
காலம் வேகமாக மாறுகிறது இல்லையா? அதன் ஓட்டத்தில் இனி அனைவருக்கும் தேவை ஹைப்ரிட் இண்டெலிஜென்ஸ்! (HYBRID INTELLIGENCE) - இரட்டை அறிவு!
இது இல்லாமல் யாரும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. அது என்ன ஹைப்ரிட் இண்டெலிஜென்ஸ்?
ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு நமது வாழ்வில் நம்மைக் கேட்காமலேயே நுழைந்து விட்டதல்லவா? ஆகவே நமது வாழ்வில் இதுவரை நாம் கற்றுவந்த கல்விக்கூட அறிவு மற்றும், பொது அறிவு ஆகியவற்றுடன் இனி இந்த மெஷின் அறிவும் தேவை ஆகிறது. இதன் உதவி பிரம்மாண்டமானதாக அமையப் போகிறது.
ஒரு எடுத்துக் காட்டைச் சொல்லலாம்.
ஒரு மூளை ஆபரேஷனை மூளை சர்ஜரியில் நிபுணரான டாக்டர் செய்யும் போது அவருக்கு ஒரு சிக்கலான பிரச்சனை ஏற்படுகிறது. இப்படிச் செய்யலாமா, அப்படிச் செய்யலாமா என்று ஆலோசிக்க ஆரம்பிக்கிறார். வெற்றியும் தோல்வியும் அவரது அப்போதைய முடிவில் தான் இருக்கிறது.
இனி அப்படி இல்லை. உலகில் அப்படிப்பட்ட பிரச்சனை எத்தனை பேருக்கு ஏற்பட்டது, அதை அவர்கள் எப்படி வெற்றிகரமாக எதிர்கொண்டு உரிய தீர்வைக் கண்டார்கள் என்பதை ஏஐயின் தரவு மூலம் ஒரு நிமிடத்தில் பார்த்து விடலாம்.
ஆகவே இனி நேச்சுரல் மற்றும் ஆர்டிபிஷியில் இண்டெலிஜென்ஸ் ஆகிய இரட்டை அறிவு தேவை!
நேச்சுரல் இண்டெலிஜென்ஸ் (NI)
இதை இன்று வரை நம்மிடம் இருந்து வரும் அறிவுத் தொகுப்பு என்று சுருக்கமாக விளக்கிவிடலாம். நம்முடைய உயர்வைக் குறியாகக் கொள்ளல் உணர்ச்சி, எண்ணம்,உணர்வுக் கிளர்ச்சி (Aspiration, Emotion, Thought, and Sensation) இந்த நான்கும் தான் தனி மனித அறிவின் அடிப்படை அங்கங்கள்.
உயர்வைக் குறியாகக் கொண்டு செயல்படுவது நமது நீண்ட கால லட்சியங்களைக் குறிக்கிறது. உணர்ச்சி என்பது நாம் எடுக்கும் முடிவுகளின் மீது செல்வாக்கு செலுத்துகிறது. எண்ணம் நமது தர்க்க ரீதியான அறிவு மற்றும் கற்றலை அமைக்கிறது. உணர்வுக் கிளர்ச்சி நமது பார்வையையும் அனுபவத்தையும் அடித்தளமாகக் கொண்டது.
ஆர்டிபீஷியல் இண்டெலிஜென்ஸ் (AI)
கணினி உதவியுடனான அமைப்புகள், மிகப்பெரும் தரவுகளைக் கொண்ட கணிப்பு நெறிமுறை (algorithm), நுணுகிக் காண வேண்டிய வடிவமைப்புகள் – இவை அனைத்தும் கூடிய மனித அறிவு போன்ற மெஷின் அறிவு தான் செயற்கை நுண்ணறிவு அதாவது ஏ.ஐ.
ஹைப்ரிட் இண்டெலிஜென்ஸ் (HI)
மேலே கூறிய இரண்டு இணைந்தது தான் ஹெச்.ஐ. இது டாக்டர்களுக்கும் மருத்துவத் துறையில் உள்ள மற்றவர்களுக்கும் ஏன், எல்லோருக்குமே பெரிதும் பயன்படும்.
நிதி நிர்வாகம்
ஏ ஐ மூலம், ஸ்டாக் மார்கெட்டில் உள்ள ஸ்டாக் பற்றிய விவரங்கள், முதலீடு செய்வதில் உள்ள அபாயங்கள் உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொள்ளலாம். எந்த முதலீடு பயனைத் தரும் என்பதை ஏராளமான தரவுகள் மூலம் அறிந்து கொள்வதோடு நிதி நிர்வாகம் உலகத்தில் எந்தத் திசையில் போகிறது என்பதை அறிந்து கொண்டு அதற்குத் தக நமது வழிகளை அமைத்துக் கொள்ளலாம்.
வாகனங்கள்
வாகனங்களைச் செலுத்த சாலை விதிகளை இனி ஏ ஐயே பார்த்துக் கொள்ளும். டிராபிக் சிக்னலில் வாகனங்கள் தானே நிற்கும், தானே கிளம்பும். பாதசாரிகள் சாலையைக் கடந்தால் தானே ப்ரேக் போட்டு நிற்கும். இது இன்னொரு டிரைவர் போல வாகன ஓட்டுநருக்கு உதவியாக இருக்கும்.
தயாரிப்புத் துறை
தொழிற்சாலைகளில் இனி தரக் கட்டுப்பாடு, அசெம்பிளி ஆகியவை இதன் உதவியுடன் சுலபமாகிவிடும். கழிவுகள் குறைவாக இருக்கும். திறன் அதிகரிக்கும்.
டெலிவரிகள்
இப்போதே அமேஸான் பத்து நிமிடங்களில் கேட்டதை வீட்டில் டெலிவரி செய்கிறது, இனி ஒவ்வொரு டெலிவரியும் ரூல் படி திட்டவட்டமாக வேகத்துடன் செய்யப்படும்.
துடிப்பான நகரங்கள் (Smart cities)
ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு மேனேஜர் போலச் செயல்பட்டு அனைத்தும் தக்க விதிகளின் படி நடக்கும். நகரமே துடிதுடிப்புடன் செயல்படும்.
சைபர் பாதுகாப்பு
இனி சைபர் திருட்டு நடைபெற வாய்ப்பில்லை. சைபர் பயமுறுத்தல், சைபர் கொள்ளை என்பதெல்லாம் நடக்க முடியாதபடி ஏஐ அமைப்புகள் பார்த்துக் கொள்ளும்!
இவை அனைத்தையும் தனி மனித வாழ்வில் அறிந்து வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.
ஆகவே இனி அனைவருக்கும் வேண்டுவது – ஹைப்ரிட் இண்டெலிஜென்ஸ். – இரட்டை அறிவு!