

பாக்கெட்டில் செல்போன் இருக்கிறது. திடீரென்று செல்போன் அதிர்வு போன்ற உணர்வு! உடனே எடுத்துப் பார்த்தால் எந்த அழைப்பும் இல்லை, குறுஞ்செய்தியும் இல்லை. அப்படியானால் அதிர்ந்தது எது? நம் மூளையா? இதன் பின்னணியில் இருக்கும் வியப்பான உளவியலைப் பற்றிப் பார்ப்போம்.
செல்போன் இன்று நம்முடைய வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. அடிக்கடி வரும் அழைப்புகள், வாட்ஸ்அப் செய்திகள், சமூக வலைத்தள அறிவிப்புகள் என எப்போதும் நம் கவனம் செல்போனைச் சுற்றியே இருக்கிறது.
சில நேரங்களில் செல்போன் அதிரவே செய்யாமல், அதிர்ந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதற்குத்தான் மருத்துவ மற்றும் உளவியல் உலகில் 'Phantom Vibration' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது ஏன் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது சுவாரசியமானது.
'Phantom Vibration Syndrome' என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த அனுபவம், செல்போன் அதிராதபோதும் அதிர்வதைப்போல உணர்வதாகும். குறிப்பாக, செல்போனைப் பாக்கெட்டில் வைத்திருப்பவர்கள் அல்லது உடலுடன் ஒட்டியபடி எடுத்துச் செல்பவர்கள் இத்தகைய உணர்வை அடிக்கடி அனுபவிக்கலாம்.
இதற்குப் பின்னால் நம்முடைய மூளையின் செயல்பாடு இருக்கிறது. செல்போனில் இருந்து அடிக்கடி வரும் அறிவிப்புகளுக்குப் பழகிவிட்ட மூளை, சிறிய தொடுதல் அல்லது தசைகளின் இயல்பான அசைவைக்கூட செல்போன் அதிர்வாகத் தவறாகப் புரிந்துகொள்ளலாம். நாம் ஒரு முக்கியமான அழைப்பையோ செய்தியையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த உணர்வு அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.
2007ஆம் ஆண்டிலேயே இந்த அனுபவம் குறித்து ஆய்வாளர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர். பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் செல்போன் பயன்படுத்து பவர்களில் பலர் இத்தகைய அனுபவத்தை எதிர்கொள்வது தெரியவந்தது. இருப்பினும், இது அனைவருக்கும் ஏற்படும் என்பதோ, தனியாக ஒரு நோயைக் குறிக்கிறது என்பதோ கிடையாது.
இதைத் தவிர்க்க சில எளிய மாற்றங்களைச் செய்யலாம். தேவையற்ற அறிவிப்புகளை அணைத்து வைப்பது, அடிக்கடி செல்போனைச் சரிபார்க்கும் பழக்கத்தைக் குறைப்பது, சிறிது நேரம் செல்போனை உடலிலிருந்து தள்ளி வைப்பது போன்றவை உதவலாம். போதுமான தூக்கமும் மன அமைதியும் முக்கியம். இந்த உணர்வு தொடர்ந்து தொந்தரவு செய்தாலோ, வேறு அறிகுறிகளுடன் ஏற்பட்டாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
இன்றைய டிஜிட்டல் உலகில் நம்முடைய கவனத்தையும் உணர்வுகளையும் செல்போன் எந்த அளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. உண்மையில் அதிராத செல்போனை அதிர்வதாக உணரவைக்கும் அளவுக்கு நம் மூளை அறிவிப்புகளுக்குப் பழகிவிட்டது என்பதே வியப்பான விஷயம்!
செல்போன் பழக்கம் மூளையைப் பாதிக்கிறதா?
தொடர்ந்து செல்போன் அறிவிப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் நம்முடைய கவனத்தையும் பாதிக்கக்கூடும். ஒவ்வொரு முறையும் ஒரு செய்தி வருகிறதா என்று திரையைத் திறந்து பார்ப்பது, மூளையை எப்போதும் விழிப்புடன் வைத்திருக்கிறது.
குறிப்பாக முக்கியமான தகவல் ஏதேனும் வந்து விடுமோ என்ற எதிர்பார்ப்பு மனதில் இருந்துகொண்டே இருக்கும். இதனால் செல்போன் அருகில் இல்லாத நேரத்தில் கூட அது பற்றிய நினைவு மனதில் தோன்றலாம். சிலர் குளிக்கும் போது கூட செல்போன் அழைப்பு வந்து விட்டதோ என்று நினைத்து வெளியே வந்து பார்க்கிறார்கள்.
வாகனம் ஓட்டும் போது அறிவிப்பு ஒலி கேட்டது போல் தோன்றலாம். உண்மையில் எந்த சத்தமும் இல்லாத போதும், எதிர்பார்ப்பு காரணமாக மூளை அத்தகைய உணர்வை உருவாக்கக்கூடும். இதனைத் தவிர்க்க உணவு உண்ணும் போதும், குடும்பத்தினருடன் பேசும் போதும் செல்போனைத் தனியே வைத்துவிடலாம்.
தூங்குவதற்கு முன்பும் செல்போன் பயன்பாட்டைக் குறைக்கலாம். செல்போன் நமக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட சாதனம். அதன் ஒவ்வொரு அறிவிப்புக்கும் உடனடியாகப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய நேரத்தையும் கவனத்தையும் நாமே கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்வதே ஆரோக்கியமான டிஜிட்டல் வாழ்க்கைக்கு அடிப்படை.
செல்போனைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது மூளை ஓய்வின்றிப் பல தகவல்களைச் செயலாக்க வேண்டி இருக்கிறது. இதனால் கவனச் சிதறல், நினைவாற்றல் குறைவு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக அடிக்கடி வரும் அறிவிப்புகளைப் பார்ப்பதும், ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதும் கவனத்தைச் சிதறடிக்கும். எனவே மூளையின் ஆரோக்கியத்தைக்காக்க செல்போன் பயன்பாட்டிற்கு வரம்பு வைப்பது அவசியம்.
அடுத்தமுறை பாக்கெட்டில் செல்போன் அதிர்ந்ததுபோல் உணர்ந்தால் உடனே பதற்றப்பட வேண்டாம். அது உண்மையான அழைப்பாக இல்லாமல், மூளை உருவாக்கிய ஓர் உணர்வாகவும் இருக்கலாம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோம்; அதற்கு அடிமையாகாமல் நம் மனதுக்கும் ஓய்வு கொடுப்போம்!