறி வருகின்றனர். அவருடைய ரசிகர்களும் எங்கள் அண்ணன் எங்களுக்காக அரசியலுக்கு களத்தில் உழைக்க வந்து விட்டார் என பெருமை கொள்கின்றனர். இந்நிலையில் விஜய் அரசியலில் இறங்குவதற்கு காரணம் யார் என்று தெரிந்த பிறகு, நான் அவரை ஆதரிப்பதை நிறுத்திக் கொண்டேன்” என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
இயக்குநர் அவதாரம் எடுக்கப் போகும் விஜய் சேதுபதி!
Mansoor Ali khan not support TVK

விஜய்யை அரசியலுக்குள் நுழைத்தது யார் என்று தெரியும் என மன்சூர் அலிகான் கூறியிருப்பது, விஜய் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் யார் என்ற அந்த புதிருக்கே விடையளிக்காமல் இருக்கிறார் மன்சூர் அலிகான்.

ரசிகர்கள் பலர் இதற்கு விடை கேட்ட போதும், அவர் சொல்ல மறுத்து விட்டார். இருப்பினும் ரசிகர்கள் பலர் விஜய்யை அரசியல் களத்தில் இறக்கி விட்டது யார் என்ற கேள்வியை இணையத்தில் தேடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஃப்ளோசிங் செய்வது ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?
Mansoor Ali khan not support TVK

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com