

வாகனங்களின் சீரான ஓட்டத்திற்கு டயர்கள் முக்கிய அங்கமாகும். ஆனால் அவை பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. சரியான டயர் வகையைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானதாகவும் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தும் வகையிலும் இருக்கும். சந்தையில் பலவகையான டயர்கள் கிடைக்கின்றன.
அவற்றில் நம் பைக்கிற்க்கு பொருத்தமான டயரை தேர்ந்தெடுப்பது அவசியம். டயரின் அளவு, காற்றழுத்தம் மற்றும் அதன் கட்டமைப்பு ஆகியவை மேடு பள்ளங்களில் நம் பைக் எவ்வளவு சீராக செல்கிறது என்பதையும், வளைவுகளில் திரும்பும் பொழுது அல்லது அதிவேகத்தில் செல்லும்பொழுது எவ்வளவு துரிதமாக செயல்படுகிறது என்பதையும் பாதிக்கின்றன.
பைக்கின் பாதுகாப்பு மற்றும் சிறந்த மைலேஜுக்கு டியூப்லெஸ் டயர்கள் மற்றும் ரேடியல் டயர்கள் மிகவும் ஏற்றவை. இவை பஞ்சராகும் பொழுது காற்று உடனடியாக வெளியேறுவதைத் தடுத்து விபத்துகளை குறைப்பதுடன், குறைந்த உருட்டல் எதிர்ப்பினால் (Low Rolling Resistance) எரிபொருள் சிக்கனத்தையும் தருகின்றன. சரியான கிரிப் கொண்ட டயர்கள் வளைவுகளிலும் ஈரமான சாலைகளிலும் பாதுகாப்பை வழங்குகின்றன.
டயர் வகைகள்:
ரேடியல் டயர்கள்:
அதிக வேகத்திலும் வளைவுகளில் திரும்பும் பொழுது டயரின் உள் நார்கள் செங்குத்தாக அமைக்கப் பட்டிருப்பதால், வளைவுகளில் (Cornering) சிறந்த பிடிப்பையும் (Grip), அதிவேகப் பயணத்தில் நிலைத்தன்மையையும் தருகிறது. டயர் அதிகம் சூடாகாமல் இருப்பதால் நீண்ட தூரப் பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும், நீடித்த உழைப்பைத் தருவதாகவும் இருக்கிறது. மேலும் இவை சீராகத் தேய்வதால் நீண்ட ஆயுளையும் மைலேஜையும் வழங்குகின்றன. நெடுஞ்சாலை பயணங்கள் மற்றும் 150ccக்கு மேற்பட்ட பைக்குகளுக்கு ஏற்றது.
டியூப்லெஸ் டயர்கள்:
உள்ளே தனியாக டியூப் எதுவும் இல்லாததால் ஆணி குத்தினாலும் காற்று மெதுவாகவே வெளியேறும் என்பதால் பைக் நிலைதடுமாறாது. எடை குறைவாக இருப்பதால் பைக்கின் மைலேஜ் அதிகரிக்கும். தினசரி நகர்ப்புறப் பயணங்கள் மற்றும் அலாய் வீல் கொண்ட அனைத்து பைக்குகளுக்கும் ஏற்றது.
டியூப் டயர்கள்:
டயர் உறைக்குள் காற்றைத் தேக்கி வைக்கும் ஒரு உள் குழாயைக் கொண்ட பாரம்பரிய டயர்கள் இவை. டியூப் டயர்களில் உள்குழாய் காற்றடைக்கப்பட்டு, டயரையும் விளிம்பையும் அழுத்தி டயரை அதன் வடிவத்தில் நிலைநிறுத்துகிறது. இது பொதுவாக விலை குறைவானது மற்றும் மாற்றுவதும் எளிதானது.
கரடு முரடான சாலைகளில் போகும்பொழுது அதிர்வுகளை தாங்குவதற்கு உதவியாக இருக்கும். ஆனால் ஆணி போன்ற கூர்மையான பொருட்கள் குத்தினால் காற்று மொத்தமாக வெளியேறி விபத்துகளை ஏற்படுத்தலாம்.
கம்யூட்டர் / ஸ்ட்ரீட் டயர்கள் (Commuter / Street Tyres):
பயாஸ் பிளை டயர்கள் (Bias-Ply Tyres) கரடுமுரடான சாலைகள் மற்றும் அதிக எடை ஏற்றிச்செல்லும் தினசரி பயன்பாட்டு பைக்குகளுக்கு (Commuter bikes) ஏற்றவை. இவற்றின் பக்கவாட்டுப் பகுதிகள் தடிமனாக இருப்பதால் பள்ளங்களில் இறங்கும் பொழுது எளிதில் சேதமடையாது. தினசரிப் பயணங்களுக்காக உருவாக்கப்பட்ட இவை கடினமான ரப்பர் கலவையைக் கொண்டிருப்பதால் அதிக மைலேஜ் மற்றும் நீண்ட உழைப்பைத் தருகின்றன.
ஆல்-வெதர் டிரெட் டயர்கள் (All-Weather Tread Tyres):
வெயில், மழை மற்றும் பனி என ஆண்டு முழுவதும் அனைத்து வகையான வானிலை சூழ்நிலைகளிலும் சிறப்பாகச் செயல்படக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட டயர்களாகும். டயரில் உள்ள ஆழமான பள்ளங்கள் (Grooves) மழைக்காலங்களில் ஈரமான சாலையில் நீரை வெளியேற்றி பைக் வழுக்குவதைத் தடுக்கின்றன.
ஹார்ட் காம்பவுண்ட் (Hard Compound):
கடினமான ரப்பர் கலவையால் உருவாக்கப்படும் டயர்கள் இவை. நீண்டகால உழைப்பு மற்றும் அதிக மைலேஜ் வேண்டும் என்பவர்கள் ஹார்ட் காம்பவுண்ட் டயர்களை தேர்வு செய்யவேண்டும். இவை மெதுவாகவே தேய்மானம் அடையும். இதனால் டயர் நீண்ட நாட்கள் உழைக்கும். சாஃப்ட் காம்பவுணட் (Soft Compound) டயர்கள் சிறந்த கிரிப் (grip) தருமே தவிர மைலேஜ் தராது. சீக்கிரமே தேய்ந்துவிடும்.
த்ரெட் பேட்டர்ன் (Thread Pattern/கோடுகள்):
சாலையைத் தொடும் டயரின் வெளிப்புற ரப்பர் பகுதியில் செதுக்கப்பட்டிருக்கும் பள்ளங்கள், கோடுகள் மற்றும் பிடிமான வடிவமைப்புகளைக் கொண்ட டயர்கள் இவை. தினமும் அலுவலகம் செல்ல அல்லது சிட்டிக்குள் ஓட்டுகிறீர்கள் என்றால், தண்ணீரை வெளியேற்றும் கோடுகள் (Water-channelling grooves) கொண்ட நடுத்தர பேட்டர்ன் டயர்களை தேர்வு செய்யலாம். இது மழைக்காலத்திலும் வழுக்காமல் நல்ல கிரிப் மற்றும் மைலேஜ் தரும்.
ஆஃப்-ரோடு பைக் டயர்கள்:
ஆஃப்-ரோடு பைக் டயர்கள் என்பது சேறு, மண், மணல், பாறைகள் மற்றும் கரடு முரடான பாதைகளில் ஓட்டுவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட டயர்கள் ஆகும். சாதாரண சாலை டயர்களை விட இதில் பெரிய மற்றும் ஆழமான பிடிமானக் கட்டிகள் (Knobs) இருக்கும். இவை தரைப்பகுதியில் ஆழமாகப் பதிந்து வழுக்காமல் பிடித்துக்கொள்ள உதவுகின்றன.
ட்ரெட் கட்டிகளுக்கு இடையே அதிக இடைவெளி இருப்பதால் டயர்களில் சேறு ஒட்டிக்கொள்ளாமல் எளிதில் வெளியேறிவிடும். ஆஃப்-ரோடு (Off-road) அல்லது கரடு முரடான பாதைகளுக்கு பிளாக் பேட்டர்ன் (Block pattern) டயர்கள் தேவைப்படும். ஆனால் இவை மைலேஜைக் குறைக்கும்.
டயர் தேர்ந்தெடுக்கும்பொழுது கவனிக்க வேண்டியவை:
பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தைத் தொடர்ந்து பராமரிப்பது டயரின் ஆயுளை 20% வரை அதிகரிப்பதுடன், மைலேஜ் குறையாமலும் சறுக்காமலும் பாதுகாக்கும். வாரம் ஒருமுறை பரிந்துரைக்கப்பட்ட அளவில் காற்று நிரப்புவது மைலேஜை அதிகரித்து டயர் வெடிப்பதைத் தடுக்கும்.
மழைக்காலங்களில் தண்ணீர் எளிதில் வெளியேறும் வகையிலான பள்ளங்கள் (grooves) கொண்ட டயர்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
பைக் தயாரிப்பாளர் பரிந்துரைத்த அளவிலான டயர்களை மட்டுமே பயன்படுத்துவது இன்ஜின் செயல்திறனுக்கும் பாதுகாப்பிற்கும் நல்லது. அதிக அகலமான டயர்களைப் போட்டால் மைலேஜ் குறையும்.