ஞாபக சக்தியின் ஜீனியஸ்.! உலகை வியக்க வைத்த தமிழ்நாட்டு குழந்தை.!

Tamilnadu Child Mohammed Harik's World Record
Memory Power
Published on

ஞாபக சக்தி என்பது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மற்றவர்கள் முன்னிலையில் நம்மை தனித்துவமாக காட்டும் சிறப்பைக் கொண்டது. ஒரு வாரத்திற்கு முன்னால் நம் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று கேட்டாலே சிலருக்கு ஞாபகம் இருக்காது. ஆனால் ஆத்திச்சூடி, பாரதியார் பாடல்கள் திருக்குறள் மற்றும் தேசிய சின்னங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்ட அடுத்த நொடியிலேயே பதிலளிக்கிறான் கல்பாக்கத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன்.

கேள்வி கேட்ட அடுத்த சில விநாடிகளிலேயே பதில் அளிக்கும் திறன் கொண்ட இந்தச் சிறுவனின் நினைவாற்றல் எவ்வளவு சிறப்பு மிகுந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் நினைவாற்றல் திறனில் சாதனை படைத்திருக்கும் முகமது ஹாரிக் என்ற சிறுவன் தான், இன்று சமூக ஊடகங்களில் பாராட்டு மழையில் நனைந்து வருகிறான். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்த 5 வயது சிறுவனான முகமது ஹாரிக், அசாத்தியமான நினைவாற்றல் மற்றும் சிறப்பான கற்கும் திறனுக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, உலக சாதனையைப் படைத்துள்ளான்.

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் அருகே மெய்யூர் பகுதியைச் சேர்ந்த முகமது அஜ்மல் மற்றும் ரூபியாபானு தம்பதியின் மகன் தான் முகமது ஷாரிக். இந்தச் சிறுவன், கல்பாக்கத்தில் இயங்கும் அணுசக்தி மத்திய பள்ளியில் UKG படித்து வருகிறான்.

சிறு வயதில் இருந்தே அதீத நினைவாற்றல் மற்றும் அதிவிரைவாக பதிலளிக்கும் திறன் பெற்றவனாக திகழ்ந்து வருகிறான். தற்போது புழக்கத்தில் ஏராளமான மலர்கள் கிடைக்கின்றன. அதில் சிலவற்றை கூறுங்கள் என நம்மிடம் கேட்டால், நமக்கு மிகவும் பரிட்சையமான மலர்களின் பெயர்களையே முதலில் கூறுவோம். அதன்பிறகு யோசித்து யோசித்து கூற வேண்டிய நிலையில் தான் நம்மில் பலரும் இருப்போம்.

ஆனால் வெறும் 36 விநாடிகளில் 99 தமிழ் மலர்களின் பெயரைக் கூறி நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான் முகமது ஹாரிக். பாரதியார் பாடல்கள், 31 ஆத்திச்சூடி பாடல்கள் மற்றும் 70 திருக்குறள்களை பிழையின்றி மனப்பாடமாக கூறுகிறான் இந்தச் சிறுவன்.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் என அனைத்தின் பெயரையும் மிகத் துல்லியமாக குறிப்பிடுகிறான். இதுதவிர இந்திய தேசிய தலைவர்கள் மற்றும் தேசிய சின்னங்களையும் அடையாளம் கண்டு மிகச் சரியாக கூறுகிறான்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.! புறநகர் ரயிலின் வருகை நேரத்தை தெரிந்து கொள்ள புதிய வசதி.!
Tamilnadu Child Mohammed Harik's World Record

காய்கறிகள், பழங்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் பெயர்களைப் தமிழ் உள்பட பல மொழிகளில் வகைப்படுத்துகிறான்.

தமிழ் மொழி மட்டுமின்றி, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிப் பாடல்கள் மற்றும் கதைகளை சொல்லும் திறனைப் பெற்றிருக்கிறான் முகமது ஹாரிக்.

5 வயது சிறுவனின் இந்த அரிய நினைவாற்றலைப் பாராட்டி, ‘ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம், சிறுவன் முகமது ஹாரிக்கின் பெயரை உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இச்சிறுவனின் நினைவாற்றல் திறன் மற்றும் சாதனையைப் பாராட்டி, சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் முகமது ஹாரிக், தற்போது உலக அளவில் சாதனை படைத்திருப்பது தமிழர்களாகிய நாம் அனைவருக்கும் பெருமையான விஷயமாகும்.

இதையும் படியுங்கள்:
ஆயுஷ்மான் கார்டு வைத்திருந்தால் நாடு முழுவதும் இலவச சிகிச்சை..!
Tamilnadu Child Mohammed Harik's World Record

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com