

வாகனங்கள் வெவ்வேறு நிறங்களில் காணப்பட்டாலும் வாகனங்களின் டயர்கள் மட்டும் கருப்பு நிறத்தில் (கருப்பு டயர்) இருப்பதற்கு முக்கிய காரணம், அவற்றை தயாரிக்கும் பொழுது சேர்க்கப்படும் 'கார்பன் பிளாக்' (Carbon Black) என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுவதால் கருப்பு நிறத்தில் உள்ளன.
தூய்மையான இயற்கை ரப்பர் பால் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆரம்ப காலத்தில் (1895 வாக்கில்) வெள்ளை நிற ரப்பரைக் கொண்டு தான் டயர்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் வெள்ளை நிற டயர்களால் பல்வேறு பின்னடைவுகள், பிரச்சனைகள் ஏற்பட்டன. அவை அதிக வெப்பத்தைத் தாங்காமலும், சீக்கிரமே தேய்மானம் அடைந்தும், நீண்ட நாட்களுக்கு உழைக்காமலும் போயின. போதாக்குறைக்கு கிரிப்பிங் திறனிலும் குறை இருந்தது. இவற்றின் வாழ்நாள் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
அதாவது 100 கிலோ மீட்டர்கள் முதல் 200 கிலோமீட்டர்கள் வரை மட்டுமே அவற்றின் ஆயுட்காலம் இருந்தது. ஆனால் அந்தத் தூய ரப்பர் மட்டுமே கொண்டு டயர் தயாரித்தால் அது சீக்கிரமே கிழிந்துவிடும்.
அதிக நாள் உழைக்காது என்பதால் ரப்பருடன் கார்பன் பிளாக் எனப்படும் கரி போன்ற ஒரு வேதிப்பொருள் கலக்கும் பொழுது அது டயருக்கு அதிக வலிமை, உறுதி மற்றும் நீண்ட உழைப்புத் திறனைத்தருகிறது.
சாலையில் வண்டி செல்லும்போது ஏற்படும் உராய்வால் டயர் சூடாகும். கார்பன் பிளாக் அந்த வெப்பத்தை டயர் முழுவதும் சீராகப் பரப்பி டயர் வெடிப்பதைத் தவிர்க்கிறது. சூரியனின் புற ஊதாக் கதிர்கள் மற்றும் ஆக்ஸிஜனால் ரப்பர் சிதைவடையாமல் கார்பன் பிளாக் ஒரு பாதுகாப்புக் கவசமாக செயல்படுகிறது.
டயர்கள் வேறு கலரில் ஏன் தயாரிக்கப்படுவதில்லை? என்பதற்கான முக்கிய காரணங்கள் உள்ளன.
1960-களில் சில நிறுவனங்கள், உதாரணத்திற்கு 'Goodyear' இளஞ்சிவப்பு மற்றும் நீல நிற டயர்களைப் பரிசோதனை முயற்சியாகத் தயாரித்தன. ஆனால் கார்பன் பிளாக் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அந்த வண்ண டயர்கள் போதிய உறுதி இல்லாமல் விரைவாக சேதம் அடைந்தன.
டயருக்குத் தேவையான நெகழ்ச்சி, வலிமை மற்றும் வெப்பத்தைத் தாங்கும் திறன் கருப்பு நிறத்தை உண்டாக்கும் கார்பன் பிளாக்கால் மட்டுமே கிடைக்கின்றன. வேறு சாயங்களைப் பயன்படுத்தினால் ரப்பரின் கட்டமைப்பும் தரமும் குறைந்துவிடும். எனவே டயர்கள் அழகுக்காக அல்லாமல், வாகன பாதுகாப்பு மற்றும் டயரின் ஆயுளைக் கருத்தில் கொண்டு கருப்பு நிறமாகவே தயாரிக்கப்படுகின்றன.
அதிக வலிமை மற்றும் ஆயுள்:
கார்பன் பிளாக் ரப்பருடன் மூலக்கூறு அளவில் பிணைந்து, டயருக்கு அசாத்தியமான இழுவிசை வலிமையையும் கடினத்தன்மையையும் அளிக்கிறது. இது டயரின் ஆயுளைப் பல மடங்கு அதிகரிக்கிறது.
வெப்பத்தைக் கடத்தும் திறன்:
வாகனம் ஓடும் போது டயருக்கும் சாலைக்கும் இடையே ஏற்படும் ஊராய்வினால் அதிக வெப்பம் உருவாகும். கார்பன் பிளாக் இந்த வெப்பத்தை டயரின் மற்ற பகுதிகளுக்குக் கடத்தி டயர் உருகிவிடாமல் பாதுகாக்கிறது.
புற ஊதா கதிர் (UV) பாதுகாப்பு:
சூரியனிலிருந்து வரும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களை கார்பன் பிளாக் உறிஞ்சிக் கொள்கிறது. இது ரப்பர் விரிசல் அடைவதையும், எளிதில் உடைந்து போவதையும் தடுக்கிறது.
பராமரிப்பு மற்றும் தோற்றம்:
சாலைகளில் இருக்கும் அழுக்கு, சகதி, ஆயில் மற்றும் கறைகளை கருப்பு நிறம் எளிதாக மறைத்துவிடும். இதுவே வேறு நிறமாக இருந்தால் டயர்கள் எப்போதுமே அசுத்தமாக காட்சியளிக்கும்.
இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பல வண்ணங்களில் டயர்களைத் தயாரிக்க முடியும். ஆனால் கார்பன் பிளாக்கிற்கு பதிலாக வேறு நிறமிகளைப் பயன்படுத்தினால் டயரின் வலிமை, வெப்பத் தடுப்புத் திறன் மற்றும் பாதுகாப்பு வெகுவாகக் குறைந்துவிடும். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மற்றும் டயரின் நீடித்த உழைப்பை உறுதி செய்யவே உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் தொடர்ந்து கருப்பு நிற டயர்களையே தயாரித்து வருகின்றன.