

பூமியின் தென் துருவத்தில் அமைந்துள்ள பனி படர்ந்த கண்டமான அண்டார்டிகா, உலகின் மிகக் குளிரான, மனிதர்களின் நிரந்தர குடியிருப்புகள் இல்லாத ஒரே கண்டமாகும். எவ்வித மனித ஆக்கிரமிப்பும் இல்லாமல் இயற்கை எழில் மாறாமல் தூய்மையாகக் காட்சியளிப்பதால் இது ‘விஞ்ஞானிகளின் சொர்க்கம்’ என்று போற்றப்படுகிறது. விஞ்ஞானிகளின் சொர்க்கமாகக் கருதப்படுவது ஏனென்றால் அண்டார்டிகா கண்டம் அறிவியல் உலகிற்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதமாக் திகழ்கிறது.
பூமியின் காலநிலை வரலாறு: இங்குள்ள பல கிலோமீட்டர் ஆழமான பனிப்பாறைகளில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உள்ள காற்றுக் குமிழ்கள் சிறைபட்டுள்ளன. இவற்றை ஆராய்வதன் மூலம் பூமியின் பழங்காலக் காலநிலை மாற்றங்களைத் துல்லியமாக அறிய முடிகிறது.
விண்வெளி மற்றும் உயிரியல் ஆய்வுகள்: வெள்ளைப் பனிப் பரப்பில் விழும் விண்கற்களை எளிதில் கண்டு அறிய முடியும் என்பதாலும், மாசற்ற தெளிவான வானம் இருப்பதாலும் விண்வெளி ஆய்வுகளுக்கு இது ஏற்ற இடமாக உள்ளது. மேலும், கடும் குளிரைத்தாங்கி வாழும் பென்குயின்கள், சீல்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் தகவமைப்பு குறித்த ஆய்வுகளும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.
1959 அண்டார்டிகா ஒப்பந்தம் மற்றும் அதன் நோக்கங்கள்
பனிப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில், அண்டார்டிகா நிலப்பரப்பைக் கைப்பற்றுவதில் நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க 1959 டிசம்பர் 1 அன்று வாஷிங்டனில் 12 நாடுகளில் ‘அண்டார்டிகா ஒப்பந்தம்’ கையெழுத்திடப்பட்டு, 1961 ஜூன் 23-இல் நடைமுறைக்கு வந்தது. அண்டார்டிகாவை எவ்வித சர்வதேச மோதலுக்கும் இடமின்றி அமைதிப் பிராந்தியமாகப் பராமரித்தல், நாடுகளுக்கு இடையே அறிவியல் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் பூமியின் காலநிலையைத் தீர்மானிக்கும் அண்டார்டிகாவின் பனிச் சூழலைப் பாதுகாத்தல் ஆகியவையே இதன் தலையாய நோக்கங்களாகும்.
60° தெற்கு அட்சரேகைக்குத் தெற்கே உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தும் இந்த ஒப்பந்தம் கீழ்க்காணும் முக்கிய விதிகளைக் கொண்டுள்ளது.
1.ராணுவ நடவடிக்கைகளுக்குத் தடை: அண்டார்டிகாவில் ராணுவத் தளங்கள் அமைத்தல், ஆயுத சோதனைகள் மற்றும் ராணுவப் பயிற்சிகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. அறிவியல் பணிகளுக்கு மட்டுமே ராணுவ உதவிகளைப் பெற முடியும்.
2. அறிவியல் சுதந்திரம் மற்றும் தரவுப் பரிமாற்றம்: உறுப்பு நாடுகளின் விஞ்ஞானிகள் அண்டார்டிகாவின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக ஆய்வுகளை மேற்கொள்ளவும், ஆராய்ச்சி முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும்.
3. பிராந்திய உரிமை கோரல்கள் முடக்கம்: அண்டார்டிகா எந்தவொரு நாட்டிற்கும் சொந்தமானது அல்ல. ஒப்பந்தத்திற்கு முன்பு சில நாடுகள் கோரிய நில உரிமைகள் முடக்கப்பட்டுள்ளன. புதிய உரிமை கோரல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. அணுசக்தித் தடை மற்றும் கண்காணிப்பு: இங்கு அணு ஆயுத சோதனைகள் நடத்துவதும், கதிரியக்கக் கழிவுகளைக் கொட்டுவதும் தடை செய்யப் பட்டுள்ளது. மேலும் விதிகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உறுப்பு நாடுகள் மற்ற நாடுகளின் ஆராய்ச்சி நிலையங்களை முன்னறிவிப்பு இன்றிச் சோதனை இடவும் உரிமை உண்டு. மேலும் (இதனுடன் 1991- இல் இணைக்கப் பட்ட ‘மாட்ரிட் நெறிமுறை’ மூலம் 2048-ஆம் ஆண்டு வரை கனிம அகழ்வுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.)
இந்தியாவின் பங்களிப்பு: 1983-ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இணைந்த இந்தியா, அண்டார்டிகா ஆராய்ச்சிகளில் முன்னணி நாடுகளினல் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தியாவின் முதல் ஆராய்ச்சி நிலையமான தட்சிண கங்கோத்ரி (இப்போது செயல்பாட்டில் இல்லை) மற்றும் தற்போது செயல்பட்டு வரும் மைத்ரி, பாரதி ஆகிய நிலையங்கள் மூலம் இந்திய விஞ்ஞானிகள் காலநிலை மாற்றம் மற்றும் புவியியல் சார்ந்த முக்கிய ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அண்டார்டிகா என்பது வெறும் பனிக்கண்டம் மட்டும் அல்லாமல் அது உலக நாடுகளின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் சான்றாகத் திகழும் ஒரு சர்வதேச அறிவியல் ஆய்வகமாகும். 1959 அண்டார்டிகா ஒப்பந்தத்தின் விதி முறைகளைப் போற்றிப் பாதுகாப்பதன் மூலமே இந்த 'விஞ்ஞானிகளின் சொர்க்கத்தை' வருங்காலத் தலைமுறைக்கும் மாசுபடாமல் கொடுக்க முடியும்.