

இன்றைய ஏஐ உலகத்தில் செயற்கை நுண்ணறிவு உலகத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு. அதைத் தெரிந்து கொண்டால் நம்மை நாம் பாதுகாப்பதோடு நமது குழந்தைகளையும், இளைஞர்களையும் பாதுகாக்க முடியும்?என்ன அது என்று தானே கேட்கத் தோன்றுகிறது?
சாட் ஜிபிடி (Chat GPT) மற்றும் ஓபன் ஏஐ (Open AI) உள்ளிட்ட பல நவீன சாதனங்களைப் பயன்படுத்துவோர் ஜாக்கிரதையாக இருங்கள் என்பது தான் செய்தி.
இதைப் பயன்படுத்தும் பத்து லட்சம் பேர்கள் ஒவ்வொரு வாரமும் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போல இருக்கிறது என்ற எண்ணத்தைச் சொல்கிறார்கள். இதை ஓபன் ஏஐ நிறுவனம் 24-10-25 அன்று ஒரு ப்ளாக் செய்தியில் தெரிவிக்கிறது! செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் உலகின் தலையாய நிறுவனம் தரும் இந்தச் செய்தி உலகத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது மட்டுமின்றி ஒரு வாரத்தில் ஐந்து லட்சத்து அறுபதினாயிரம் பேர்கள் அதாவது 0.07% பயனாளர்கள் தங்கள் மனநிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் சைக்கோ பிரச்னை உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
சாட் ஜிபிடி-ஐ அதிகமாகப் பயன்படுத்தி வந்த ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொள்ளவே, அவனது குடும்பத்தினர் சட்டரீதியாக வழக்குத் தொடர்ந்திருப்பது பரபரப்பாக இப்போது பேசப்படுகிறது. அமெரிக்காவின் ஃபெடரல் ட்ரேட் கமிஷன் சென்ற மாதம் ஒரு பெரிய ஆய்வை செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது தொடங்கி இருப்பது குறிப்பிடத் தகுந்தது.
சாட்பாட் – 5 (GPT 5)- ஐ இப்போது அறிமுகப்படுத்தியுள்ள ஓபன்ஏஐ இப்போது தங்கள் நிறுவனம் மனோநிலை மேம்படுவதற்கான முற்போக்கான விஷயங்களை இதில் சேர்த்துள்ளதாகக் கூறுவதோடு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆயிரம் மாடல்களை (மாதிரிகளை) அலசி ஆராய்ந்து இதை உருவாக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக பெரும் உளவியல் நிபுணர்களும், உளவியல் வியாதிகளுக்கு சிகிச்சை தரும் நிபுணர்களும் 1800 மாதிரிகளை எடுத்து பயனாளர்களின் எதிர்வினைகளை ஆராய ஆரம்பித்துள்ளனர். ஓபன் ஏஐ-இன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன், “மனநிலை பாதிப்பைப் பற்றிய விஷயத்தில் நாங்கள் மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்” என்று அறிவித்திருக்கிறார்.
சாட் ஜிபிடி-ஐப் பயன்படுத்திய ஒரு இளைஞரின் புலம்பல் இது:
"என் வாழ்க்கையைக் கொஞ்சம் சீர்திருத்த முடியுமா?" என்று நான் அதை கேட்ட போது, அது தந்த பதில் இது தான். 'ஒரு டாக்டரைப் பாருங்கள். உடனே கவுன்சிலிங் செய்ய முயற்சி செய்யுங்கள். உங்கள் மேலதிகாரியுடன் உடனே பேசுங்கள். புது வேலைக்குப் போய் விடுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உங்கள் மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் நல்லுறவைக் கொள்ளுங்கள்.
ஒரு விடுமுறையை எடுத்து விடுங்கள். கொஞ்சம் அதிகம் சம்பாதிக்கும் வழியைப் பாருங்கள். உடல் பயிற்சி செய்யுங்கள். ஒரு நல்ல ஹாபியைத் தேர்ந்தெடுங்கள். தியானம் செய்யுங்கள்'...பட்டியல் தொடர்கிறது. “போதும்டா சாமி” என்று சாட் ஜிபிடி-யை அவர் விட்டு விட்டார்.
இந்த விவரங்களை எல்லாம் யாரோ சொல்லவில்லை. பிரபல மேலை நாட்டு இதழான கார்டியன் (27-10-25 இதழில்) முக்கியச் செய்தியாக இதைத் தருகிறது. ஆகவே, சாட் ஜிபிடி-ஐ அதிகமதிகம் பயன்படுத்துவதை நிறுத்தினால் நல்லது என்பதே நியாயமான முடிவு.