

இப்போதெல்லாம் எங்கு திரும்பினாலும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ பற்றிய பேச்சுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏஐ வந்ததால் பலரது வேலைகள் பறிபோகும் என பலரும் பயந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் எந்த மாதிரியான வேலைகளுக்கு எப்போது ஆபத்து வரும் என்பதை சரியாக கணிப்பது பொருளாதார வல்லுநர்களுக்கே பெரிய சவாலாக இருந்து வந்தது.
இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஆந்த்ரோபிக் (Anthropic) என்ற முன்னணி நிறுவனம் ஒரு பிரத்யேகமான சிஸ்டமை உருவாக்கியுள்ளது. வேலைவாய்ப்பின்மை தரவுகள் வருவதற்கு முன்பாகவே, எந்தெந்த வேலைகளை ஏஐ ஆக்கிரமிக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதுதான் இந்த சிஸ்டமின் முக்கிய நோக்கம். அந்த சுவாரஸ்யமான ரிப்போர்ட் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
எப்படி கணக்கிடுகிறார்கள்!
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்காக ஒரு புதிய அணுகுமுறையை கையாண்டுள்ளார்கள். ஒருவரின் பதவி பெயரை மட்டும் வைத்து அவருடைய வேலைக்கு ஆபத்து இருக்கிறதா என்பதை இவர்கள் முடிவு செய்வது கிடையாது. அவர் தினமும் அலுவலகத்தில் செய்யும் ஒவ்வொரு சின்னச் சின்ன வேலைகளையும் தனித்தனியாக பிரித்து பார்க்கிறார்கள். அந்த வேலைகளில் எத்தனை சதவீதத்தை ஒரு ஏஐ டூல் மூலம் சுலபமாக செய்து முடிக்க முடியும் என்பதை பொறுத்தே இந்த ஆபத்து மதிப்பீடு வழங்கப்படுகிறது. இது முந்தைய கணிப்புகளைவிட மிக மிக துல்லியமான ஒரு முறையாகப் பார்க்கப்படுகிறது.
எந்த வேலைகளுக்கு அதிக ஆபத்து!
இந்த ரிப்போர்ட்டின் முடிவுகள் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் களுக்குத்தான் முதல் ஆபத்து என சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் செய்யும் வேலைகளில் சுமார் எழுபத்தி ஐந்து சதவீதத்தை ஏஐ மிக சுலபமாக செய்து முடித்துவிடுகிறது. இவர்களைத் தவிர வாடிக்கையாளர் சேவை மையங்களில் வேலை பார்ப்பவர்கள், டேட்டா என்ட்ரி செய்பவர்கள் மற்றும் மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் பராமரிப்பவர்களுக்கும் சிக்கல் அதிகம். ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்யும் எந்த ஒரு அலுவலகப் பணியாக இருந்தாலும் அதை ஏஐ மிக எளிதாக மாற்றி அமைத்துவிடும்.
ஏஐ-யிடம் தப்பிக்கும் வேலைகள்!
அதே சமயம், நேரடியாக களத்தில் இறங்கி உடல் உழைப்பை கொடுக்கும் வேலைகளுக்கு இப்போதைக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என இந்த ஆய்வு அடித்துச் சொல்கிறது. உதாரணமாக, ஹோட்டல்களில் சமையல் செய்பவர்கள், பாத்திரங்களை கழுவுபவர்கள் மற்றும் நீச்சல் குளங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர் களின் வேலைகளை ஏஐ-யால் ஒருபோதும் செய்ய முடியாது. மனிதர்களின் நேரடி தொடுதலும், உடல் ரீதியான செயல்பாடுகளும் தேவைப்படும் எந்த ஒரு துறையாக இருந்தாலும் அவர்கள் தற்போதைக்கு நிம்மதி பெருமூச்சு விடலாம்.
வேலை பறிபோகும் அபாயம் தொடங்கிவிட்டதா?
இவ்வளவு ஆபத்துகள் இருந்தாலும், இப்போதே கொத்து கொத்தாக வேலைகள் பறிபோய்விட்டதா என்றால் அதுதான் இல்லை. ChatGPT வந்த பிறகு வேலை வாய்ப்பின்மை பெரிய அளவில் மோசமாகிவிடவில்லை. ஆனால் இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு அதிர்ச்சியான விஷயம் இருக்கிறது. புதிதாக வேலை தேடும் 22 முதல் 25 வயதுடைய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளன. நிறுவனங்கள் என்ட்ரி லெவல் வேலைகளுக்கு ஆட்களை எடுப்பதற்கு பதிலாக ஏஐ டூல்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் இதற்கான முக்கிய காரணம்.
எனவே, ஐடி மற்றும் அலுவலக பணிகளில் இருப்பவர்கள் தங்களைத் தொடர்ந்து அப்டேட் செய்துகொள்வது மட்டுமே இதிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியாகும். ஏஐ செய்ய முடியாத புதிய திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் இந்த தொழில்நுட்ப மாற்றத்தை நாம் மிக எளிதாக எதிர்கொள்ளலாம்.