

தொழில்நுட்ப உலகிலும், தினசரி இயந்திரப் பராமரிப்புப் பணிகளிலும் கருவிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. பல்வேறு அளவுகளில் உள்ள திருகுகளையும் (Bolts), நட்டு களையும் (Nuts) கையாள்வதற்குப் பலதரப்பட்ட அளவிலான ஸ்பேனர்கள் நமக்குத் தேவைப் படுகின்றன.
இந்த சிரமத்தைக் குறைத்து, ஒரே கருவியின் மூலம் பல அளவிலான நட்டு களைக் கழற்றவும் பொருத்தவும் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பான கண்டுபிடிப்பே மங்கி ஸ்பேனர் (Monkey Wrench) ஆகும். Adjustable Wrench வகையைச் சேர்ந்த இக்கருவியின் சுவாரஸ்யமான வரலாறு, அதன் கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் பற்றி பார்க்கலாம்.
கண்டுபிடிப்பும் பெயர் காரணியும்: இக்கருவியை 1858 ஆம் ஆண்டு முதன் முதலில் வடிவமைத்து அதற்கான காப்புரிமையைப் பெற்றவர் அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் மோன்கி (Charles Moncky) ஆவார். இவருடைய பெயரைக் குறிக்கும் விதமாகவே இக்கருவிக்குத் தொடக்கத்தில் 'Moncky Wrench' என்று பெயரிடப் பட்டது. காலப்போக்கில் உச்சரிப்பு மாற்றங்களினால், பேச்சு வழக்கினாலும் அது மங்கி ஸ்கேனர் என்று அழைக்கப் படலாயிற்று.
இயங்கும் முறை மற்றும் கட்டமைப்பு: வழக்கமான Fixed ஸ்பேனர்களில் குறிப்பிட்ட ஒரு அளவிற்கு மட்டுமே நட்டுகளைப் பொருத்த முடியும். ஆனால் மங்கி ஸ்பேனர் முற்றிலும் மாறுபட்ட நவீன பொறி முறையைக் கொண்டுள்ளது. அவை
1.நகரும் தாடை பொறிமுறை (Adjustable jaws): இக்கருவியில் ஒரு நிலையான தாடையும் மற்றும் நகரும் தன்மை கொண்ட மற்றொரு தாடையும் இருக்கும்.
2) சுழல் திருகு (Screw Mechanism): இதில் உள்ள சிறிய சுழல் திருகு அமைப்பை விரல்களால் திருப்புவதன் மூலம், இரு தாடைகளுக்கும் இடைப்பட்ட இடைவெளியைக் கூட்டி அல்லது குறைத்து நமக்கு தேவையான அளவிற்கு மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
3) வலிமையான பிடிப்பு: நேர் கோட்டு வடிவில் அமைந்த இதன் தாடைகள், நட்டுகளுக்குச் சேதம் விளைவிக்காமல் பலமான பிடிப்பை வழங்குகின்றன.
தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் மாற்றம்: மங்கி ஸ்பேனரின் வெற்றியை தொடர்ந்து, தொழில் துறைத் தேவைகளுக்காக இக்கருவி மேலும் பல பரிணாமங்கள் அடைந்தது. குறிப்பாக, 1891 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஜொஹன் பெட்ரிக் ஜோஹன்சன் என்பவர் மங்கி ஸ்பேனரின் வடிவமைப்பை மேலும் மேம்படுத்தினார்.
மனிதக் கைகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப மேலும் எளிதாகவும், இலகுவாகவும் கையாளக்கூடிய நவீன “அட்ஜஸ்டபிள் ரெஞ்ச்” உருவாக இவருடைய மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பே வழிகோலியது
முக்கிய பயன்பாடுகள்: மங்கி ஸ்பேனர் அதன் தனித்துவமான பயன்பாட்டுத் தன்மையால் பல்வேறு துறைகளில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது.
பெரிய அளவிலான பிளம்பிங் குழாய்கள் மற்றும் வால்வுகளை இறுக்கவும், கழற்றவும் இது பெரிதும் பயன்படுகிறது.
தொழிற்சாலைகளில் உள்ள கனரக இயந்திரங்களைச் சீரமைக்கும் போது வெவ்வேறு அளவிலான கருவிகளை மாற்றி மாற்றி எடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
வாகனப் பழுதுபார்ப்புப் பணிகளில் பலவிதமான திருகு களைக் கையாள இது ஒரு சிறந்த சாதனமாக விளங்குகிறது.
சார்லஸ் மோன்கி என்பவரால் 19 ஆம் நூற்றாண்டில் எளிமையான யோசனையுடன் தொடங்கப்பட்ட இந்த மங்கி ஸ்பேனர், இன்றளவும் இயந்திரக் கைவினைஞர் களின் தவிர்க்க முடியாத ஒரு கருவியாகத் திகழ்கிறது. ஒரே கருவியின் மூலம் பல வேலைகளைச் செய்யும் இதன் திறன், மனிதனின் பணிச் சுமையைக் குறைத்து நேரத்தை மிச்சப்படுத்தியது. தொழில் நுட்ப வளர்ச்சி பல மாற்றங்களைக் கொண்டு வந்த போதிலும், அடிப்படை இயந்திரவியலின் மகத்துவத்திற்குச் சான்றாக மங்கி ஸ்பேனர் என்றும் நிலைத்து நிற்கும்.