
நமது சூரியன் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் அது அனல் நிறைந்த வாயுக்கோளம் என்பதுதான். ஆனால், அந்த நெருப்புப் பந்தில் 'மழை' பெய்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம், இது உண்மை! பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்திய இந்த 'சூரிய மழை' (Solar or Coronal Rain) குறித்த மர்மத்திற்கு ஹவாய் பல்கலைக்கழக வானியல் ஆய்வு நிறுவன (University of Hawai - Institute for Astronomy) ஆய்வாளர்கள் விடையளித்துள்ளனர்.
சூரிய மழை என்றால் என்ன?
சூரியனில் பெய்யும் மழை என்பது பூமியில் நாம் காணும் நீர்த்துளிகள் அல்ல. இது, சூரியனின் வெளிப்புற அடுக்கான கரோனாவில் (Corona) ஏற்படும் ஒரு நிகழ்வு. கரோனா பகுதி பல மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட பிளாஸ்மாவால் (Plasma) ஆனது. இந்த பிளாஸ்மா அதாவது அதிவெப்ப மின்னூட்டப்பட்ட வாயு ஒரு கட்டத்தில் குளிர்ச்சியடைந்து அடர்த்தியான கட்டிகளாக (Dense Clumps) மாறுகிறது.
இந்த குளிர்ச்சியான பிளாஸ்மா கட்டிகள், சூரியனின் சக்திவாய்ந்த காந்தப்புலக் கோடுகளில் ஒடுங்கி, மீண்டும் சூரியனின் மேற்பரப்பை நோக்கி விழுகின்றன. இந்த வீழ்ச்சிதான் 'ஒளிவட்ட மழை' அல்லது 'கரோனல் மழை' எனப்படுகிறது. இந்த பிளாஸ்மா கட்டிகள் சில நேரங்களில் பூமியின் அளவை விடப் பல மடங்கு பெரியதாக இருக்கும்.
இந்த மழை எப்படி இவ்வளவு வேகமாக உருவாகிறது என்பதுதான் விஞ்ஞானிகளின் பல ஆண்டு கால கேள்வியாக இருந்தது. முந்தைய மாதிரிகள், இத்தகைய குளிர்ச்சி மற்றும் ஒடுக்கம் ஏற்பட பல மணிநேரங்கள் அல்லது நாட்கள் ஆகும் என்று கருதின. ஆனால், சூரியப் பிழம்புகள் (Solar Flares) வெடிக்கும்போது, இந்த மழை சில நிமிடங்களிலேயே தோன்றி மறைந்துவிடும்.
கண்டுபிடிப்பு என்ன?
ஹவாய் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அடங்கிய குழு, சூரியனின் கரோனாவில் உள்ள தனிமங்களின் அளவில் ஏற்படும் மாற்றம் தான் இதற்குக் காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.
கரோனாவின் அடிப்படை தனிமக் கலவை (Elemental Abundances) நிலையானது என்ற பழைய அனுமானம் தவறு என்பதை நிரூபித்துள்ளனர். குறிப்பாக, இரும்பு போன்ற கனமான தனிமங்களின் விகிதம் மாறும் போது, பிளாஸ்மா மிக விரைவாகக் குளிர்ந்து, மழையாக ஒடுங்குகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு, சூரியனின் வளிமண்டலம் காலப்போக்கில் மாறுபடுகிறது என்ற புதிய உண்மையை நிலைநாட்டுகிறது.
இதன் முக்கியத்துவம் என்ன?
இந்த ஆராய்ச்சி வெறும் வானியல் தகவல் மட்டுமல்ல, இது விண்வெளி வானிலையை (Space Weather) நாம் புரிந்துகொள்வதற்கும் கணிக்கவும் உதவுகிறது. சூரியப் புயல்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் பூமியில் உள்ள மின் கட்டமைப்புகள், தகவல் தொடர்பு அமைப்புகளைப் பாதிக்கலாம்.
இந்த புதிய கண்டுபிடிப்பு, சூரியப் பிழம்புகளின் போது சூரியன் எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைத் துல்லியமாக உருவகப்படுத்த உதவும். இதன் மூலம், விண்வெளி வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்தி, பூமிக்கான அச்சுறுத்தல்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். சூரியனின் ஆற்றல் எப்படி நகர்கிறது என்பதையும், அதன் வெளிப்புற அடுக்குகளின் செயல்முறைகளையும் மறுபரிசீலனை செய்ய இந்த ஆய்வு வழிவகுத்துள்ளது.
சூரியனின் இந்த அதிசயமான 'நெருப்பு மழை' பற்றிய கண்டுபிடிப்பு வானியல் ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்.