ஏசி மெக்கானிக் தேவையில்லை! வீட்டிலேயே ஏசியை சர்வீஸ் செய்வது எப்படி?

ac-maintenance-tips
ac-maintenance-tips
Published on

கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. இவ்வேளையில் ஏசி இல்லாமல் தூக்கம் இல்லை என்ற நிலையாகிவிட்டது. அதனால் ஏசி பராமரிப்பு என்பது மிகவும் அவசியம். ஏசி யில் உள்ள பில்டர்கள் காயல்களை நீண்ட நாட்கள் சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் அதில் பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் ஏற்பட்டு உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதோடு மின் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆகவே சிறிய சர்வீசுக்குக்கூட மெக்கானிக்கை கூப்பிடாமல் வீட்டிலேயே சில பராமரிப்பு முறைகளை எளிதாக கையாளலாம். அந்த வகையில் எளிய முறையில் வீட்டிலேயே ஏசியை பராமரிக்கக்கூடிய 5 முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

காற்று வடிகட்டி சுத்தம்

ஏசியிலுள்ள காற்று வடிகட்டிகளைதான் முதலில் சுத்தம் செய்ய வேண்டும். ஏசியின் முன்புற பேனலை மெதுவாக தூக்கினால் பில்டர்கள் வலைபோல இருக்கும். அந்த பில்டர்களை வெளியே எடுத்து அதில் படிந்திருக்கும் தூசி படலத்தை ஓடும் தண்ணீரிலும், அதிகமாக அழுக்குகள் சேர்ந்திருந்தால் திரவ சோப்பை பயன்படுத்தியும் சுத்தம் செய்து காயவைக்க வேண்டும். ஏனெனில் ஈரமான பில்டர்கள் துர்நாற்றம் ஏற்படுத்தும். ஆகவே ஏசியில் பொருத்தும் முன்பாக காயவைத்து பொருத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நம்பி ஏமாந்த கஸ்டமர்ஸ்... பாதுகாப்புனு வாய் கிழிஞ்ச கம்பெனியோட மொத்த சீக்ரெட்டும் சந்தி சிரிக்குது!
ac-maintenance-tips

குளிரூட்டும் சுருள் சுத்தம்

பில்டர்களை எடுத்த பிறகு மெல்லிய அலுமினிய வரிசைகள் போல இருப்பவைகள்தான் குளிரூட்டும் சுருள்கள் (எவாபரேட் காயில்கள்) ஆகும். அவற்றை பல் துலக்கும் பிரஸ், மென்மையான பெயிண்ட் பிரஷ், வாக்யூம் கிளீனர் அல்லது ப்ளோயர் கொண்டு சுருள்கள் வளைந்து போகாமல் கவனமாக தூசியை நீக்கி சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் கம்ப்ரஸரின் மேல் சுமை குறைந்து ஏசி விரைவாகவும், சரியாகவும் குளிர்விக்க சுருள்கள் சுத்தமாக இருப்பது முக்கியம்.

வடிகால் குழாய் சுத்தம்

ஏசி ஓடும்போது அறைக்குள் தண்ணீர் கசியும் பிரச்னையை தீர்க்க வடிகால் குழாயை சுத்தப்படுத்துவது மிகவும் முக்கியம். குப்பை, தூசி, அடைப்பு போன்றவை தண்ணீர் வெளியேறும் குழாயில் இருக்கிறதா என அவ்வப்போது சரி பார்க்க வேண்டும். ஸ்பிலிட் ஏசியாக இருந்தால் வெளிப்புற யூனிட்டில் உள்ள கண்டன்ஸர் பேனை துணி அல்லது பிரஷ் கொண்டு சுத்தம் செய்வது, நல்ல காற்றோட்டத்திற்கு வழி வகுப்பதோடு எளிதாக வெப்பத்தை வெளியேற்றும்.

ஸ்டெபிலைசர் வயர் சரிபார்ப்பு

நீண்ட நாட்கள் ஏசி ஆன் செய்யாமல் இருந்தால் எலிகள் வந்து வயர்களை சில நேரங்களில் கடித்து விடுவதோடு, சில இணைப்புகள் தளர்ந்து இருக்கும் என்பதால் ஸ்டெபிலைசர் மற்றும் வயர்கள் என அனைத்து கனெக்சன்களையும் சரி பார்க்க வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் சரியாக இருந்தால்தான் சுத்தம் செய்த ஃபில்டர்களை பொருத்தி பேனலை மூடவேண்டும். அனைத்தையும் பொருத்திய பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் ஏசியை ஓடவிட்டு அறைக்குள் நன்றாக குளிர்ச்சி இருக்கிறதா என கவனிப்பது முக்கியம்.

இதையும் படியுங்கள்:
நமது காலடியில் இருக்கும் தார் சாலைகள் உருவான சுவாரசிய வரலாறு!
ac-maintenance-tips

வீட்டிலேயே மேற்கொள்ளக் கூடிய எளிய ஐந்து பராமரிப்பு முறைகளை மேற்கொண்ட பிறகு சுத்தமான காற்று, நல்ல குளிர்ச்சி, மின்சார செலவு குறைவு போன்ற நன்மைகள் ஏற்படும். அறை குளிர்ச்சி அடையவில்லை என்றால் ஆழமாக சுத்தம் செய்ய மெக்கானிக்கை அழைப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com