

சிறு வயதில் வானத்தில் மின்னும் விண்மீன்களைப் பார்த்து அதை மின் மினிப் பூச்சி என்போம். அது நம்மை பார்த்து கண் சிமிட்டுவதாக கற்பனை செய்து கொள்வோம். நட்சத்திரங்கள் மின்னுவதை அதிசயமாகப் பார்ப்போம். வானில் நட்சத்திரங்கள் மின்னவில்லை என்றால் மழை வரும் என்று கூறுவோம். அப்படி நட்சத்திரங்கள் மின்னுவதற்கு என்ன காரணம், கிரகங்கள் மின்னாததற்கு என்ன காரணம் என்பதை இப்பதிவில் காண்போம்.
நட்சத்திரங்கள் வெப்பத்தையும் ஒளியையும் உமிழும் வாயுவிலான வெப்பக் கோள்கள் ஆகும். அவை பல்வேறு அளவுகளில் வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு வெப்ப நிலையில் இருக்கின்றன. இதை பொறுத்து அவற்றின் ஒளிச்செறிவு மற்றும் நமது புவியிலிருந்து அவை இருக்கும் தொலைவு ஆகியன மாறுபடுகின்றன.
நட்சத்திரங்கள் சிறியனவும் இல்லை. மின்மினி பூச்சி மாதிரி அவை கண்சிமிட்டுவதும் இல்லை. உண்மையில் நட்சத்திரங்களில் பல நம் சூரியனை விட பெரிதாக இருக்கும். அதிக தூரத்தில் இருப்பதால் சிறிதாக தெரிகின்றன. அருகில் இருப்பதால் சூரியன் பெரிதாக தெரிகிறது.
விண்வெளியில் தூசும், வாயுவும் மிகக் குறைந்த அடர்த்தியில் காணப்படுகிறது. எல்லா நட்சத்திரங்களும் தூசு நிரம்பிய வாயு, விண்முகில்களில் இருந்து உண்டானவை. எல்லா நட்சத்திரங்களும் தனியாக பிறப்பதில்லை. பெரும்பாலான நட்சத்திரங்கள் கூட்டமாகவே பிறக்கின்றன.
இரவு வானத்தைக் கண்களினால் பார்த்தோமானால் நட்சத்திரங்கள் வெவ்வேறு நிறங்களில் ஒளிர்வதைக் காணலாம். இதனால் நட்சத்திரங்களின் ஒளிச்செறிவின் அளவு மாறுபடுகிறது.
இரவில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களை காண்கிறோம். இவை யாவும் கூட்டம் கூட்டமாக சிறியதாகவும் பெரியதாகவும் காணப்படும். இக்கூட்டங்களை நன்கு உற்றுப் பார்த்தால் சில உருவங்களுடன் ஒத்திருப்பதை பார்க்கலாம். ஓரையன், சப்தரிஷி மண்டலம், சிறு கரடி, ஹசியோப்பியா, தென் சிலுவை, இடபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம் என ஒரு சில நட்சத்திரக் கூட்டங்களுக்கு பெயரிட்டுள்ளனர். இந்த நட்சத்திரக் கூட்டங்களுக்கு உடுக் கூட்டங்கள் என்று பெயர்.
நட்சத்திரங்களில் வானில் எப்போதும் ஒரே இடத்தில் நிற்கும் நிலையான நட்சத்திரம் சிறியஸ் என்று அழைக்கப்படுகிறது. வானில் பிரகாசமான நட்சத்திரமாக இந்த நட்சத்திரம் தான் கருதப்படுகிறது. இது 8.7 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது.
வேறு இடத்திற்கு மாறக்கூடியது தற்காலிக நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு உதாரணம் நோவா.
'விண்மீன்களில் சில அவற்றில் நிகழும் பெரும் வெடிப்பின் காரணமாக அதிக பிரகாசத்தோடு ஒளிருகின்றன'. 10 முதல் 20 மடங்கு வரை இப்படி ஒளிரும் நட்சத்திரங்கள் நோவா என்றும் அதற்கு மேல் ஒளிர்பவை சூப்பர் நோவா என்றும் அழைக்கப்படுகின்றன. இப்படி பல்வேறு விதமாக நட்சத்திரங்கள் மின்னுகின்றன.
அதற்கெல்லாம் காரணம் என்ன?
நட்சத்திரங்கள் மின்னுவதற்கு பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலமே காரணம். காற்று மண்டலம் அசைவுடன் இருக்கிறது. இதனால் காற்று மண்டலத்தில் நிறைய தூசு படிகிறது. தவிர காற்று மண்டலம் பல அடுக்குகளை கொண்டு உள்ளதால் இவை வெவ்வேறு வெப்ப நிலையில் இருக்கின்றன. காற்று மண்டலத்தில் சில அடுக்குகள் கடும் குளிரானவை. அதில் கொந்தளிப்பான பகுதிகளும் இருக்கின்றன. அப்பொழுது விண்வெளியில் எங்கோ இருக்கிற நட்சத்திரங்களின் ஒளி, காற்று மண்டலத்தில் நுழைந்த பிறகு அதன் பாதை பாதிக்கப்படுகிறது. அந்த பாதிப்பினால் தான் நட்சத்திரங்கள் மின்னுவது போல் தோன்றுகிறது. பூமியின் மேற்பரப்பில் இருக்கிற நாம் இவ்விதமாக ஒளிப்பாதை பாதிக்கப்பட்ட நட்சத்திரங்களையே காண்கிறோம்.
அடி வானத்துக்கும் மேலே உள்ள நட்சத்திரங்கள் காற்று மண்டலத்தை அதிக அளவில் கடந்து வருவதால், அவைதான் அதிக அளவில் கண் சிமிட்டுகின்றன. இந்த கண் சிமிட்டல் தான் மின்னுவது போல் தோன்றுகிறது. உண்மையில் நட்சத்திரங்கள் மின்னுவது இல்லை.
விண்கலத்தில் ஏறிச் சென்று, அதாவது காற்று மண்டலத்தை கடந்து சென்று நட்சத்திரங்களை பார்த்தால் அவை நிலையான ஆடாத அசையாத கண்சிமிட்டாத ஒளிப் புள்ளிகளாகத் தெரியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
மேலும், கிரகங்கள் ஏன் மின்னுவதில்லை என்ற கேள்வியும் நம்முள் எழுதுவது உண்டு. அதற்குக் காரணம் வீனஸ், ஜூபிடர் போன்ற கிரகங்களில் இருந்து மிகக் குறைந்த அளவு வெளிச்சம் வரும். ஆனாலும் மின்னாமல் இருக்கக் காரணம் இந்த கிரகங்கள் நமக்கு அருகில் இருப்பதால் தான். டெலஸ்கோப் வழியே பார்க்கும்போது சூரிய மண்டலத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் நட்சத்திரங்கள் குண்டு ஊசி முனை அளவு தான் தெரியும்.
அதனால்தான் அவற்றின் ஒளி நம் கண்களுக்கு மின்னுவது போல காட்சியளிக்கிறது. ஆனால், கிரகங்கள் அவற்றை விட நமக்கு மிக மிக அருகில் இருப்பதால் தட்டு வடிவத்தில் தான் ஒளி தெரியும். அதனால்தான் அவை மின்னுவதில்லை.
இரவு நேரத்தில் கவனித்தோமானால் தூரத்தில் வரும் வாகனத்தின் முகப்பு விளக்கில் இருந்து வரும் ஒளி மின்னும். ஆனால், அதே வாகனம் அருகில் வந்தால் விளக்கு மின்னாது. வெளிச்சம் மட்டும்தான் கொடுக்கும். அது போல தான் இதுவும்.