

அமெரிக்காவிற்கு ஈரான் என்பது ‘பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு நாடு’, ஆனால் ஈரானுக்கு அமெரிக்கா என்பது ‘தங்கள் நாட்டு வளங்களை சுரண்ட துடிக்கும் ஒரு சாத்தான்’ என்று சொல்கிறது. இந்த அதிகாரப் போட்டிதான் இன்று போராக உருவெடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அதாவது பிப்ரவரி 28-ம்தேதி இஸ்ரேல் - அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடவடிக்கையை தொடங்கிய நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான், இஸ்ரேலுக்கு மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவம் மற்றும் கடற்படை தளங்களை குறிவைத்தும் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன், ஈராக், ஜோர்டன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் மீது டிரோன்கள் மூலமும், ஏவுகணைகள் மூலமும் ஈரான் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதனால், கடந்த 5 நாள்களாகவே மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.
ஈரான்-அமெரிக்க இடையேயான இந்த போர், இந்தியாவிற்கு மிகப்பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. ஏனென்றால் இந்தியா எப்போதும் ஈரானுடன் இணக்கமாக இருக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்காவுடனும் நெருக்கமாக இருக்கிறது. இந்த ‘இருதலைக்கொள்ளி எறும்பு’நிலையில், இந்திய அரசு எந்த மாதிரியான ராஜதந்திர முடிவை எடுக்கப்போகிறது என்பதே தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
உலகளாவிய எரிசக்தி பாதையாக ஹார்முஸ் ஜலசந்தி உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் மற்றும் ஓமன் எல்லையாக உள்ள இது ஒரு சர்வதேச கப்பல் வழித்தடமாக உள்ளது. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கிடையே வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.
இதனால் சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எரிபொருள் ஏற்றி வந்த 150-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் தவிக்கின்றன. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி செய்யும் கப்பல்கள் மீதும் சரமாரி தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பதற்றம் நீடிக்கிறது.
இந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் எண்ணெய் டேங்கர் கப்பல்கள் அங்கு சிக்கிய நிலையில் உலகளவில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. ஒரே பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 80 அமெரிக்க டாலர்கள் அளவிற்கு விற்பனையாகி வருகிறது, இஸ்ரேல் - ஈரான் மோதலுக்கு பின் சுமார் 10 சதவீதம் அளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து மோசமானால், இது 100 அமெரிக்க டாலர் அளவிற்கு உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
கடல் வழியான கச்சா எண்ணெய் ஏற்றுமதி சுமார் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கும், எல்பிஜி ஏற்றுமதியில் 20 சதவீதமும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டுசெல்லப்படுகின்றன.
உலகத்தில் அதிகமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான். கச்சா எண்ணெணில் இருந்து எடுக்கப்படும் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு 88 சதவீத இறக்குமதியை நம்பியே இந்தியா உள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 50 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு இறக்குமதியாகிறது.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) பெரும்பாலும் கத்தாரில் இருந்துதான் இந்தியா பெறுகிறது, இதுவும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வர வேண்டும். அடுத்து, மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் இருந்துதான் அடுத்து கச்சா எண்ணெய்யை இந்தியா பெற்றாக வேண்டும்.
ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வழங்குவதால், இந்தியா தனது தட்டுப்பாட்டை குறைக்க ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதியை அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல்-டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில், கச்சா எண்ணெய் இருப்பு குறித்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்தும் இந்திய அரசு தரப்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, 25 நாள்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யின் இருப்பு உள்ளதாக அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டாலும் தற்சமயத்திற்கு, பெட்ரோல்-டீசல் விலை உயராது என மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் அமைச்சகத்துறை மந்திரி ஹர்திக் சிங் புரி, கூறுகையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை உயராது. எரிபொருள் மற்றும் வணிக ரீதியாக தேவையான பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது. இதனால் புவிசார் பதற்றம் இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை ஒருபோதும் பாதிக்காது என்றார்.
இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் சில்லறை விலை மாற்றமின்றி தொடர்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு தருணங்களில் புவிசார் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. ஆனால் இந்தியன் ஆயில்(ஐஓசி), பாரத் பெட்ரோலியம்(பிபிசிஎல்) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தவில்லை.
இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும்போது இந்நிறுவனங்கள் நஷ்டத்தையும், குறையும் போது லாபத்தையும் ஈட்டி வருகின்றன. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எதிர்கட்சிகளின் விமர்சனத்துக்குள்ளாக மத்திய அரசு விரும்பவில்லை.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை அளவுக்கு அதிகமாக உயரும்பட்சத்தில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை மத்திய அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.