

மனித உடல் ஒரு வியக்கத்தக்க இயற்கைப் படைப்பு. இதில் நம்மைச் சுற்றியுள்ள உலக அழகை, குறிப்பாக வண்ணங்களை உணர்ந்து ரசிக்க உதவுவது நம் கண்களில் உள்ள விழித்திரை (Retina) ஆகும். விழித்திரையில் ஒளியை உணரக்கூடிய இரண்டு முக்கிய வகையான ஒளி ஏற்பி செல்கள் (Photoreceptor cells) உள்ளன. அவைகள்:
கோல்கள் (Rod Cells) – மங்கலான ஒளியில் பார்க்கவும், கருப்பு-வெள்ளைப் பிம்பங்களை உணரவும் உதவுகின்றன.
கூம்புகள் (Cone Cells) – பகல் வெளிச்சத்திலும், தெளிவான வண்ணப் பொருட்களையும் காண உதவுகின்றன. நாம் வண்ணப் பொருட்களைக் காண்பதற்கு முழுமுதற் காரணமாக இருப்பவை கூம்புச் செல்கள் ஆகும். இது குறித்த தகவல்களைக் காண்போம்.
கூம்புச் செல்களின் அமைப்பு மற்றும் செயல்பாடு: நமது விழித்திரையில் சுமார் 6 முதல் 7 மில்லியன் கூம்புச் செல்கள் உள்ளன. இவை குறிப்பாக விழித்திரையின் மையப் பகுதியான ‘ஃபோவியா’ (Fovea) என்ற பகுதியில் அதிக செறிவோடு காணப்படுகின்றன.
கூம்புச் செல்கள் அதிக தீவிரம் கொண்ட ஒளியில் மட்டுமே செயல்படும் தன்மை கொண்டவை. எனவேதான், இரவில் அல்லது வெளிச்சம் குறைவாக இருக்கும்போது நம்மால் பொருட்களின் வண்ணங்களைத் தெளிவாகக் காண முடிவதில்லை.
மூன்று வகையான கூம்புச் செல்கள்: மனிதக் கண்களில் மூன்று வகையான கூம்புச் செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லும் ஒரு குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட ஒளியை உறிஞ்சும் திறன் படைத்தது. ஆங்கிலத்தில் இவற்றை RGB (Red, Green, Blue) கோட்பாடு அல்லது ட்ரைஹ்ரோமேட்டிக் பார்வை (Trichromatic vision) என்பர்.
சிவப்பு கூம்புகள் (L-Cones – Long wavelengths): இவை சிவப்பு நிற அலைநீள ஒளியை அதிகம் உணர்கின்றன. (சுமார் 560 nm)
பச்சை கூம்புகள் (M-Cones – Medium wavelengths): இவை பச்சை நிற அலைநீள ஒளியை அதிகம் உணர்கின்றன. (சுமார் 530 nm)
நீல கூம்புகள் (S-Cones – Short wavelengths): இவை நீலம் மற்றும் ஊதா நிற அலைநீள ஒளியை அதிகம் உணர்கின்றன. (சுமார் 420 nm)
நாம் எப்படி வண்ணங்களைக் காண்கிறோம்? பொருட்கள் மீது படும் சூரிய ஒளி அல்லது செயற்கை ஒளி அந்தப் பொருட்களின் மீது பட்டு நம் கண்களுக்குத் திரும்புகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பொருள் சிவப்பு நிறத்தில் ஒளிர்கிறது என்றால், அது சிவப்பு நிற ஒளியைத் தவிர மற்ற அனைத்து நிற ஒளியையும் உறிஞ்சிக் கொண்டு, சிவப்பு ஒளியை மட்டும் பிரதிபலிக்கிறது. அந்தப் பிரதிபலிக்கப்பட்ட ஒளி நம் விழித்திரையில் உள்ள கூம்புச் செல்களைத் தாக்கும்போது, அந்தந்த செல்களில் உள்ள போட்டோபிக்மென்ட்டுகள் (Photopigments) வேதிவினைக்கு உள்ளாகின்றன.
இந்த மூன்று வகையான கூம்புச் செல்கள் வெவ்வேறு விகிதங்களில் தூண்டப்படுவதன் மூலமாகவே மூளை மில்லியன் கணக்கான வண்ணங்களை உருவாக்குகிறது. உதாரணமாக, சிவப்பு மற்றும் பச்சை கூம்புகள் ஒரே நேரத்தில் சமமாகத் தூண்டப்படும் போது நமக்கு மஞ்சள் நிறம் தெரிகிறது.
மூன்று கூம்புச் செல்களும் சம அளவில் தூண்டப்படும்போது நமக்கு வெள்ளை நிறம் தெரிகிறது. எந்தக் கூம்புச் செல்லும் தூண்டப்படாமல் போனால் அது கருப்பு நிறமாக உணரப்படுகிறது.
இந்தச் செல்களிலிருந்து உருவாகும் மின் சமிக்ஞைகள் பார்வை நரம்பு வழியாக மூளையின் பின் பகுதியில் உள்ள பார்வைப் பகுதிக்கு அனுப்பப்பட்டு, நாம் பார்க்கும் வண்ணங்களை மூளை நமக்கு விவரிக்கிறது.
நிறக்குருடு (Color Blindness) என்றால் என்ன?
சில நபர்களுக்குப் பிறவிக் கோளாறுகள் அல்லது மரபணு மாற்றங்கள் காரணமாக இந்த மூன்று கூம்புச் செல்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செல்கள் சரியாகச் செயல்படாமல் போகலாம். இதனால் அவர்களால் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களைச் சரியாக அடையாளம் காண முடியாது. இதனைத் தான் நிறக்குருடு என்று அழைக்கிறோம்.
இயற்கை நமக்கு அளித்திருக்கும் அற்புதமான பரிசான கூம்புச் செல்களே நாம் வண்ணமயமான உலகைக் கண்டு களிக்க அடிப்படையான காரணமாக அமைகின்றன. ஒளி, இயற்பியல் மற்றும் உடற்கூறியல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அற்புதமே நம் வண்ணப் பார்வையாகும்.