

உலகின் பழங்காலத்தில் மிகப் பெரும் விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் ஆர்க்கிமிடிஸ். சிசிலி தீவில் இருந்த சிராகுஸ் நகரில் அவர் வாழ்ந்தார். அப்போது மன்னனாக இருந்த இரண்டாம் ஹிரான் ஒரு தங்க மகுடத்தை இறைவனுக்குச் சமர்ப்பிக்க நினைத்தான். குறிப்பிட்ட காலத்தில் தங்க மகுடத்தை ஒரு பொற்கொல்லன் உருவாக்கிக் கொண்டு வந்து அரசனிடம் கொடுத்தான்.
தான் கொடுத்த தங்கம் முழுவதும் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? என்ற சந்தேகம் மன்னனின் மனதில் எழ அவன் ஆர்க்கிமிடீஸிடம் அதைப் பற்றிக் கேட்டான். என்ன பதில் சொல்வது? என்று திகைத்தார் ஆர்க்கிமிடீஸ். மறுநாள் இதை யோசித்தவாறே தனது குளியலறைத் தொட்டியில் தொபீரென்று குதித்த ஆர்க்கிமிடீஸ் பளிச்சென்று தண்ணீர் வெளியேறுவதைப் பார்த்தார்.
"யுரேகா! (Eureka)" என்று அவர் கத்தினார், குதூகலப்பட்டார். அது தான் 'ஆஹா தருணம்!' என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் அடர்த்தி (density) வித்தியாசமானது என்பது அவர் மனதில் தோன்ற மிதக்கும் தன்மை (BUOYANCY) பற்றிய கொள்கையைக் கண்டுபிடித்தார்.
மகுடத்தில் உள்ள தங்கம் அரசன் கொடுத்த தங்கத்தின் அளவை விடக் கூடுதலாக இருந்தால் அது சரிதான்! ஆனால், அதில் வெள்ளி கலக்கப்பட்டிருந்தாலோ தாமிரம் கலக்கப்பட்டிருந்தாலோ அதன் எடை குறைவாக இருக்கும்.
மகுடத்தில் தங்கத்துடன் இதர உலோகம் கலக்கப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்தார் ஆர்க்கிமிடீஸ். அரசன் பிரமித்தான்.
பின்னால் வந்த பிரபல விஞ்ஞானியான ஐஸக் நியூட்டன் ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்து ஒரு ஆஹா தருணத்தை அடைந்தார். புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.
இதே போல விஞ்ஞானிகளுக்கு மட்டும் தான் ஆஹா தருணம் அமையும் என்பதில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்னை எழும் போது ஆஹா தருணம் அமையவே செய்கிறது. அதை அவர்கள் கண்டுகொள்வதில்லை அவ்வளவு தான்! ஆஹா தருணம் பற்றிய நூற்றுக் கணக்கான ஆராய்ச்சிகள் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைப் பற்றிய புத்தகங்களும் ஏராளமாக வெளி வந்துள்ளன.
பிரச்னைகளால் ஒருவர் அளவிற்கு அதிகமாக அலட்டிக் கொள்ளக் கூடாது என்பது தான் அறிவியல் அறிஞர்கள் தரும் ஒரு புத்திமதி! நல்ல ஓய்வான மனதில் ஆஹா தருணம் ஏற்படுகிறது. அப்போது மூளையில் டோபமைன் ஒரு குதி குதிக்கிறது. நல்ல பாஸிடிவ் மூட் அதாவது ஆக்கபூர்வமான மன நிலை இருக்கும் போதும் ஆஹா தருணம் அமைகிறது.
உளவியலாளரான அமோரி டேனக் (Amory Danek) என்ற பெண்மணி பல ஆண்டுகளாக இது பற்றி ஆராய்ந்து ஏராளமான உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளார். இவர் ஜெர்மனியில் மூனிச் டெக்னிகல் பல்கலைக் கழகத்தில் மூத்த ஆய்வாளராகப் பணி புரிபவர்.
ஓய்வான நிலையில் தான் ஆஹா தருணம் வரும் என்பது அவரது முதல் கண்டுபிடிப்பு. ஏராளமான ஆஹா தருணங்களைப் பெற்றவர்கள் அது கிடைத்த தருணம் 3 B’s என்கிறார்கள். அதாவது BED, BATH (Shower) and BUS என்கின்றனர் அவர்கள்.
படுக்கையில் படுத்திருக்கும் போதோ அல்லது குளியலறையில் குளிக்கும் போதோ அல்லது பஸ்ஸில் செல்லும் போதோ விடை காண முடியாமல் தவித்த தங்களுக்கு ஆஹா தருணம் அமைந்ததாக அவர்கள் கூறுகின்றனர். ஒரு பிரச்னை பற்றி ஆராயாமல் இருப்பவர்களுக்கு, ஆஹா தருணம் அமையவே அமையாது என்பதும் உண்மை தான்!
ஆகவே, ஆஹா தருணம் பெற விரும்புபவர்கள் பிரச்னைகளை கையில் எடுத்துக் கொண்டு சிந்தனை செய்யலாம். அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ஓய்வாக இருக்கலாம்! அப்போது வரும் ஆஹா தருணம்!