
Quick Response codes எனப்படும் விரைவு எதிர்வினைக் குறிகள் தான் இன்றைய நவீன உலகை ஆண்டுகொண்டிருக்கிறது. பெரு நிறுவனங்கள் துவங்கி சாலையோர வியாபாரம் வரை எங்கு நோக்கினும் QR Codesகளின் ராஜ்ஜியம் தான்.
ஏன் இது உருவாக்கப்பட்டது? உருவாக்கியவர் யார்? தெரிந்து கொள்வோமா?
QR codes வருவதற்கு முன்னர் Bar Codes தான் ஆளுகையில் இருந்தது. ஆனால் மெதுவாகவும், தரவுகளைச் சேமிக்க மிகவும் குறைந்த அளவிலான இடத்தையே அவை கொண்டிருந்ததாலும் Bar codes உலகத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறின. உடனடியாக மாற்று தேவையென்று உலகம் அலைந்துகொண்டிருந்த போது தான் வழக்கம் போல ஜப்பான் இதற்கொரு தீர்வோடு வந்தது. தீர்வினைக் கண்டுபிடித்தவருக்கு எங்கிருந்து இந்த ஐடியா உதித்தது என்பது வியப்பூட்டும் நிகழ்வு. தொடர்ந்து படியுங்கள்.
ஜப்பானின் ஒரு மூலையில் வாழ்ந்த சாதாரணமான ஒரு பொறியாளர் மஸாஹிரோ ஹாரா. இவர் 1990களின் ஆரம்பத்தில் ஒரு ‘தானியங்கிகளுக்கான தொழிற்சாலையில்’ பணியாற்றிவந்த போது, Bar codes என்ற அந்த பட்டைக்கோடுகளால் அவதிப்பட்டு வந்தாராம். அதாவது அவரின் வேகத்துக்கும் துல்லியத்துக்கும் அவை ஈடுகொடுக்கவில்லையாம். இன்னும் சிறப்பான ஒன்று அவருக்குத் தேவைப்பட்டிருக்கிறது. தேவையே கண்டுபிடிப்பின் தாய் அல்லவா.
வேகமாகவும் அதிக தரவுகளைச் சேமிக்கவல்ல இடவசதியோடும் ஒரு எதிர்வினை குறி உருவாக்க என்ன செய்யலாம் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோது, ஜப்பானின் பழமையான ‘Game of Go’ விளையாட்டில் இருந்து அவருக்கு தேவைப்பட்ட spark கிடைத்தது. நம்மூர் தாயகட்டை போல் காய்களை நகர்த்தி விளையாடும் விளையாட்டு தான் Game of Go.
சதுரமான பலகையில் குட்டிக்குட்டி கருப்பு வெள்ளை வட்டக்கற்களைக் காய்களாகப் பயன்படுத்தி நகர்த்தி விளையாடும் விளையாட்டாகும் இது. நூற்றாண்டுகள் பழமையான இந்த விளையாட்டின் அடுக்கடுக்கான கடினத் தன்மையும், வடிவ வரிசையின் அர்த்தங்களை நேர்த்தியாக உபயோகித்து விளையாடும் பாங்கும், மஸாஹிரோ ஹாராவுக்கு பொறிதட்டியது போல் இருக்க ‘ஏன் இதே போன்ற ஒரு வடிவமைப்பில் எதிர்வினை குறியீடு ஒன்றினை நாம் உருவாக்க கூடாது?’ என்று யோசிக்க வைத்தது. இந்தச் சிந்தனையின் விளைவு தான் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருக்கும் QR Codes.
மஸாஹிரோ ஹாரா தன்னுடைய குழுவோடு சேர்ந்து உருவாக்கிய புரட்சி என்று கூட இதைச் சொல்லலாம். பார் கோடுகளை மேம்படுத்திய ஒன்றல்ல இது. இது முற்றிலுமாக வேறொரு புதிய கண்டுபிடிப்பு.
பார் கோடுகளை விட 100 மடங்கு அதிகமான தரவுகளை இதில் சேமிக்கலாம். இதை எந்த திசையில் இருந்து வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஸ்கேன் செய்யலாம். Damage ஏற்பட்டாலும் கூட இது வேலை செய்யும்.
இந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பு அமைதியாக திறமையாக உலகம் முழுவதும் பரவியது. மஸாஹிரோ ஹாரா இந்த கண்டுபிடிப்பின் மூலம் பெரிய விளம்பரம் ஒன்றும் தேடவில்லை. ஆனாலும் பில்லியன் கணக்கானவர்களின் பாக்கெட்டுகளிலும் அலைபேசி திரைகளிலும் வாழ்க்கையிலும் இவரின் கண்டுபிடிப்பான QR ஆர் கோட்கள் கலந்து இருக்கின்றன.
“மிகப்பெரிய புரட்சியை உருவாக்க பலமான சக்தி ஒன்றும் தேவையில்லை. பழைய பிரச்சனையைப் புதிய கண்களைக் கொண்டு பார்த்தாலே போதுமானது” என்ற தத்துவத்தின் சான்றாக இந்த QR Codes கண்டுபிடிப்பு திகழ்கிறது அல்லவா.