

அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) என்றாலே, நம் நினைவுக்கு வருவது மாயமாய் மறைந்த கப்பல்கள், திசைமாறிய விமானங்கள் மற்றும் விசித்திரமான மர்மக் கதைகள்தான். இதற்குப் பின்னால், ஏலியன்கள், கடலுக்குள் மூழ்கிய அட்லாண்டிஸ் நகரம் எனப் பல கற்பனைக் கதைகள் பல தசாப்தங்களாக உலவி வந்தன.
ஆனால் இப்போது, விஞ்ஞானிகள் இந்த தீவின் ஒரு பிரம்மாண்டமான புவியியல் உண்மையை கண்டறிந்துள்ளனர். சமீபத்திய ஆய்வின்படி, பெர்முடா தீவானது 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைக் குழம்புகளால் (Magma) உருவான ஒரு மாபெரும் பாறை அமைப்பின் மீது மிதந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யேல் பல்கலைக்கழகம் (Yale University) மற்றும் கார்னகி அறிவியல் நிறுவனத்தைச் (Carnegie Institution for Science) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த வியத்தகு கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். பெர்முடாவின் மேலோட்டிற்கு (Crust) கீழே, பூமியின் கவசப் பகுதிக்கும் (Mantle) கடற்பரப்பிற்கும் இடையே சுமார் 12 மைல் தடிமனுள்ள எரிமலைப் பாறை அடுக்கு ஒன்று உள்ளது. இது சுமார் 30 முதல் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.
பூமிக்கு அடியில் இருந்து பொங்கி வந்த சூடான எரிமலைக் குழம்பு, குளிர்ந்து, சுற்றியுள்ள மற்ற பாறைகளை விட இலகுவான ஒரு பாறை அமைப்பாக மாறியுள்ளது.
இந்த விசித்திரப் பாறை அடுக்கு, சுற்றியுள்ள மற்ற பாறைகளை விட 1.5% அடர்த்தி குறைவானது. அதாவது, எடைக் குறைவானது. இதனால், இதனால், அட்லாண்டிக் கடலில் ஒரு மாபெரும் 'மிதவை படகு' போல இது செயல்படுகிறது. இந்த மிதப்புத்தன்மை காரணமாகவே, பெர்முடா தீவு கடலின் ஆழமான தளத்தில் இருந்து சுமார் 2,000 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது.
உலகப் புகழ்பெற்ற ஹவாய் தீவுகளைப் போல இல்லாமல், பெர்முடா முற்றிலும் விசித்திரமான முறையில் உருவான ஒரு புவியியல் அதிசயம் என்று ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.
இதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் கடலுக்கு அடியில் துளையிடவில்லை. அதற்குப் பதிலாக, கடந்த 20 ஆண்டுகளில் பெர்முடா தீவில் பதிவான 400-க்கும் மேற்பட்ட தொலைதூரப் பூகம்பங்களின் அதிர்வுகளை ஆராய்ந்தனர்.
பூமியின் வெவ்வேறு பாறை அடுக்குகளில் இந்த பூகம்ப அலைகள் பயணிக்கும் வேகத்தைக் கணக்கிட்டு, பூமிக்கு அடியில் 25 மைல் ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதை ஒரு தத்ரூபமான வரைபடமாக மாற்றினர். அப்போதுதான், மற்ற கடல் தீவுகளை விட இரண்டு மடங்கு தடிமனான எரிமலைப் பாறை அடுக்கு பெர்முடாவின் அடியில் இருப்பது தெரியவந்தது.
பெர்முடா பகுதியில் காந்த விசை மற்றும் ஈர்ப்பு விசையில் ஏற்படும் குளறுபடிகளுக்கு இந்தப் பாறைகளே முக்கியக் காரணம்.
இந்த தீவின் அடியில் உள்ள பழங்கால எரிமலைப் பாறைகளில் இரும்புச்சத்து மிக அதிகமாக உள்ளது. இது அந்தப் பகுதியில் வழக்கத்திற்கு மாறான வலுவான காந்த அலைகளை உருவாக்குகிறது. இதன் காரணமாகவே, அந்தப் வழியாகச் சென்ற பழைய கப்பல்களின் திசைகாட்டிகள் செயலிழந்து, மாலுமிகள் திசைமாறிப் போயுள்ளனர்.
அதோடு, அடியில் உள்ள பாறைகள் எடை குறைவாக இருப்பதால், அங்கு பூமியின் ஈர்ப்பு விசை சற்றே பலவீனமாக உள்ளது. இது கடல் மட்டத்தில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
1945-ல் ஐந்து அமெரிக்கப் போர் விமானங்கள் மற்றும் அதைத் தேடிச் சென்ற மீட்பு விமானம் மாயமானது முதல் பெர்முடா முக்கோணம் ஒரு பயங்கரமான இடமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இந்த புதிய பாறை அடுக்கு, பெர்முடா முக்கோணத்தில் நடந்த விபத்துகளுக்கோ அல்லது மனிதர்கள் காணாமல் போனதற்கோ காரணம் அல்ல எனத் தெளிவாகக் கூறுகிறார்கள்.
அமெரிக்கக் கடலோரக் காவல்படை போன்ற அமைப்புகள் ஏற்கனவே நிரூபித்தபடி, கடுமையான புயல்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் மனிதர்களின் தவறுகளே விபத்துகளுக்கு உண்மையான காரணங்கள். மற்ற கடல் பகுதிகளுடன் ஒப்பிடும்போது இங்கு விபத்துக்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை என்பதே உண்மை.
இருப்பினும், பல தலைமுறைகளாக நிலவி வந்த விசித்திரமான இயற்கை நிகழ்வுக்குப் பின்னால் உள்ள புவியியல் உண்மையை இந்த ஆய்வு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த மர்மத்தின் அடுத்தகட்ட ஆய்விற்காக, விஞ்ஞானிகள் குழு விரைவில் பெர்முடா செல்லத் திட்டமிட்டுள்ளனர்.