

Google alternative search engines: இணையத்தில் எதைத் தேட வேண்டும் என்றாலும் நாம் அனைவரும் உடனடியாகப் பயன்படுத்துவது கூகுள் வலைத்தளத்தைத்தான். ஆனால் சமீபகாலமாக இதில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் மிக அதிகமாகிவிட்டது. நாம் ஒரு சிறிய தகவலைத் தேடினால் கூட, பக்கம் பக்கமாக ஏஐ விடைகளை நம் முகத்தில் தூக்கி வீசுகிறது. இதனுடன் தேவையற்ற விளம்பரங்களும் சேர்ந்து நமது பிரவுசிங் அனுபவத்தைக் கடுமையாகச் சோதிக்கின்றன.
இதுபோக நமது தனிப்பட்ட டேட்டாக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவது பலருக்கும் மிகப்பெரிய கவலையை அளிக்கிறது. இப்படிப்பட்ட சிக்கல்களிலிருந்து முழுமையாக விடுபட்டு, மிகவும் எளிமையான, பாதுகாப்பான ஒரு தேடலை விரும்பும் நபர்களுக்காகவே இணையத்தில் சில அருமையான மாற்று வழிகள் உள்ளன.
DuckDuckGo மற்றும் Brave!
தனி உரிமை மற்றும் டேட்டா பாதுகாப்பிற்கு எப்போதுமே டக்டக்கோ (DuckDuckGo) தளம் தான் இணையவாசிகளின் முதல் தேர்வாக இருந்து வருகிறது. இவர்கள் நமது தேடல் வரலாற்றை எந்த காரணத்திற்காகவும் கண்காணிப்பது கிடையாது. மேலும் நாம் தேடும் வார்த்தைக்கு ஏற்ற விளம்பரங்கள் மட்டுமே திரையில் வருமே தவிர, நமது தனிப்பட்ட தகவல்களைத் திருடி அதன் மூலம் விளம்பரம் காட்டமாட்டார்கள். இதில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் பதில்களை நம்மால் முற்றிலும் ஆஃப் செய்து வைக்க முடியும்.
அடுத்ததாக பிரேவ் சர்ச் (Brave Search) தளமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் உள்ள Goggles என்ற சிறப்பு அம்சம் மூலம், நமக்குத் தேவையான தொழில்நுட்ப வெப்சைட்களை மட்டுமே ரிசல்ட்டில் வரும்படி எளிதாகக் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். ஏஐ அம்சங்கள் தேவையில்லை என்றால் அதையும் அணைத்து வைக்கும் வசதி இதில் உள்ளது.
Startpage மற்றும் Startpage!
உங்களுக்கு கூகுள் காட்டும் துல்லியமான ரிசல்ட்கள் அப்படியே வேண்டும், ஆனால் அவர்கள் உங்களை எந்த வகையிலும் கண்காணிக்கக் கூடாது என நீங்கள் நினைத்தால் ஸ்டார்ட்பேஜ் (Startpage) உங்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். இது கூகுளிடம் இருந்து தகவல்களை நேரடியாக வாங்கும் ஒரு நடுத்தரக் கருவி போலச் செயல்பட்டு, உங்களின் உண்மையான அடையாளத்தை முற்றிலுமாக மறைத்துவிடுகிறது.
எகோசியா (Ecosia), இயற்கையை நேசிப்பவர்களுக்கான சற்றே வித்தியாசமான ஒரு தளமாகும். இவர்கள் தங்களுக்கு வரும் விளம்பர வருமானத்தை வைத்து உலகம் முழுவதும் அதிக அளவிலான மரங்களை நட்டு இயற்கையைக் காத்து வருகிறார்கள். இவர்கள் குரோமியம் அடிப்படையிலான ஒரு பிரவுசரை வழங்குவதால், உங்களின் பழைய எக்ஸ்டென்ஷன்களை அப்படியே இதில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Kagi மற்றும் குவான்ட் Qwant!
விளம்பரங்களே கண்ணில் படக்கூடாது என நினைப்பவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான் காகி (Kagi) சர்ச் என்ஜின். இது மற்ற தளங்களைப் போல இலவசம் கிடையாது, இது ஒரு கட்டணச் சேவையாகும். இதில் எந்த ஒரு ஸ்பான்சர் விளம்பரங்களோ அல்லது எரிச்சலூட்டும் ஏஐ அம்சங்களோ நிச்சயம் இருக்காது. Lenses எனப்படும் பிரத்யேக ஃபில்டர்களைப் பயன்படுத்தி கல்வி மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளை மட்டும் நாம் தனியாகத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குவான்ட் (Qwant) தளமும் டேட்டா பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. செய்திகள், சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையப்பக்கங்கள் என அனைத்தையும் இது தனித்தனியாகப் பிரித்துக் காட்டுகிறது.
இனி உங்களின் இணையத் தேடல் நூறு சதவீதம் பாதுகாப்பாகவும், தேவையற்ற விளம்பரத் தொல்லைகள் இன்றியும் இருக்க வேண்டும் என நீங்கள் மனதார விரும்பினால், மேலே கூறப்பட்டுள்ள இந்த மாற்று தளங்களை ஒருமுறையாவது கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள். இது உங்களின் தினசரி இணையப் பயன்பாட்டை முற்றிலும் புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லும்.