

அறிவியல் உண்மைகள்:
ரயில் தண்டவாளங்களில் இருக்கும் கற்களில் மறைந்திருக்கும் வலிமை:
ரயில் தண்டவாளங்களில் அல்லது அருகில் கிடக்கும் கூர்மையான கற்களை நாம் அனைவரும் பார்த்திருப்போம்; அதை 'தண்டவாளக் கற்கள்' (track ballast) என்பார்கள். பார்ப்பதற்கு ஏதோ ஜல்லி கற்கள்போல் தோன்றலாம், ஆனால் அது பார்க்கும் வேலையோ ‘வேற மாரியானது’. அவை இரயிலின் ஒட்டுமொத்த எடையைச் சமமாக நிலத்தில் பரப்புகின்றன, தேவையற்ற செடிகள் அல்லது களைகள் தண்டவாளத்தை சீர்குலைப்பதைத் தடுக்கின்றன.
இதோடு மழைநீரும் அதில் தேங்காமல் விரைவாக வடிந்து செல்லவும் அனுமதிக்கின்றன. இந்தக் கற்கள் இல்லையென்றால் தண்டவாளங்கள் ஓடும் ரயிலின் அழுத்தத்தினால் வளைந்து நெளிந்துவிடும். ஆக, இலட்சக்கணக்கான ரயில் பயணங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில், இந்த கற்கள் கூட அசாதாரணமான பொறுப்பைக் கொண்டுள்ளன.
தினமும் விழும் விண்வெளித் தூசிகள்:
ஒவ்வொரு நாளும், கிட்டத்தட்ட 100 டன்களுக்கும் அதிகமான(1லட்ச கிலோ) விண்வெளித் தூசிகள்; வால்மீன்கள்(comets), சிறுகோள்களிலிருந்து (asteroids) பூமியில் பொழிகிறது. இந்தத் தூசிகள் நம் கண்களுக்கு தெரியாது, ஆனால் அவை கூரைகள், கடல்கள் மற்றும் நமது ஆடைகளில் கூடப் படிகின்றன.
நாசா மற்றும் ஈஎஸ்ஏ-வின்(ESA) விஞ்ஞானிகள் இந்தத் தொடர்ச்சியான ‘விண்வெளி துகள் பொழிவை’ உறுதிப்படுத்தியுள்ளனர். கற்பனை செய்து பாருங்கள், உங்கள் வீட்டின் வெளியே உங்களை அறியாமலேயே ‘பூமியை விடப் பழமையான வான் பொருட்களை’ தினமும் பெருக்கி கொண்டிருக்கிறீர்கள்.
சூரியனை விடப் பழமையான நாம் பருகும் நீர்: நாம் குடிக்கும் நீர் பழமையானது மட்டுமல்ல, அது சூரியன் உருவாக்கத்திற்கு முன்னே உருவானது என்று சொன்னால் நம்புவீர்களா?. நமது கடல்களில் உள்ள ஹைட்ரஜன் (Hydrogen), பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு(100 கோடி ஆண்டுகள்) முன்பு விண்மீன்களில் காணப்படும் ஐஸ்கட்டிகளில் உருவானது என்று ஐசோடோப் ஆய்வுகள்(Isotope studies) காட்டுகின்றன. அதாவது, நாம் குடிக்கும் ஒவ்வொரு துளி நீரும், நம்மை ‘பிரபஞ்சம் பிறந்த’ காலத்துடன் நேரடியாக இணைக்கிறது. ஆக்சிஜனை வித்தியாசமாக சுவாசிக்கும் கார்கள்.
கார்களுக்கு எரிபொருள் தேவை என்பது நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் அவை ‘என்ஜின்குள் எரிய எவ்வளவு ஆக்சிஜனைப் பயன்படுத்துகின்றன என்பது தெரியுமா?. முழுத்திறனில் இயங்கும் ஒரு சாதாரண கார் இன்ஜின், ஒரு மனிதன் ஒரு நாள் முழுவதும் சுவாசிக்கும் காற்றைவிட, ஒரு கார் என்ஜின் அதைவிட அதிக காற்றை ஒரு நிமிடத்திற்கே பயன்படுத்திவிடும்.
முன்னர் கூறியதுபோல; எரிபொருளும், ஆக்சிஜனும் சமநிலையில் ஒன்று சேர்ந்து ‘வெடிப்பை உண்டாக்கி’ என்ஜின் மூலம் காருக்கு தேவையான ஆற்றலை தருகின்றன. இந்தத் துல்லியமான அளவு இல்லை என்றால், கார்கள் உடனடியாக ஓடாமல் நின்றுவிடும். கண்ணுக்குத் தெரியாத எடையைச் சுமக்கும் கப்பல்கள்.
இப்போதுள்ள நவீன சரக்குக் கப்பல்கள் மிகவும் பிரம்மாண்டமானவை; ஒரு நாளில் ‘ஒரு முழு நகரமும்’ பயன்படுத்தும் மொத்த நீரின் அளவைவிட, அதிகமான நீரை அவற்றால் உள்ளே சேமித்து வைத்துக்கொள்ள முடியும் என்றால் நம்புவீங்களா?. அந்த உண்மையான ஆச்சரியம் கப்பலின் சமநிலைத் தொட்டிகளில் (ballast tanks) தான் மறைந்துள்ளது.
இந்த வகையான கப்பல்கள் எந்நேரமும் முழுமையான எடையை சுமந்து கடலில் பயணிப்பதில்லை. இதனால் அவற்றின் சமநிலை(balance) கடல் அலைகள் அல்லது பலத்த காற்றால் பாதிப்படைந்து; நடுக்கடலில் பிரச்னையை சந்திக்கக் கூடும்.
இதை சமாளிக்கவே கப்பலின் அடியில் உள்ள பெரிய தொட்டியில் 50,000 முதல் 1,00,000 டன்கள்(10 கோடி கிலோ) வரை அல்லது அதற்கும் மேல் அளவு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்கின்றன. காரணம் சமநிலைத் தொட்டிகள் இல்லாமல், கப்பல்கள் ஆபத்தான முறையில் ஒருபுறம் சாய்ந்து, கவிழ்ந்து கூட விடலாம்.
இதுவும் ஒரு வகையில் பொறியியலின் அதிசயம்தான். இந்தியாவின் "ஏவுகணை நாயகன்" டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஒருமுறை கூறியது போல: ‘கனவுகள் என்பவை நாம் தூங்கும்போது வருவதல்ல; நம்மை தூங்க விடாமல் செய்வதே உண்மையான கனவுகள்.’ அதாவது கார்கள், விமானங்கள் மற்றும் கப்பல்கள் என்பவை வெறும் இயந்திரங்கள் மட்டுமல்ல; அவை பொறியியலால் அதிசயங்களாக உருவெடுத்த பல மனிதர்களின் கனவுகளாகும்.
நம் வயிற்றில் நடக்கும் மாற்றங்கள்:
உண்ணும் உணவைச் செரிமானம் செய்ய நம் வயிறு வலிமையான அமிலத்தைச் சுரக்கிறது என்பது நம்மில் சிலருக்கு தெரியும்; ஆனால் இந்த அமிலம் ஒரு உலோகத்தையே (metal) கரைக்கும் அளவுக்கு வீரியமிக்கது என்று தெரியுமா?. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த அமிலம் ஒருவரின் வயிற்றையே சேதப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, வயிறு தனது ‘உட்புற பகுதியை’ ஒவ்வொரு 3–4 நாட்களுக்கும் ஒருமுறை புதிதாக உருவாக்கிக்கொள்கிறது. இதன் மூலம் நம் உடலுக்குள் இருக்கும், செரிமானப் வேலையை பாதுகாப்பாகத் தொடர வயிறு தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது.
இதில் நாம் தெரிந்திருக்க வேண்டியது, இன்று உங்களிடம் உள்ள வயிறு கடந்த வாரம் இருந்த அதே வயிறு அல்ல ; அது version 2,3,4,5,6 etc என்று அப்டேட் ஆகி கொண்டிருக்கிறது.