

நாளை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள சூழலில், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், கள்ள ஓட்டைத் தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும் வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்துவதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஒருவேளை உங்களுடைய வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டால், அதனை சாதாரணமாக விட்டு விடக் கூடாது. உடனடியாக தேர்தல் பூத் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்.?
* பூத் அதிகாரியின் அறிவுரைப்படி Tendered Ballot Paper, Form 17B என்ற படிவத்தை நிரப்பி, சமர்ப்பிக்க வேண்டும்.
* உங்கள் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டதும், நீங்கள் வாக்களிக்கலாம்.
* இதன்படி நீங்கள் செலுத்தும் வாக்கானது, Tender Vote ஆக கருதப்படும்.
* ஆனால் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்தே உங்கள் ஓட்டு எண்ணப்படும்.
* அதாவது, முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம், Tender Vote-ஐ விடக் குறைவாக இருந்தால் மட்டுமே உங்கள் வாக்கை தேர்தல் அதிகாரிகள் எண்ணுவார்கள்.
* எதிர்க்கட்சி தரப்பில் இருந்து முறைகேடு வழக்குப் பதிவு செய்தாலும், உங்களுடைய Tender Vote எண்ணப்படும்.
* வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஒரு தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய ஓட்டாக Tender Vote இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், நம் வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டார் என்று விட்டு விடாதீர்கள்.
பொதுவாக எல்லா தேர்தல்களிலும் கள்ள ஓட்டு பிரச்சினை ஏற்படுவது வழக்கமானது தான். சமீபத்தில் நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் கள்ள ஓட்டு பதிவு செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உங்களுடைய வாக்குரிமையை வேறொருவர் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் அனுமதிக்கக் கூடாது. ஆகையால் தவறாமல் வாக்களிப்பதை ஜனநாயக கடமையாக கருத வேண்டும்.
குறிப்பாக உங்களுடைய வாக்கை, வேறொருவர் செலுத்தியது உங்களுக்கு தெரிய வந்தால், நிச்சயமாக அதற்குரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுத்தாக வேண்டும்.