வெளியூர் பயணங்களின்போது ஹோட்டல் அறைகள், உடை மாற்றும் அறைகள் அல்லது Airbnb தங்கும் இடங்களில் தங்குவது இன்று மிகச் சாதாரணமாகிவிட்டது. ஆனால், அந்த அறைக்குள் நுழைந்தவுடன் பல பயணிகளின் மனதில் எழும் முதல் அச்சம் தனிப்பட்ட பாதுகாப்புதான். எங்காவது ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்குமா என்ற கவலை பலரை நிம்மதியாகத் தங்க விடுவதில்லை.
அலாரம் கடிகாரம், Smoke Detector, சார்ஜிங் அடாப்டர், பொம்மைகள் போன்ற அன்றாடப் பொருட்களுக்குள் இவை மிக நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இவற்றைக் கண்டறிய விலை உயர்ந்த கருவிகள் எதுவும் தேவையில்லை, உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனும், சற்றுக் கூர்மையான கவனமும் மட்டுமே போதும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
அறையை முதலில் கண்களால் ஆராயுங்கள்!
அறைக்குள் நுழைந்து உடைமைகளை வைத்தவுடன், முதல் 2 நிமிடங்களை அறையைச் சுற்றிப் பார்ப்பதற்கு ஒதுக்குங்கள். Smoke Detector-கள், சுவர் கடிகாரங்கள், மின்சார பிளக் பாயிண்டுகள், சுவர் அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவற்றின் அமைப்பைக் கூர்ந்து கவனிக்கவும்.
அறையில் உள்ள மற்ற பொருட்களை விட ஏதேனும் ஒரு பொருள் மட்டும் புதிதாகத் தெரிந்தாலோ, வழக்கத்திற்கு மாறான இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலோ அதனை அருகில் சென்று சோதிப்பது அவசியம். குறிப்பாகப் படுக்கை மற்றும் குளியலறைப் பகுதியை நோக்கி நேரடியாகத் திருப்பி வைக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், செட்-டாப் பாக்ஸ்கள், மேஜை விளக்குகள் மற்றும் சிறிய துளைகளைக் கவனமாகப் பாருங்கள்.
டார்ச் லைட் சோதனை!
அறையின் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, ஜன்னல் திரைச்சீலைகளை மூடி அறையை முழுமையாக இருட்டாக்குங்கள். பின்னர் உங்கள் மொபைல் ஃபிளாஷ்லைட் அல்லது டார்ச் லைட்டை மெதுவாக அறை முழுவதும் வெவ்வேறு கோணங்களில் அடித்துப் பாருங்கள். மறைத்து வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்கள் ஒளியைப் பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை.
எனவே, வெளிச்சம் படும்போது அவை மெல்லிய ஒளியை அல்லது சிறிய பிரதிபலிப்பைக் காட்டும். கண்ணாடிகள், காற்றோட்டத் துளைகள், அறையின் மூலைகள், புகை உணர்விகள், கடிகாரங்கள் மற்றும் புகைப்படச் சட்டங்கள் ஆகியவற்றை அவசரப்படாமல் மெதுவாக பரிசோதிக்கவும்.
மொபைல் கேமரா மூலம்!
இன்னும் கூடுதல் உறுதிக்கு உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவைப் பயன்படுத்தலாம். இரவு நேரப் பதிவிற்காகப் பல சிறிய கேமராக்கள் Infrared ஒளியைப் பயன்படுத்துகின்றன. இது மனிதக் கண்களுக்குத் தெரியாது. அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு, மொபைல் கேமராவைத் திறந்து சந்தேகத்திற்குரிய இடங்களை நோக்கிக் காட்டுங்கள்.
திரையில் சிறிய ஒளிரும் புள்ளிகள் தெரிந்தால், அங்கே அகச்சிவப்பு ஒளி மூலம் செயல்படும் கருவி இருக்க வாய்ப்புள்ளது. சில நவீன போன்களின் பின்புற கேமராவில் ஐஆர் ஃபில்டர் இருப்பதால், முன்புற செல்ஃபி கேமராவைப் பயன்படுத்துவது கூடுதல் பலன் தரும். உங்கள் போன் கேமரா அகச்சிவப்பு ஒளியைக் காட்டுகிறதா என்பதை வீட்டு டிவி ரிமோட்டின் பட்டனை அழுத்தி முன்பே சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்.
கண்ணாடி மற்றும் வைஃபை!
அறையில் உள்ள கண்ணாடியில் உங்கள் விரல் நகத்தை நேராக வையுங்கள். விரலுக்கும் அதன் பிம்பத்திற்கும் இடையே சிறிய இடைவெளி தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி. இடைவெளி இல்லாமல் இரண்டும் ஒட்டிக்கொண்டிருந்தால், அது இருவழிக் கண்ணாடியாக இருக்கலாம்.
ஹோட்டல் வைஃபை இணைப்பில் சந்தேகத்திற்குரிய பெயர்களுடன் அறிமுகமில்லாத சாதனங்கள் இணைந்திருக்கிறதா என்பதையும் நெட்வொர்க் ஸ்கேனர் செயலிகள் மூலம் சரிபார்க்கலாம். சந்தேகத்திற்குரிய சார்ஜர் அல்லது கடிகாரத்தை மின்சார இணைப்பிலிருந்து அகற்றி வைப்பதோ, தடித்த துணியால் மூடி வைப்பதோ உடனடிப் பாதுகாப்பைத் தரும்.
ஒருவேளை அறையில் ரகசிய கேமரா இருப்பதை உறுதிசெய்தால், பதற்றமடைந்து அதைத் தொட்டு ஆதாரங்களை அழிக்காதீர்கள். உடனடியாக அதனைப் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரமாகப் பதிவு செய்துவிட்டு, அறையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறி காவல்துறைக்குத் தகவல் தெரிவிப்பதே புத்திசாலித்தனமான நடவடிக்கை.
நம்பகமான விடுதிகளைத் தேர்ந்தெடுப்பதும், தங்கும் அறையில் எடுக்கும் இந்த 5 நிமிட முன்னெச்சரிக்கையும் உங்கள் குடும்ப பயணத்தை எப்போதும் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்.