

பனிக்கட்டியை நன்றாக உருட்டி ஒரு பந்து போலச் செய்து, அதை அப்படியே விண்வெளியில் வீசினால் அது எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் நிலவுதான் தெத்திஸ் (Tethys) நிலவு. நம் சூரிய குடும்பத்தில் எத்தனையோ விசித்திரமான நிலவுகள் இருந்தாலும், சனிக்கிரகத்தைச் சுற்றி வரும் இந்த ஐந்தாவது மிகப்பெரிய நிலவு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல். 17-ம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட இந்த நிலவு ஒரு சாதாரண பனிக்கட்டி பந்து மட்டுமல்ல, அதற்குள் பல மர்மங்கள் ஒளிந்துகிடக்கின்றன.
மிதக்கும் நிலவு!
இந்த நிலவின் அடர்த்தியைப் பற்றிச் சொன்னால் நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். பொதுவாக பாறைகளால் ஆன நிலவுகள் அதிக எடையுடன் இருக்கும். ஆனால் தெத்திஸின் அடர்த்தி வெறும் 0.98 கிராம் தான். அதாவது தண்ணீரின் அடர்த்தியைவிட இது குறைவு. ஒருவேளை பிரம்மாண்டமான ஒரு தண்ணீர் தொட்டி கிடைத்தால், அதில் இந்த தெத்திஸ் நிலவை நம்மால் மிதக்கவிட முடியும். இது முழுக்க முழுக்க நீரால் ஆன பனிக்கட்டியால் உருவானது என்பதையே இது காட்டுகிறது. இதன் விட்டம் சுமார் 1060 கிலோமீட்டர். இது நம் பூமியின் நிலவில் மூன்றில் ஒரு பங்குதான்.
சினிமா ஹீரோக்களுக்குத் தான் பாடிகார்ட் இருப்பார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். இந்த தெத்திஸ் நிலவுக்கும் இரண்டு பாடிகார்டுகள் இருக்கிறார்கள். சனிக்கிரகத்தைச் சுற்றி வரும்போது, தெத்திஸுக்கு முன்னால் டெலஸ்டோ (Telesto) என்ற நிலவும், பின்னால் கலிப்ஸோ (Calypso) என்ற நிலவும் பாதுகாப்பாக வருகின்றன.
ஒடிஸியஸ் பள்ளம்!
இந்த நிலவின் மிக முக்கியமான அடையாளமே அதன் முகத்தில் இருக்கும் பிரம்மாண்டமான பள்ளம் தான். அதற்கு ஒடிஸியஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள். சுமார் 400 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த பள்ளம், நிலவின் மொத்த அளவில் ஐந்தில் இரண்டு பங்கு இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இவ்வளவு பெரிய ஒரு விண்கல் மோதல் நடந்தபோது இந்த நிலவு சுக்குநூறாக உடைந்திருக்க வேண்டும். ஆனால் இது பனிக்கட்டியால் ஆனது என்பதால் உடையாமல் தப்பித்துவிட்டது. காலப்போக்கில் அந்தப் பள்ளம் உருகித் தட்டையாக மாறிவிட்டது.
Ithaca Chasma!
தெத்திஸில் இருக்கும் இன்னொரு பெரிய ஆச்சரியம் இதாகா கேஸ்மா எனப்படும் மிகப்பெரிய பிளவு. இது சுமார் 2000 கிலோமீட்டர் நீளமும், 100 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. இது எப்படி உருவானது என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இந்த நிலவு திரவ நிலையில் இருந்தபோது, அதன் உள்ளே இருந்த கடல் நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறியது. தண்ணீர் உறையும்போது விரிவடையும் என்பது நமக்குத் தெரியும். அப்படி உள்ளே இருந்த நீர் விரிவடைந்தபோது, நிலவின் மேல் ஓடு தாங்க முடியாமல் வெடித்து, இப்படி ஒரு பெரிய பிளவு ஏற்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள்.
பேக்மேன் நிலவு!
நாம் வீடியோ கேமில் விளையாடும் பேக்மேன் (Pac-Man) பொம்மை போல இந்த நிலவின் வெப்ப வரைபடம் இருக்கிறது. சனிக்கிரகத்தின் காந்தப்புலத்தால் ஈர்க்கப்படும் எலக்ட்ரான்கள் இந்த நிலவின் ஒரு பக்கத்தைத் தாக்குவதால், அந்தப் பகுதி மட்டும் கெட்டியான பனிக்கட்டியாக மாறி வெப்பத்தை வித்தியாசமாக வெளிப்படுத்துகிறது. பார்க்க ஒரு சாதாரண ஐஸ் பந்து போலத் தெரிந்தாலும், அறிவியல் ரீதியாக இது ஒரு பொக்கிஷம்.
வெறும் கண்களுக்கு ஒரு சிறிய வெள்ளைப் புள்ளியாகத் தெரியும் தெத்திஸ், அருகில் சென்று பார்க்கும்போதுதான் தனது பிரம்மாண்டமான காயங்களையும் வடுக்களையும் காட்டுகிறது.