

வண்ணங்கள் சொல்வது என்ன?
சிறு குழந்தைகளிடம் கூட பேசும் பொழுது உனக்கு என்ன நிறம் பிடிக்கும் என்று கேட்டால் அவர்கள் சட்டென்று பிங்க், ப்ளூ என்று கூறுவார்கள். இப்படி இருக்கும் நிறங்கள் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கையில் எதற்கு உபயோகப்படுகிறது. அதன் வித்தியாசமான குணநலன்கள் பற்றி அறிவியல் என்ன கூறுகிறது என்பதை இப்பதிவில் காண்போம்.
உண்மையில் அடிப்படையான முதன்மை நிறங்கள் மூன்று தான். அவை சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகியவையே. இவை வெவ்வேறு வீதத்தில் கலக்கும் போது, மற்ற நிற சாயல்கள் தோன்றுகின்றன. இரண்டு முதன்மை நிறங்கள் கலந்து தோன்றுவது துணை நிறம் எனப்படும். சிவப்பும், மஞ்சளும் கலந்து ஆரஞ்சு நிறம் உண்டாகிறது.
மஞ்சளும், நீலம், சிவப்பும் சேர்த்து கரு நீல நிறம், அவற்றுடன் கருப்பைச் சேர்த்து பலவிதமாக ஆழ் நிறங்களையும், வெள்ளையை சேர்த்து பல வகையான இள நிறங்களையும் உண்டாக்க முடியும். அமெரிக்காவில் உள்ள நிற ஆய்வு நிறுவனங்கள் இவ்வாறு 50 ஆயிரம் நிறங்களை உண்டாக்க முடியும் என்ற கணக்கிட்டு இருக்கின்றன.
நாம் வண்ணங்களை கண்ணால் பார்ப்பதோடு உடலின் மற்ற புலன்களாலும் உணருகிறோம்.
சிவப்பு நிறம் நமது இதயத்துடிப்பையும், மூச்சு விடுதலையும் விரைவுப்படுத்துகிறது. நீல நிறம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ஆரஞ்சு நிறம் பசியைத் தூண்டுகிறது. மஞ்சள் நிறம் ஜீரணத் திரவங்களைப் பெருகச் செய்கிறது.
மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு போன்றவை சூடான நிறங்கள். அவை நமக்கு விறுவிறுப்பையும் சுறுசுறுப்பையும் உண்டாக்கும்.
பச்சை, நீலம் போன்றவை குளிர்ந்த நிறங்கள். அவை நம்மை அமைதிப்படுத்தித் தளரச் செய்யும்.
வண்ணங்களால் உடல்நிலை கூட பாதிக்கப்படுகிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரே வெப்பநிலையில் உள்ள இரண்டு அறைகளில் இரண்டு வெவ்வேறு நிறங்களை வைத்து ஆய்வு செய்தபோது, சிவப்பு நிற அறையில் இருந்தவர்கள் கதகதப்பாகவும், நீல நிற அறையில் இருந்தவர்கள் குளிராக இருப்பதாகவும் உணர்ந்ததாக நார்வே நாட்டு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நமது புலன் உணர்வுகளை மட்டும் இன்றி, நமது சிந்தனை போக்குகளையும் நிறங்கள் பாதிப்பதாக கூறுகின்றனர். சோதனையின் போது, நேரத்தைக் கணக்கிடாமல் ஒரு குழு பச்சை நிற அறையில் கூடியிருந்தது. அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு பணியாற்றி விட்டு வெளியே வந்து அரை மணி நேரம் தான் ஆகியிருக்கும் என்று நினைத்ததாகக் கூறினார்களாம்.
ஆனால், சிவப்பு நிற அறையில் கூடிய குழுவினர் ஒரு மணி நேரம் ஆகி இருக்கும் என்று சொன்னார்களாம். பொதுவாக சூடான நிறங்கள் நேரத்தை அதிகமாக மதிப்பிடவும், குளிர்ந்த நிறங்கள் நேரத்தை குறைத்து மதிப்பிடவும் தூண்டுவதாக ஆராய்ச்சியில் தெரிய வருகிறது.
இன்னும் பெரும்பாலானவர்கள் தமது தாய்க்கு பிடித்த வண்ணங்களையே விரும்புவதாக கூறுவர். அதன் காரணம் என்னவென்று பார்த்தால் அவர்கள் பிறந்த பொழுது தாயுடனே இருந்த நேரத்தில் அம்மாவுக்கு பிடித்த நிறத்தில் மெத்தை, தலையணை, போர்வை, புடவை, நைட்டி என்று அமைந்திருக்கும். அதைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு அது மனதில் நின்று விடும். பிறகு அதையே தான் விரும்புவதாகவும் கூறுவதை நடைமுறையில் காணலாம்.
இப்படி நம் வாழ்க்கையோடு வண்ணங்களும் இரண்டற கலந்திருப்பதைக் காணலாம். அதற்கான காரணங்களும் அறிவியல் பூர்வமாக உணர்த்தப்பட்டு உள்ளதும் அதன் தனிச்சிறப்பு.