தண்ணீரில் நீண்ட நேரம் இருந்தால் விரல்கள் ஏன் சுருங்குகின்றன? உண்மை இதுதான்!

தண்ணீரில் நீண்ட நேரம் இருந்தால் கைகளில் சுருக்கம் ஏற்படுவது ஏன்? உங்களை வியப்பில் ஆழ்த்தும் நம் உடலின் பரிணாம வளர்ச்சியின் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை இதோ!
fingers wrinkle in water
Interesting facts of human body: fingers wrinkle in water Image credit: AI Image
Updated on

நாம் குளிக்கும்போதோ, துணிகளைத் துவைக்கும் போதோ அல்லது நீண்ட நேரம் நீச்சல் குளம், ஆறு, ஏரி போன்ற நீநிலைகளில் விளையாடும் போதோ நம்முடைய கை மற்றும் கால் விரல்களின் சருமம் சுருங்கிப் போவதை கவனித்திருப்போம்.

இது பார்ப்பதற்கு வயதானவர்களின் சருமம் போல தோன்றும். சிறிது நேரத்தில் தானாகவே மறைந்துவிடும். 'இந்த மாற்றம் ஏன் நடக்கிறது' என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? வாருங்கள்.. இதன் பின்னால் உள்ள சுவாரசியமான அறிவியல் காரணத்தைத் (Interesting facts of human body) தெரிந்துகொள்ளலாம்.

சிலர், தண்ணீரில் நீண்ட நேரம் இருக்கும்போது நம் உடலில் உள்ள சருமம் அதிகப்படியான நீரை உறிஞ்சிக் கொள்கிறது என்றும், அதன் காரணமாகவே இப்படிச் சுருக்கங்கள் ஏற்படுகின்றன என்றும் நினைக்கிறார்கள். அறிவியல் உலகிலும் கூட ஒரு காலத்தில் இதுதான் பொதுவான கருத்தாக இருந்தது. ஆனால், நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் இந்த பழைய கருத்தை முற்றிலும் தவறானது என்று நிரூபித்துள்ளன.

உண்மையான காரணம்:

சருமம் சுருங்குவதற்கு முக்கியக் காரணம் நம்முடைய 'சுயாட்சி நரம்பு மண்டலம்' (Autonomic Nervous System) ஆகும். இது நம்முடைய கட்டுப்பாடு இல்லாமல், உடலின் உள் இயக்கங்களை தானாகவே இயக்கும் ஒரு அற்புதமான அமைப்பு. நம் கைகள் நீண்ட நேரம் தண்ணீரில் மூழ்கியிருப்பதை உணர்ந்தவுடன், இந்த நரம்பு மண்டலம் உடனடியாகச் செயல்படத் தொடங்குகிறது.

தண்ணீரின் பாதிப்பால் விரல் நுனிகளில் உள்ள இரத்த நாளங்களை இந்த நரம்பு மண்டலம் சுருங்கச் செய்கிறது. இரத்த நாளங்கள் சுருங்கும்போது, அந்த குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைகிறது. இதனால் சருமத்தின் கீழ் உள்ள திசுக்களின் அளவு சட்டென்று சுருங்கிவிடுகிறது. ஆனால், அதற்கு மேல் இருக்கும் வெளிப்புறச் சருமம் அப்படியே இருப்பதால், அது கீழ்நோக்கி இழுக்கப்பட்டு மடிப்புகளாக, அதாவது, சுருக்கங்களாக நமக்குக் காட்சியளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
கேமரா பேட்டரி என அனைத்தும் சூப்பர்.. 10,000 ரூபாய்க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்!
fingers wrinkle in water

நமது உடல் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?

இதற்குப் பின்னால் ஒரு மிகச்சிறந்த இயற்கை வடிவமைப்பு ஒளிந்துள்ளது. மனித பரிணாம வளர்ச்சியின் படி, இது ஒரு பாதுகாப்பு மெக்கானிசம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

நம் கைகள் காய்ந்திருக்கும்போது ஒரு பொருளைப் பிடிப்பதற்கும், ஈரப்பதம் இருக்கும்போது பிடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கைகள் தண்ணீரில் நனைந்திருக்கும்போது வழுவழுப்பாக மாறிவிடும். அந்த நேரத்தில் ஏதேனும் ஒரு பொருளை நாம் கையில் பிடித்தால் அது வழுக்கி விழுந்துவிட வாய்ப்பு அதிகம்.

சருமத்தில் ஏற்படும் இந்தச் சுருக்கங்கள், கார்களின் டயர்களில் உள்ள 'கிரிப்' போன்ற கோடுகளைப் போலச் செயல்படுகின்றன. இந்த சுருக்கங்கள் தண்ணீரை விரல்களுக்கு இடையே எளிதாக வெளியேற்றி, ஈரமான சூழ்நிலையிலும் ஒரு பொருளை நாம் வழுக்காமல், மிக உறுதியாகப் பிடிப்பதற்கு உதவுகின்றன. உதாரணத்திற்கு, தண்ணீருக்குள் இருக்கும் கற்களையோ அல்லது ஈரமான பழங்களையோ நழுவாமல் எடுக்க இந்தச் சுருக்கங்கள் பெரிதும் உதவுகின்றன.

இந்தச் சுருக்கம் நரம்புகளின் செயல்பாட்டால்தான் நடக்கிறது என்பதை உறுதிப்படுத்த ஒரு சோதனையும் செய்யப்பட்டது. கைகளில் நரம்பு பாதிப்பு உள்ள சில நபர்களை நீண்ட நேரம் தண்ணீரில் இருக்க வைத்தபோது, அவர்களுடைய விரல்களில் இந்தச் சுருக்கங்கள் ஏற்படவில்லை. இதன் மூலம், மூளையின் கட்டளைப்படி நரம்புகள் செயல்பட்டால் மட்டுமே சருமத்தில் இந்த சுருக்கங்கள் ஏற்படும் என்பது உறுதியானது.

இதையும் படியுங்கள்:
உலகையே மாற்றிய 7 ரகசிய கண்டுபிடிப்புகள்.. இது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
fingers wrinkle in water

இந்த மாற்றம் பெரும்பாலும் கைகள் மற்றும் கால்களில் மட்டுமே அதிகமாகக் காணப்படுகிறது. உடலின் மற்ற பகுதிகளில் இதுபோன்ற சுருக்கங்கள் எளிதில் உருவாகாது. ஏனெனில் பிடிப்பு மற்றும் சமநிலைக்கு கைகள், கால்கள் முக்கியமான உறுப்புகளாக உள்ளன.

எனவே, தண்ணீரில் கைகள் சுருங்குவது என்பது நம் உடல் சூழ்நிலைக்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு தற்காப்புத் திறன் ஆகும். குளியல் முடிந்த சில நிமிடங்களில், நரம்புகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி, இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதால் கைகள் தானாகவே பழைய மென்மையான நிலைக்கு வந்துவிடுகின்றன. இயற்கையின் இந்த நுணுக்கமான வடிவமைப்பு மனித உடலின் ஆகச்சிறந்த அதிசயங்களில் ஒன்றாக உள்ளது அல்லவா..?

logo
Kalki Online
kalkionline.com