

இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போனில் நாம் எடுக்கும் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டால் செய்யும் விதவிதமான ஆப்ஸ்கள் என அனைத்தும் சேர்ந்து, ஒரு கட்டத்தில் மெமரி ஃபுல் என்ற ஒரு பயங்கரமான மெசேஜை திரையில் காட்டும். அந்த நேரத்தில் புது புகைப்படம் எடுக்கவும் முடியாது, அவசரமாக ஒரு ஆப்பை டவுன்லோட் செய்யவும் முடியாது.
செல்போன் ஹேங் ஆகி நம்மை பாடாய்ப்படுத்திவிடும். இதற்காக உடனே அதிக விலை கொடுத்து புது போன் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது போனில் இருக்கும் சில தேவையற்ற குப்பைகளை சரியாக சுத்தம் செய்தாலே பல ஜிபி அளவிலான ஸ்பேஸை நம்மால் சுலபமாக உருவாக்க முடியும். அதை எப்படி செய்வது என்று இப்போது இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பயன்படுத்தாத ஆப்ஸ்களை தூக்கிடுங்க!
நம்மில் பலருக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எப்போதாவது ஒருமுறை தேவைப்படும் என்று நினைத்து ஏகப்பட்ட ஆப்ஸ்களை ஆர்வமாக இன்ஸ்டால் செய்து அப்படியே விட்டுவிடுவோம். பல மாதங்களாக ஓபன் கூட செய்து பார்க்காத ஆப்ஸ்கள் உங்கள் போனின் பேட்டரியையும் மெமரியையும் சைலண்டாக காலி செய்து கொண்டிருக்கும்.
எனவே, உங்கள் மொபைலை ஒருமுறை முழுமையாக செக் செய்து, நீண்ட நாட்களாக பயன்படுத்தாத ஆப்ஸ்களை தயவு தாட்சண்யமே இல்லாமல் அன்இன்ஸ்டால் செய்து விடுங்கள்.
2. வாட்ஸ்அப் செட்டிங்ஸில் மாற்றம்!
நமது போன் ஸ்டோரேஜை அதிக அளவில் ஆக்கிரமிப்பது வாட்ஸ்அப் தான். குரூப்களில் வரும் குட் மார்னிங் மெசேஜ்கள், தேவையில்லாத பெரிய பெரிய வீடியோக்கள் என எல்லாமே தானாக டவுன்லோட் ஆகி கேலரியில் தேங்கிவிடும். இதை தடுக்க, வாட்ஸ்அப் செட்டிங்ஸ் சென்று ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை உடனடியாக ஆஃப் செய்து வையுங்கள்.
உங்களுக்கு தேவையான புகைப்படங்களை மட்டும் நீங்களே நேரடியாக கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்வது பல ஜிபி ஸ்பேஸை மிச்சப்படுத்தும்.
3. கிளவுட் ஸ்டோரேஜ்!
நமது பழைய நினைவுகளை அழிப்பது கஷ்டமான ஒரு விஷயம். அதற்காக எல்லா போட்டோக்களையும் போனிலேயே வைத்திருக்க முடியாது. இதற்கு கூகுள் போட்டோஸ் அல்லது கூகுள் டிரைவ் போன்ற கிளவுட் ஸ்டோரேஜ் ஆப்ஸ்கள் பயனுள்ளதாக இருக்கும். உங்களின் முக்கியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கிளவுடில் பேக்கப் எடுத்து விட்டு, லோக்கல் போன் ஸ்டோரேஜில் இருந்து அவற்றை அழித்து விடுங்கள்.
இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் நாளை வேறு எந்த புது போன் வாங்கினாலும் அந்த பைல்களை நாம் சுலபமாக திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.
4. கேச் (Cache) டேட்டாவை கிளியர் பண்ணுங்க!
நாம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது, அவை வேகமாக லோட் ஆக வேண்டும் என்பதற்காக டெம்பரரியாக சில டேட்டாக்களை போனில் சேமித்து வைக்கும். இதற்கு கேச் டேட்டா என்று பெயர். மாதக்கணக்கில் இது சேரும் போது மிகப்பெரிய இடத்தை அடைத்துக்கொள்ளும்.
மொபைல் செட்டிங்ஸ் சென்று ஒவ்வொரு ஆப்பிற்கும் உள்ள கேச் டேட்டாவை மாதத்திற்கு ஒருமுறையாவது கிளியர் செய்வது மொபைலை வேகமாக இயங்க வைக்கும்.
5. டவுன்லோட் செய்வதை தவிர்த்து ஸ்ட்ரீமிங் செய்யலாம்!
முன்பெல்லாம் பாட்டு கேட்பதற்கோ அல்லது படம் பார்ப்பதற்கோ அவற்றை போனில் டவுன்லோட் செய்து வைப்போம். ஆனால் இப்போது இன்டர்நெட் செம ஸ்பீடாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. அதனால் எந்த ஒரு மூவியையும் அல்லது பாடலையும் டவுன்லோட் செய்து போனை நிரப்புவதை விட, நேரடியாக ஆன்லைனிலேயே ஸ்ட்ரீமிங் செய்து பார்ப்பது தான் தற்போதைய ஸ்மார்ட் ட்ரிக். இது உங்கள் போனின் சுமையை பெருமளவு குறைத்துவிடும்.
வாரம் ஒருமுறை உங்கள் மொபைலை கையில் எடுத்து, தேவையற்ற ஸ்கிரீன் ஷாட்கள், டூப்ளிகேட் பைல்கள் மற்றும் பார்வேர்ட் மெசேஜ்களை அழித்து வந்தாலே போதும். போன் எப்போதும் பட்டு போல சூப்பராக வேலை செய்யும்.