

நம்முடைய விரல் ரேகைகள் வெறும் அடையாளத்திற்காக மட்டும் அமைந்தவை அல்ல. அவை ஒவ்வொன்றிலும் இயற்கையின் மிகப்பெரிய ரகசியமும், நம் ஆளுமை பற்றிய சுவாரசியமான தகவல்களும் மறைந்திருக்கின்றன.
உலகில் உள்ள 800 கோடி மக்களில் இருவருக்கு ஒரே மாதிரியான ரேகை இருக்கவே இருக்காது. அவ்வளவு ஏன் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்களுக்கு கூட விரல் ரேகைகள் வெவ்வேறாகத்தான் இருக்கும். இந்த உலகத்தில் உள்ள யாரும் யாரைப் போலவும் இருக்க முடியாது. ஒத்த இரட்டையர்கள் கூட பார்ப்பதற்கு ஒரே மாதிரி தெரிந்தாலும் அவர்களது ரேகைகள் வெவ்வேறாகத்தான் இருக்கும்.
விரல் ரேகையின் 3 முக்கிய வடிவங்கள்:
உயிரியல் மற்றும் தடயவியல்(Forensics) படி, மனிதர்களின் விரல் ரேகைகள் முக்கியமாக மூன்று வடிவங்களாகப் பிரிக்கப்படுகின்றன. உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் விரல் ரேகைகளும் இந்த மூன்று வடிவங்களுக்குள் அடங்கிவிடும்.
வளைய வடிவம் (Loops):
உலக மக்கள் தொகையில் 60% முதல் 65% பேருக்கு இந்த வகை ரேகை தான் இருக்கும். இந்த வடிவம் கொண்டவர்கள் பொதுவாக அமைதியானவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள் மற்றும் பிறருடன் எளிதில் பழகும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
வட்ட வடிவம் (Whorls):
இது சுமார் 30% முதல் 35% மக்களிடம் காணப்படும் வட்ட வடிவ அமைப்பாகும். இந்த ரேகை உள்ளவர்கள் அதிக சுதந்திர விரும்பிகளாகவும், கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் தனித்துவமான சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
வில் வடிவம் (Arches):
இது மிகவும் அரிதானது. வெறும் 5% மக்களுக்கு மட்டுமே இந்த வடிவம் இருக்கும். இவர்கள் கடின உழைப்பாளிகள், நடைமுறை வாழ்க்கையை விரும்புபவர்கள் மற்றும் கொள்கைகளில் உறுதியாக இருப்பார்கள்.
ரேகைகளே இல்லாத அரிய நிலை:
உலகில் 'அடெர்மடோகிளிஃபியா (Adermatoglyphia) என்ற அரிய மரபணு குறைபாடு உள்ள சில மனிதர்களுக்கு விரல் ரேகைகளே இருப்பதில்லை. இவர்களுடைய விரல் நுனிகள் முற்றிலும் வழுவழுப்பாக இருக்கும். இதனை 'குடிவரவு தாமத நோய்' (Immigration Delay Disease) என்றும் அழைப்பார்கள். ஏனென்றால் இவர்களால் எளிதில் பாஸ்போர்ட் அல்லது அடையாள அட்டைகளைப் பெற முடியாது.
தாயின் கருப்பையிலேயே உருவாகும் ரகசியம்:
பலர் நினைப்பது போல் ரேகைகள் நாம் பிறந்த பிறகு உருவாவதில்லை. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் ஐந்து முதல் ஆறு மாதங்களாக (13-19 வாரங்கள்) இருக்கும் பொழுதே அதன் விரல் ரேகைகள் முழுமையாக உருவாகிவிடுகின்றன. நாம் வளர வளர ரேகையின் அளவு பெரிதாகுமே தவிர அதன் வடிவமைப்பு மாறுவதே இல்லை.
விரல் ரேகைகள் என்பது நம் தோலின் மேல் பகுதியில் மட்டும் இருக்கும் கோடுகள் அல்ல. அவை தோலின் ஆழமான உள் அடுக்கு (Dermis) வரை பதிந்துள்ளன. இதனால் கைகளில் லேசான காயம் முதல் ஆழமான வெட்டு காயங்கள் வரை ஏற்பட்டாலோ அல்லது தோல் உரிந்தாலோ கூட தற்காலிகமாக ரேகைகள் சிதைந்தது போல் தோன்றலாம். ஆனால் சருமத்தின் உள்பகுதி (Dermis) குணமாகும் பொழுது பழைய ரேகைகள் அப்படியே துல்லியமாக மீண்டும் வளர்ந்துவிடும்.
மரபணுவும் சுற்றுச்சூழலும்:
ஒரே மாதிரியான மரபணுக்களைக் கொண்ட ஒரே கரு இரட்டைகளுக்குக் கூட விரல் ரேகைகள் ஒன்றாக இருப்பதில்லை. இரட்டையர்களுக்கு டி.என்.ஏ (DNA) ஒன்றாக இருந்தாலும் விரல் ரேகை மாறுபடும்.
காரணம், அவர்கள் கருப்பையில் இருக்கும்போது தொப்புள்கொடியின் நீளம், அம்நியோடிக் திரவத்தின் (Amniotic fluid) அழுத்தம் மற்றும் அவர்கள் கைகளை அசைக்கும் விதம் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளால் இந்த ரேகைகள் வடிவமைக்கப்படுகின்றன.
அறிவியல் பூர்வமாக ரேகைகளில் உள்ள மேடுகளும் பள்ளங்களும் நாம் ஒரு பொருளைக் கையில் பிடிக்கும் போது உராய்வை ஏற்படுத்தி, அந்தப் பொருள் கையை விட்டு நழுவாமல் இருக்க உதவுகின்றன. அதேபோல் நம் விரல் ரேகைகள் தொடு உணர்வை அதிகரிக்கும் கேடயங்களாகவும் விளங்குகின்றன.
நம் விரல் நுனிகளில் உள்ள ரேகைகளின் மேடுகளும் பள்ளங்களும் நாம் ஒரு பொருளைத் தொடும்பொழுது ஏற்படும் அதிர்வுகளை நரம்புகளுக்கு வேகமாக கடத்துகின்றன. அதன் மூலம் ஒரு பொருள் மென்மையாக இருக்கிறதா அல்லது சொரசரப்பாக இருக்கிறதா என்பதை நம்மால் துல்லியமாக உணரமுடிகிறது.
விரல் ரேகைகளை ஆராயும் அறிவியலுக்கு டெர்மட்டோகிளிபிக்ஸ் (Dermatoglyphics) என்று பெயர். நம் விரல் ரேகையில் உள்ள சுருள்கள் மற்றும் வடிவங்களைக் கொண்டு எதிர்காலத்தில் வரவிருக்கும் சில மரபணு நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் இதயநோய் போன்ற பாதிப்புகளை முன்கூட்டியே கணிக்க முடியும் என்கிறார்கள்.