

பருவகால மாற்றத்தினால் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் மழைப்பொழிவு குறைந்து, வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எல்-நினோ தாக்கத்தால் நடப்பாண்டில் கோடை காலம் முடிந்த பிறகும் கூட அதிக வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன.
நீர்நிலைகளில் உள்ள நீர் இருப்பு குறைந்துள்ளதால், தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என ஏற்கனவே எச்சரிக்கை வெளியானது. தொடர்ந்து அதிக வெப்பம் நிலவுவதால், குளிர்காலத்தின் நிலை என்னவாகும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது.
இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விடவும் 13% குறைவான மழைப்பொழிவுடன் நிறைவடைகிறது. நடப்பாண்டு இறுதியில் எல்-நினோ பாதிப்பு தீவிரமடையும் என்பதால், இந்தியாவில் குளிர்காலம் பாதிக்கப்படும். இதனால் வழக்கமான குளிர்நிலையில் மாற்றம் ஏற்படும். கடந்த 2015 - 2026 எல்-நினோ காலத்தைப் போலவே, நடப்பாண்டில் குளிர்காலம் இயல்பை விட சற்று வெப்பமாக இருக்க வாய்ப்புள்ளது.
குளிர்கால மழைப்பொழிவும் குறையக் கூடும் என்பதால், வறட்சியான நிலை மேலும் நீடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோதுமை உள்ளிட்ட ரபி பயிர்களுக்கு குளிர்காலம் தான் ஏற்றது. ஆனால் இந்த குளிர்காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால், பயிர் விளைச்சல் பாதிக்கக் கூடும்.
குறைவான மழையும், அதிக வெப்பநிலையும் பயிர் விளைச்சலுக்கு நல்லதல்ல. குளிர்காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால், பனிப்பொழிவும் வழக்கத்தை விட குறைவாகவே இருக்கும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோதுமை பயிர் உற்பத்தி பாதிக்கப்பட்டால், வட இந்திய மாநிலங்களில் உணவுப் பஞ்சம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சென்னையில் உள்ள ஏரிகளில் தண்ணீரின் இருப்பு குறைந்து இருக்கும் நிலையில், பருவமழை குறைந்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஏறகனவே எச்சரிக்கை விடப்பட்டது. கடந்த ஆண்டுகளில் இதே நேரத்தில் 9 டிஎம்சி தண்ணீர் இருந்த நிலையில், தற்போது 5 டிஎம்சி மட்டுமே இருக்கிறது.
சென்னைக்கு ஒரு மாதத்திற்கு 1 டிஎம்சி தண்ணீர் தேவை என்ற நிலையில், தற்போது இருக்கும் இருப்பு 5 மாதத்திற்கு மட்டுமே வரும். இதனால் பருவமழை தான் சென்னையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் எனக் கூறப்படுகிறது
இந்தியாவில் குளிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், எல்-நினோ தாக்கம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது என சர்வதேச வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடப்பண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, வழக்கத்தை விடவும் 1.5°C முதல் 2°C வரை உயர்ந்தது. இதற்குப் பின் வாராந்திர வெப்பநிலை 2.2°C முதல் 2.6°C வரை உயர்ந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் எல்-நினோ மிகவும் தீவிரமடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை காட்டிலும் 3.7° செல்சியஸ் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் எல்-நினோ தாக்கத்தால் மழைப்பொழிவிலும், வெப்பநிலையிலும் கணிக்க முடியாத மாற்றங்கள் ஏற்படும். இதன் தாக்கம் இந்தியாவிலும் பருவநிலைக்கு ஏற்ப மாறுபடும்.
எல்-நினோ தாக்கத்தால் பூமியின் பல பகுதிகள் அதிக வெப்பத்துடன் இருக்கும் என்பதை உணர்த்தும் ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த வரைபடத்தில் பெரும்பாலான இடங்கள் அதிக வெப்பத்தைக் குறிக்கும் சிவப்பு வண்ணத்தில் குறியிடப்பட்டன. இதனால் பூமியே சிவப்பாக மாறவுள்ளது என்ற அதிர்ச்சி கிளம்பியது. இந்நிலையில் இந்தியாவில் குளிர்காலமும் பாதிக்கப்படுவது ஆபத்தையே விளைவிக்கும்.