

ஒலிக்கு சக்தி உண்டு (Sound wave experiments) என்று முதன் முதலில் விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தவர் எர்னஸ்ட் கால்ட்னி என்ற ஜெர்மானியர் ஆவார்.
இளமையில் வெளியில் எங்கும் போகக் கூடாது என்ற கட்டுப்பாடான வாழ்க்கையால், கால்ட்னியின் மனம் வீட்டில் இருந்தபடியே ஆராய்ச்சி செய்வதில் ஈடுபட்டது.
இதன் விளைவாக, பல்வேறு தகடுகள் ஏன் பல விதமாக ஓசைகளை எழுப்புகின்றன என்ற கேள்வியைத் தனக்குள் கேட்டுக் கொண்டார். அப்படி இவர் கண்டுபிடித்தது தான் கால்ட்னி தகடுகள் என்ற பெயரைப் பெற்றன.
Acoustics என்ற ஒலி இயலின் தந்தை இவரே என அறிவியல் உலகம் இவரைப் பாராட்டுகிறது. இவரது அதிசயமான கண்டுபிடிப்பைக் கேள்விப்பட்ட மா மன்னன் நெப்போலியன் இவரைத் தனது அரண்மனைக்கு அழைத்தான்.
1809ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு நாள் மாலையில் பாரிஸில் உள்ள டுயிலரி (TUILERIE PALACE) அரண்மனைக்குள் நுழைந்தார் கால்ட்னி. பெரிய அறையில் நின்று கொண்டிருந்த நெப்போலியன் இவரை வருக என்று அழைத்தார். அவர் அருகில் அவரது அழகிய மனைவி ஜோஸபைனும் தாயார் லடிடியாவும் இன்னும் பல அதிகாரிகளும் இருந்தனர்.
கால்ட்னி, தான் கண்டுபிடித்து அமைத்திருந்த க்ளேவிசிலிண்டர் (clavicylinder) என்ற கருவியை இசைத்துக் காண்பித்தார். அதிலிருந்து பல விதமான ஒலி அலைகள் எழுந்தன.
பின்னர் அவர் ஒலி அலைகள் எழுப்பும் ஆச்சரியகரமான வடிவங்களைக் காண்பிக்க ஆரம்பித்தார். ஒரு தகடில் நுண்மையான மணல் துகள் பரப்பப்பட்டிருக்க அந்த தகடின் ஓரத்தில் வயலின் கம்பி போன்ற கம்பியால் அவர் பல விதமான ஓசைகளை எழுப்ப, ஒவ்வொரு ஓசைக்கும், தகட்டின் மேல் இருந்த மணல் துகள்கள் ஒவ்வொரு வடிவத்தை உருவாக்கின.
நெப்போலியன் ஒரு கணித ஆர்வலர். எந்தக் கேள்வியை எப்படிக் கேட்க வேண்டும் என்று நன்கு அறிந்தவர். ஏராளமான கேள்விகளை அவர் கேட்க, கால்ட்னியும் தக்க விடைகளை அளித்து வந்தார்.
அடுத்த நாள் காலை கால்ட்னிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு நெப்போலியின் 6000 பிராங்குகளை வழங்கினார். கால்ட்னி கண்டுபிடிப்புகளை எல்லாம் ஒரு புத்தகமாக அவர் எழுதினார்.
1809ம் ஆண்டு நவம்பர் மாதம் புத்தகம் முற்றுப் பெற்றது. அதை அவர் நெப்போலியனுக்கு சமர்ப்பிக்க எண்ணினார். பிரபல விஞ்ஞானியான லாப்லேஸ், அதை சமர்ப்பிப்பதற்கு முன்னர் அவர் நெப்போலியனிடம் அனுமதி பெற்றால் நல்லது என்றார். ஆனால் நெப்போலியனைப் பார்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.
ஆகவே “இந்த ஆய்வின் அடிப்படை சோதனைகளைப் பார்த்த மன்னர் நெப்போலியன் இந்த சமர்ப்பணத்தை ஏற்று அருள்வார்” என்று சாமர்த்தியமாக சமர்ப்பண உரையை எழுதி புத்தகத்தை அவர் வெளியிட்டார்.
மூன்று கருவிகளை உருவாக்கி, உலகெங்கும் பயணம் செய்து, தனது ஆய்வு முடிவுகளை கல்லூரிகளிலும் பொது மேடைகளிலும் கூறியதோடு அவற்றை நிரூபித்தும் காட்டி வந்தார்.
1756ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி விட்டன்பர்க்கில் பிறந்த கால்ட்னி தனது 70வது வயதில் 1827ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி மறைந்தார். இவரைத் தொடர்ந்து இன்று வரை ஒலி பற்றிய ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
Cymatics என்ற புதுத்துறை உருவாகி ஒலியினால் ஏற்படும் அற்புதங்களை இப்போது விளக்கி வருகிறது.
இந்த கண்டுபிடிப்பினால் தான், 'ஓம்' என்ற ஒலியின் அதிசய விளைவுகள் பற்றி அறிவியல் பூர்வமாக இப்போது நாம் அறிகிறோம்; வியப்படைகிறோம்.