

செல்போன் என்பது தற்போது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. கழிவறை முதல் கடைவீதி வரை எங்கு சென்றாலும் செல்போன் இல்லாமல் யாரும் செல்வதில்லை. அத்தகைய செல்போனை பாதுகாப்பதில் அனைவரும் முனைப்பு காட்டுகின்றனர். சில நேரங்களில் மழையில் செல்போன் நனைந்தாலோ அல்லது கைத்தவறி தண்ணீரில் விழுந்து விட்டாலோ மனம் பதைபதைத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர். அந்த வகையில் செல்போன் தண்ணீரில் நனைந்து விட்டால் செய்யக்கூடாதவைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ஈரமான செல்போனை இயக்குவது செலவுக்கு வழிவகுக்கும். செல்போன் ஈரம் ஆகிவிட்டால் உடனே இயங்குகிறதா என அதனை இயக்க முயற்சிப்பது தவறான செயலாகும். ஏனெனில் செல்போனுக்குள் தண்ணீர் இருக்கும் போது அதனை இயக்குவது ஷார்ட் சர்க்யூட் அபாயத்தை அதிகரித்து செல்போனின் மதர் போர்டை சேதப்படுத்த கூடும் என்பதால் உடனடியாக செல்போனை இயக்குவதை முயற்சிக்கக் கூடாது.
ஆபத்தான ஹேர் டிரையர் அல்லது ஹீட்டர்
செல்போன் மழையில் நனைந்து விட்டாலோ அல்லது தண்ணீரில் விழுந்து விட்டாலோ உடனடியாக அதனை உலர்த்துவதற்கு ஹேர் டிரையர் அல்லது ஹீட்டர் பயன்படுத்துவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஹேர் டிரையர் அல்லது ஹீட்டரில் இருந்து வரும் அதிகமான சூடான காற்று செல்போனின் உள் பாகங்களையும், பேட்டரியையும் சேதப்படுத்து வதோடு, இதனால் செல்போன் தீப்பிடித்து வெடிக்கும் அபாயம் அதிகம் இருப்பதால் செல்போனை உலர்த்த ஹேர் டிரையர் அல்லது ஹீட்டரை பயன்படுத்துவது கூடாது.
செல்போனை ஆட்டுவதே தவறு
செல்போனில் உள்ள தண்ணீரை வெளியேற்ற உடனடியாக அதனை வேகமாக உலுக்குவது தவறான செயலாகும். ஏனெனில் செல்போனை உலுக்குவதன் மூலம் தண்ணீர் மேலும் உள்ளே பல இடங்களில் பரவி கூடுதல் சேதத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் தண்ணீரை வெளியேற்ற உலுக்க முயற்சிக்கக்கூடாது.
சார்ஜ் போடுவது மிகப்பெரிய தவறு
செல்போன் ஈரமாக இருக்கும் போது அது இயங்குகிறதா எனப் பார்க்க சார்ஜ் செய்வது ஆபத்தான செயலாகும். ஏனெனில் இதனால் கைப்பேசி சேதம் அடைவதோடு மின்னதிர்ச்சியும் தீ விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் செல்போன் உலர்ந்த பிறகே சார்ஜ் செய்ய வேண்டும்.
ஈரமான செல்போன் பாதுகாப்பு
செல்போன் ஈரமாகிவிட்டால் உடனடியாக அதனை அணைத்துவிட்டு பின்பக்க அட்டையில் உள்ள சிம் கார்டை முதலில் அகற்ற வேண்டும். செல்போனில் உள்ள ஈரத்தை உலர்ந்த இடத்திலோ அல்லது அரிசி ஈரப்பதத்தை உறிஞ்சும் என்பதால் அரிசி பாத்திரத்திலோ வைத்து உலர்த்த வேண்டும். மேலும் குறைந்தது 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை உலர்த்திய பிறகு இயக்க வேண்டும்.