

நம் பைக்கின் பாதுகாப்பு மற்றும் மைலேஜிற்கு ஏற்ற சரியான டயரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம் டயர் வாங்கும்போது கவனிக்கவேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. கார்களும் பைக்குகளும் தற்போது முன் எப்போதையும் விட அதிக தொழில்நுட்பத்துடன் வருகின்றன.
வாகனங்கள் வசதியாகவும், பாதுகாப்பாகவும், சிறந்த மைலேஜ் தருவதாகவும் இருப்பதற்கு நிறுவனங்களும் தொடர்ந்து புதிய வசதிகளை செய்து வருகின்றன. இருப்பினும் டயர்களைப் பொறுத்தவரை சில வாகனங்களில் டியூப் டயர்களும் சிலவற்றில் டியூப்லெஸ் டயர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டிற்கும் உள்ள பிளஸ் மைனஸ்களை தெரிந்து வைத்துக் கொள்வது சிறப்பு.
டியூப் டயர்:
டியூப் டயர்கள் மற்றும் அதன் டியூப்கள் வாங்குவதற்கு ஆரம்ப விலை குறைவானது. டியூப் டயரை வாங்குவதற்கும், டயர் மாற்றுவதற்கும் குறைவான செலவே ஆகும். கிராமப்புற மற்றும் ஆஃப்-ரோடு சாலைகளில் கம்பி சக்கரங்களுடன் (Spoke Wheels) பயன்படுத்த இதுவே சிறந்தது.
பஞ்சரானால் அல்லது ஆணி குத்தினால் காற்று உடனடியாக வெளியேறி வண்டி கட்டுப்பாட்டை இழக்க வாய்ப்புகள் அதிகம். இதனால் சமநிலை தவறி விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பஞ்சர் பார்க்க வேண்டுமென்றால் சக்கரத்தை கழற்றி உள்ளே இருக்கும் டியூப்பை வெளியே எடுத்து ஒட்டவேண்டும். இதனால் வேலை அதிகம்; நேரமும் எடுக்கும். டியூப் இருப்பதால் எடை அதிகம். இதனால் மைலேஜ் சற்று குறையும். உராய்வு காரணமாக டயருக்குள் வெப்பம் அதிகமாகும். இதனால் டயர் சீக்கிரம் தேய்ந்துவிடும் வாய்ப்புள்ளது.
டியூப்லெஸ் டயர்:
இப்பொழுது வருகிற பெரும்பாலான புது பைக்குகளில் டியூப்லெஸ் டயர்கள்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த டயர்களில் டியூப் இருக்காது. டயர் நேரடியாக ரிம் கூட டைட்டாகப் பொருந்தி காற்று வெளியேறாமல் தடுக்கும். டியூப் இல்லாததால் இந்த டயர்கள் எடை குறைவாக இருக்கும். இதனால் இன்ஜின் மேல் அழுத்தம் குறைந்து பைக்கின் மைலேஜ் அதிகமாகும். நீண்ட தூரம் அல்லது அதிவேகப் பயணங்களின் பொழுது டயரில் அதிக வெப்பம் உருவாகாது.
இதன் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் ரோட்டில் ஆணியோ அல்லது கூர்மையான ஏதேனும் பொருட்களோ குத்தினாலும் காற்று உடனடியாக திடீரென வெளியேறாது. மெதுவாகத்தான் வெளியேறும். இதனால் அதிக வேகத்தில் செல்லும்பொழுது வண்டியின் சமநிலை (Balance) தவறுவதில்லை.
எனவே டயர் பஞ்சர் ஆனாலும் சில கிலோமீட்டர்கள் வரை ஓட்டிச் சென்று மெக்கானிக்கிடம் காட்ட முடியும். இதனால் காற்று இறங்கிய பைக்கை தள்ளிக் கொண்டுபோக வேண்டிய அவசியம் இல்லை.
பைக் பஞ்சர் ஆனாலும் வண்டியின் பேலன்ஸ் போகாது என்பதால் பேலன்ஸ் தவறி விபத்துகள் ஏற்படும் ஆபத்துகள் இதில் கிடையாது. முக்கியமாக டியூப்லெஸ் டயரில் பஞ்சர் என்றால் சக்கரத்தை முழுமையாகக் கழட்டி சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சக்கரத்தை கழட்டாமலேயே வெளியில் இருந்து ஸ்ட்ரிப் (Strip) வைத்து வெறும் இரண்டே நிமிடத்தில் மெக்கானிக் பஞ்சர் கிட் கொண்டு இதனை சரி செய்து விடலாம். பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் டியூப்லெஸ் டயர்கள் தான் சிறந்தது.
ஏன் டியூப்லெஸ் டயர் பெஸ்ட்?
அதிவேகமாகச் சொல்லும் பொழுது பஞ்சரானாலும், வாகனம் நிலை தடுமாறாமல் பாதுகாப்பாக நிறுத்த டியூப்லெஸ் டயர் உதவுகிறது. இதில் பஞ்சர் பார்ப்பதும் எளிது. பஞ்சர் கிட் இருந்தால் நாமே கூட பஞ்சரை சரி செய்துகொள்ளலாம். நீண்ட தூரப் பயணங்களின் போது திடீரென பஞ்சர் ஆனாலும் அடுத்த பஞ்சர் கடை வரும் வரை பயமின்றி வாகனத்தை ஓட்டிச் செல்லலாம்.
தள்ளிக்கொண்டு செல்லவேண்டிய அவசியம் இருக்காது. எனவே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு டியூப்லெஸ் டயர்தான் மிகச்சிறந்த தேர்வாகும். முக்கியமாக காற்று குறைந்த நிலையிலும் டயரின் உள்பகுதி ரிம்மை (Rim) சேதப்படுத்தாமல் பாதுகாக்கிறது. ஆனால் நம் வாகனத்தின் ரிம் (Alloy wheel) அல்லது தகுதியான (Steel wheel) டியூப்லெஸ் டயருக்குப் பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும். எனவே தற்கால நவீன கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதி அடிப்படையில் டியூப்லெஸ் டயர்களே சிறந்த தேர்வாகும்.