

நவீன அறிவியல் யுகம் ஆரம்பமானதிலிருந்தே மனித குலத்திற்கு ஒரு உற்சாகமான தேடலும் ஆரம்பித்தது. நமது பூமியைத் தவிர இதர கிரகங்களில் நம்மைப் போன்ற உயிரினங்கள் உண்டா? மனிதரைப் போல நுணுக்கமான அறிவை அவர்கள் கொண்டிருக்கிறார்களா அல்லது அதற்கும் மேம்பட்ட நுண்ணறிவைக் கொண்டிருக்கிறார்களா அவர்கள் பூமிக்கு விஜயம் செய்வதுண்டா? இன்ன பிற கேள்விகள் மனிதர்களுக்கு எழுந்து கொண்டே இருக்கின்றன.
இதை அறிவியல் பூர்வமாக ஆராய ஒரு பெரும் திட்டம் தீட்டப்பட்டது. அதன் பெயர் தான் Search for Extraterrestrial Intelligence என்பதாகும். சுருக்கமாக அதை SETI என்று அழைக்கிறோம். 1960ம் ஆண்டு SETI ஃப்ராங்க் ட்ரேக் (Frank Drake) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு ரேடியோ டெலஸ்கோப்பை வைத்து நமக்கு அருகில் உள்ள இரண்டு நட்சத்திரங்களிலிருந்து வரும் சிக்னல்களை இது ஆராய ஆரம்பித்தது. இந்த டெலஸ்கோப் பலவிதமான அலை வரிசைகளை ஆராயும் திறன் கொண்டது.
கலிபோர்னியாவில் உள்ள 'ஆலன் டெலஸ்கோப் அர்ரே' என்ற ஒரு சாதனத்தையும் வைத்துக் கொண்டு வெளி கிரகங்களிலிருந்து ஏதேனும் சிக்னல்கள் வருகிறதா என்பது கண்காணிக்கப்பட்டது. ஏராளமான தரவுகள் வர ஆரம்பித்தன. இவை 'பிரபஞ்சத்தில் இயற்கையாக எழும் ஓசைகளா அல்லது நமக்கு வரும் சிக்னல்களா?' என்பது ஆராயப்பட்டது.
சேட்டி உலகெங்கும் உள்ள பல்வேறு ஆய்வு மையங்களுடன் தொடர்பு கொண்டது. உலகத்தின் ஆகப் பெரும் பணக்காரரான யூரி மில்னர் பல லட்சம் நட்சத்திரங்களை ஆராய பணத்தைத் தாராளமாக நன்கொடையாகக் கொடுத்து வழங்கினார். உலகத்தில் ஏராளமானோர் இதற்கு ஆதரவு தந்தனர். ஆனால், வழக்கம் போல சில சந்தேகப்பேர்வழிகள் இவ்வளவு பணத்தைத் தண்டமாகச் செலவழிக்கலாமா? என்று கேள்வி கேட்டனர்.
அப்படி வேற்று கிரக மனிதர்கள் இருந்தால், அவர்கள் இத்தனை காலமாக நம்முடன் ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்பது அவர்களின் ஒரு கேள்வி. வேற்றுகிரக மனிதர்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் ஏராளமான சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. முதலில் எதிர்மறை விமரிசனங்கள். அடுத்ததாக பூமியிலிருந்து அனுப்பப்படும் சாடலைட்டுகள், ரேடியோ ஒலிபரப்புகள் ஆகியவற்றிலிருந்து வரும் சிக்னல்கள் உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
சரி, இதுவரை நடத்திய ஆய்வில் சுவையான தொடர்பு ஏதேனும் உண்டா? உண்டு என்பதே பதில். 1977ம் ஆண்டு விவரிக்கவே முடியாத ஒரு சிக்னல் வந்தது. இது 72 விநாடிகளே நீடித்தது. இதன் மர்மம் இன்னும் விடுபட்டபாடில்லை.
வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஏராளமான திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் வந்துள்ளன; வந்து கொண்டே இருக்கின்றன.
ஸ்டார் ட்ரெக், தி பிக் பேங் தியரி உள்ளிட்டவை மிகவும் பிரபலமானவை. கார்ல் சகனின் 'காண்டாக்ட்' என்ற நாவல் உள்ளிட்ட பல நாவல்கள் மிகவும் பிரபலமானவை. ஆர்தர் க்ளார்க், ஐஸக் அஸிமாவ் ஆகியோரும் ஏராளமான நாவல்களைப் படைத்துள்ளனர். இப்போது சமீபத்தில் வெளியாகியுள்ள ஜான் கெர்ட்ஸ் எழுதியுள்ள ‘ரீ இன்வெண்டிங் சேட்டி’ (REINVENTING SETI) என்ற புத்தகம் புதிய முனைப்புகளைச் சுட்டிக் காட்டுகிறது.
2025 அக்டோபர் மாத ஆரம்பத்தில் செவ்வாய் கிரகத்திலிருந்து முந்நூறு லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ஒரு விண்பொருள் தென்பட்டது. அதன் பெயர் 3I ATLAS. இது பற்றிய பெரும் பரபரப்பு உலகில் ஏற்பட்டுள்ளது. இது ஒரு COMETதானா – வால்மீனா?அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு விண்பொருளா என்பது தான் அது.
ஏராளமான விஞ்ஞானிகள் இதில் ஈடுபட்டு இது ஒரு காமட் தான் என்பதற்கான ஆதாரங்களே அதிகம் உள்ளன என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால், ஹார்வர்ட் வானியல் விஞ்ஞானியான அவி லோப் இது செயற்கையான ஒரு விண்கலம் தான் என்பதற்கு 30 முதல் 40 சதவிகிதம் சாத்தியக்கூறு உள்ளது என்கிறார். இது தான் இன்றைய பரபரப்பான பேசு பொருளாக ஆகி இருக்கிறது.
ஆக விண்வெளியில் நம்மைப் போன்ற உயிரினங்கள் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை இன்னும் முற்றிலுமாகப் போகவில்லை. ஆராய்ச்சி தொடரும்.
எத்தனை டிரில்லியன் டாலர்கள் செலவானாலும் சரிதான் ஒரு கை பார்த்து விடுவோம்!