கார்ப்பரேட் கம்பெனிகளை அலறவிடும் 2K கிட்ஸின் அதிரடி ட்ரெண்ட்... இதைப் பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Lily padding
Lily padding
Published on

ஒரு காலத்தில் அரசு வேலையோ அல்லது ஒரு நல்ல பிரைவேட் கம்பெனியில் வேலையோ கிடைத்துவிட்டால், ரிட்டையர் ஆகும் வரை அங்கேயே செட்டிலாகி விடுவதுதான் நமது முந்தைய தலைமுறையின் வழக்கம். ஆனால் இன்றைய 2K கிட்ஸ் எனப்படும் Gen Z இளைஞர்களின் வேலை பார்க்கும் ஸ்டைலே ரொம்பவும் வித்தியாசமாக இருக்கிறது. 

அவர்கள் ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்கி இருப்பதைக் கொஞ்சமும் விரும்புவதில்லை. கார்ப்பரேட் உலகை இப்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த புதிய வேலைவாய்ப்பு கலாச்சாரத்திற்குப் பெயர்தான் லில்லி பேடிங் (Lily Padding). குளத்தில் இருக்கும் தவளைகள் எப்படி ஒரு இலையில் இருந்து இன்னொரு இலைக்குத் தாவிச் செல்லுமோ அதே போன்ற ஒரு அதிரடியான வேலை மாற்ற உத்தியைத்தான் இப்போது இளைஞர்கள் கையில் எடுத்துள்ளார்கள். 

புதிய திறன்களை நோக்கிய பயணம்!

லில்லி பேடிங் என்பது ஒரு கம்பெனியில் இருந்து இன்னொரு கம்பெனிக்கு அல்லது ஒரு துறையில் இருந்து முற்றிலும் வேறொரு துறைக்கு அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருக்கும் ஒரு புதிய அணுகுமுறையாகும். இன்றைய நவீன காலத்தில் செயற்கை நுண்ணறிவு, புதிய டெக்னாலஜிகளின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது. நேற்றைய தொழில்நுட்பம் இன்றைக்குப் பழசாகி விடுகிறது.

இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டும் என்றால், தங்களின் திறமைகளைத் தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை இந்தத் தலைமுறை இளைஞர்கள் மிகத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்கள். ஒரு கம்பெனிக்கு விசுவாசமாக பல வருடங்கள் இருப்பதை விட, தங்களின் சொந்த அறிவு வளர்ச்சிக்கு விசுவாசமாக இருப்பதே சிறந்தது என அவர்கள் நினைக்கிறார்கள்.

இளைஞர்களுக்கான பலன்கள், வாய்ப்புகள்!

குறிப்பாக ஐடி துறை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இந்த ட்ரெண்ட் மிக வேகமாகப் பரவி வருகிறது. இப்படி அடிக்கடி வேலை மாறுவதால் இளைஞர்களுக்கு எக்கச்சக்கமான லாபங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு புதிய கம்பெனிக்குச் செல்லும்போதும் புதிய தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. அதோடு பலதரப்பட்ட மனிதர்களின் நட்பு கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தை வளர்ப்பில் அம்மாவுக்கும் மேலாக அக்கறை காட்டும் அதிசய அப்பா தவளைகள்!
Lily padding

எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் சம்பளம் மற்றும் மார்க்கெட் மதிப்பு பல மடங்கு உயர்கிறது. ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ப்ரோமோஷனுக்காகக் காத்திருக்காமல், தங்களுக்குத் தேவையான வாய்ப்புகளைத் தாங்களே தேடிச்சென்று அடைவதில் இவர்கள் ரொம்பவே உஷாராக செயல்படுகிறார்கள்.

நிறுவனங்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்!

இளைஞர்களுக்கு இது ஜாலியான விஷயமாக இருந்தாலும், ஐடி கம்பெனிகளுக்கும் நிர்வாகத்திற்கும் இது ஒரு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. பல ஆயிரங்களைச் செலவு செய்து ஒருவருக்கு ட்ரைனிங் கொடுத்து முடித்தவுடன், அவர் வேறு கம்பெனிக்குத் தாவி விடுவதால் நிறுவனங்களுக்குப் பெரிய பண நஷ்டம் ஏற்படுகிறது. 

மேலும், அடிக்கடி ஆட்கள் மாறுவதால் ஒரு நீண்ட கால ப்ராஜெக்ட்டை திட்டமிட்டு முடிப்பதில் பெரிய சிக்கல் எழுகிறது. ஒரு வேலையில் முழுமையான நிபுணத்துவம் பெறுவதற்கு முன்பாகவே இவர்கள் அடுத்த வேலைக்குச் செல்வதால், இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு மீது நிறுவனங்களுக்கு ஒரு சின்ன அதிருப்தி வரவும் இது காரணமாக அமைகிறது.

இதையும் படியுங்கள்:
வணிகப் பயணம்: கார்ப்பரேட் உலகின் ஆதாரம் - பயணத்தை திட்டமிடுவது எப்படி?
Lily padding

எது எப்படியோ, கார்ப்பரேட் உலகில் இனிமேல் ஏணிப்படி போல நேராகப் பயணிக்கும் கேரியர் சிஸ்டம் எல்லாம் மெல்ல மெல்ல அழிந்துவிடும். ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு வளைந்து நெளிந்து செல்லும் தன்மை கொண்டவர்களே எதிர்கால வேலையைத் தக்கவைத்துக் கொள்வார்கள். 

ஒரு பாதுகாப்பான வேலையைத் தேடுவதை விட, எந்த ஒரு சூழ்நிலையிலும் வேலை பார்க்கும் திறனை வளர்த்துக் கொள்வதுதான் இந்த லில்லி பேடிங் ட்ரெண்டின் முக்கிய நோக்கமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com