பூமியை 1.5 அடி உயரத்துக்கு மூடும் அளவுக்கு தங்கம்... எங்கே இருக்குனு தெரிஞ்சா உடனே கிளம்பிடுவீங்க!

1-5-feet-gold-layer
1-5-feet-gold-layer
Updated on

தங்கம் என்ற வார்த்தையை கேட்டதுமே அனைவரின் கண்களும் ஒரு நிமிடம் பளபளக்கும். ஆபரணங்கள் மீதும் முதலீடுகள் மீதும் நமக்கு இருக்கும் ஆர்வம் அளப்பரியது. ஆனால் நாம் இவ்வளவு நாட்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் தங்கம் பற்றிய ஒரு மிகப்பெரிய ரகசியத்தை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள். நமது கற்பனைக்கு கூட எட்டாத அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான தங்கப் புதையல் நமது பூமிக்குள்ளேயே பாதுகாப்பாக ஒளிந்திருக்கிறது. 

பூமியின் மையத்தில் பொக்கிஷம்!

நாம் இன்று கழுத்திலும் கைகளிலும் அணிந்திருக்கும் தங்கம் மொத்த தங்கத்தில் வெறும் 1 சதவீதம் மட்டுமே என்பது ஆச்சரியமான ஒரு உண்மை. மீதமுள்ள 99 சதவீத தங்கம் நமது பூமியின் மையப்பகுதியில் மிக ஆழமாக புதைந்து கிடக்கிறது. 

அங்கே இருக்கும் மொத்த தங்கத்தையும் எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிட்டால் ஒட்டுமொத்த உலகத்தையும் சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு ஒரு தங்கப் போர்வையால் மூடிவிட முடியும் என்று விஞ்ஞானிகள் அடித்துச் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு ஒரு மாபெரும் தங்க இருப்பு நமது காலடியில் பல ஆயிரம் கிலோமீட்டர் ஆழத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது.

தங்கம் எப்படி இவ்வளவு ஆழத்திற்கு சென்றது?

பூமி உருவான ஆரம்ப காலகட்டத்தில் அது ஒரு நெருப்பு குழம்பாகத்தான் இருந்தது. அப்போது இரும்பு மற்றும் தங்கம் போன்ற அதிக எடை கொண்ட தனிமங்கள் எல்லாம் ஈர்ப்பு விசை காரணமாக பூமியின் அடிப்பகுதியை நோக்கி வேகமாக இழுக்கப்பட்டன. நாளடைவில் பூமி குளிர்ந்த போது அந்த கனமான தனிமங்கள் அனைத்தும் பூமியின் மையத்திலேயே நிரந்தரமாக தங்கிவிட்டன. 

இதனால் பூமியின் மேற்புறத்தில் மிக மிகக் குறைந்த அளவிலான தங்கம் மட்டுமே எஞ்சியது. இதை நினைக்கும் போது இயற்கை எவ்வளவு புத்திசாலித்தனமாக தனது பொக்கிஷங்களை பாதுகாக்கிறது என்பதை நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

பூமியின் மேல் பகுதியில் தங்கம் இல்லை என்றால் நாம் இப்போது வெட்டி எடுக்கும் தங்கம் எங்கிருந்து வந்தது என்பது பலருக்கும் தோன்றும். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் சுற்றித் திரிந்த ஏராளமான விண்கற்கள் பூமியின் மீது பயங்கரமாக மோதின. அந்த விண்கற்கள் தங்களோடு சுமந்து வந்த தங்கம் தான் இப்போது பூமியின் மேற்பரப்பில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. 

இதையும் படியுங்கள்:
தங்கத்தின் மீதான மோகம் இன்று நேற்றல்ல... 6,500 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய வரலாறு!
1-5-feet-gold-layer

அந்த தங்கத்தை தான் நாம் இப்போது சுரங்கங்கள் அமைத்து ரொம்பவே கஷ்டப்பட்டு வெளியே எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆக மொத்தம் நாம் அணியும் தங்கம் எல்லாமே விண்வெளியில் இருந்து வந்த ஒரு ஏலியன் பொருள் என்று கூட சொல்லலாம்.

மையப்பகுதிக்கு செல்ல முடியுமா?

இவ்வளவு தங்கம் அடியில் இருக்கும் போது அதை ஏன் நாமே சென்று எடுத்து வரக்கூடாது என்று பலரும் யோசிக்கலாம். ஆனால் அது இப்போதைக்கு துளியும் சாத்தியமில்லாத ஒரு காரியம். பூமியின் மையப்பகுதியில் இருக்கும் வெப்பமும் அதீத அழுத்தமும் எந்த ஒரு மனிதனாலோ அல்லது இயந்திரத்தாலோ தாங்க முடியாத அளவுக்கு மிகக் கொடூரமானதாக இருக்கும். தற்போதுள்ள எந்த ஒரு அதிநவீன தொழில்நுட்பத்தாலும் அந்த ஆழத்தை எட்டிப் பிடிப்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு விஷயம்.

இதையும் படியுங்கள்:
தங்கத்தின் மேல் எழுந்த நகரம்: ஆப்பிரிக்காவின் இதயமான ஜோஹான்ஸ்பர்க்!
1-5-feet-gold-layer

தங்கத்தின் மீது மனிதர்களுக்கு இருக்கும் மோகம் பல போர்களுக்கும் பொருளாதார மாற்றங்களுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. அப்படி நாம் உயிரைக் கொடுத்து தேடும் ஒரு விலைமதிப்பற்ற பொருள் நமக்கு மிக அருகிலேயே பல ஆயிரம் கிலோமீட்டர் கீழே யாருக்கும் சொந்தமில்லாமல் அமைதியாக உறங்கிக் கிடக்கிறது. என்றாவது ஒரு நாள் மனிதனின் அறிவியல் வளர்ச்சி அந்த தங்கத்தை வெளியே கொண்டு வருமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com