தங்கம் ஏன் துருப்பிடிப்பதில்லை? அறிவியல் பூர்வமான உண்மை இதோ!

தங்கத்தின் தமிழ் பெயர்கள், மனித உடலில் உள்ள தங்கம் மற்றும் அதன் அறிவியல் ரகசியங்கள்.
தங்கம் ரகசியம் - gold rust science
தங்கம் ரகசியம் - gold rust science
Updated on

தங்கம் ரகசியம்;

பொன் என்று பூரிப்புடன் நாம் சொல்லும் தங்கம் எனும் விலைமதிப்பற்ற உலோகத்திற்கு பல பெயர்கள் உள்ளன. இன்று நாம் அறிந்த மற்றும் பயன்படுத்திக்கொண்டுள்ள "தங்கம்" என்ற வார்த்தையானது, பழைய ஆங்கில மற்றும் ஜெர்மானிய மூலங்களிலிருந்து பெறப்பட்டது.

ஜெர்மானிய கோதிக் மொழி, தங்கத்தை 'குல்பா' (gulpa) 'என்ற சொல்லால் குறிப்பிட்டது. இது பிற்காலத்தில் பழைய ஆங்கிலத்தில் 'ஜியோலு' (geolu) என உருமாறியது. 'ஜியோலு' என்பதற்கு 'மஞ்சள்' என்று பொருள்; இவ்வாறு அந்த உலோகத்தின் மிக முக்கியமான பண்பான அதன் பொன்னிற மஞ்சள் நிறத்தின் காரணமாகவே அதற்கு அப்பெயர் சூட்டப்பட்டது. பன்னிரண்டாம் நூற்றாண்டில், இடைக்கால ஆங்கிலம் அந்தச் சொல்லுக்கு மற்றொரு பரிணாம வளர்ச்சியைக் கொண்டுவந்தது, அதன் விளைவாக நமது நவீன சொல்லான 'கோல்டு' (gold) உருவானது.

பின்னர் நமது நவீன வார்த்தையான தங்கம் என்பது உருவானது. தனிமங்களின் கால அட்டவணையில் தங்கத்திற்கான வேதிக் குறியீடு என்பது 'Au' ஆகும். இந்தக் குறியீடானது லத்தீன் வார்த்தையான அயூரம் (aurum) என்பதிலிருந்து வந்தது, அதற்கு "பிரகாசமான விடியல்" என்று அர்த்தமாகும்.

அரி, அரிச்சுனம், அருத்தம், அனந்தம், ஆக்கம், ஆசை, ஆடகம், இரணியம், ஈகை, ஈழம், உடல், உரை, ஏகாகாரம், ஏமம், கணையம், கல்யாணம், கற்பூரம், கனகம், காங்கேயம், கனம், காஞ்சனம், காணம், காரம், கூழ், கைத்து, சந்திரம், சாதரூபம், சாமி, சாமீகரம், சுவனம், செங்கோல், செந்தாது, செம்பொன், சொன்னம், தசும்பு, தபனியம், தமனியம், தனம், திரவியம், தேசிகம், தொடுக்கம், தேசி, நிசி, நிதானம், நிதி, பண்டம், பிங்கலம், பீதகம், பீதம்,பூரி, பொருள், பொலம், மாசை, மாடு, மாடை, மாழை, வசு, வித்தம், வெறுக்கை, வேங்கை பதுமநிதி, சங்கநிதி, கிளிச்லிறை, சாம்பூந்தம் - இவையெல்லாம் என்ன தெரியுமா? நாம் நகையாக அணியும் தங்கத்தின் தமிழ் பெயர்கள்தான்.

தங்கம் ரகசியம் - gold rust science
தங்கம் ரகசியம் - gold rust scienceImage credit - Gemini

உலகின் மிகவும் பிரபலமான, மதிப்புமிக்க உலோகமாக உள்ள தங்கம் எளிதில் கறையாது, ஒருபோதும், மங்குவதும் கிடையாது, துருப்பிடிப்பதும் கிடையாது, காற்றுடன் வேதி மாற்றமடைவதும் கிடையாது என்பதால், இதுவரையில் மனிதர்கள் பயன்படுத்திய தங்கம் அனைத்தும் ஏதோ ஒரு வடிவத்தில் பூமியில் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றது.

தங்கம் இரும்புபோல துருபிடிக்காது. ஏன் தெரியுமா? இதற்கான காரணத்தை அமெரிக்காவின் டுலேன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாந்து பிஸ்வாஸ் மற்றும் மேத்யூ மொன்டிமோர் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட ஆய்வில், தங்கத்தின் அணுக்கள், ஹெர்ரிங்போன் (herringbone) எனப்படும் சிக்கலான வடிவமைப்பில் தங்களை மறுசீரமைத்துக் கொள்வது முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது. ஒரு தங்கக் கட்டியை உடைத்தால், அதன் மேற்பரப்பு சில வினாடிகளில் புதிய வடிவமைப்பை எடுத்து, சிக்கலான சிக்சாக் (zigzag) அமைப்பை உருவாக்குகிறது.

இதை மேற்பரப்பு புனரமைப்பு (surface reconstruction )என்று அழைக்கின்றனர். இந்த மாற்றம் தங்கத்தின் மேற்பரப்பை அதிக உறுதியானதாக மாற்றுகிறது. இதனால் ஆக்சிஜன் அணுக்கள் தங்கத்தின் மேற்பரப்பில் ஒட்டுவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால் தங்கம் எளிதில் ஆக்சிஜனேற்றம் (oxidation) ஆகாது.

இதையும் படியுங்கள்:
தங்கத்தை விட 200 மடங்கு அதிக மதிப்புள்ள இந்த அதிசய உலோகம் பற்றித் தெரியுமா?
தங்கம் ரகசியம் - gold rust science

இரும்பு, வெள்ளி போன்ற உலோகங்கள் எளிதில் ஆக்சிஜனேற்றம் ஆகி கறையும். ஆனால், தங்கம் தனது பிரகாசத்தை நீண்ட காலம் தக்கவைத்துக் கொள்கிறது. தங்கத்தின் இந்த தனித்துவமான அணுக்கட்டமைப்பு, அதை நகைகள் மட்டுமல்லாமல், அறிவியல் மற்றும் தொழில்துறைகளிலும் முக்கியமான உலோகமாக மாற்றுகிறது.

99% தூய்மையான தங்கத்தை கையால் எளிதாக வளைத்து உருமாற்ற முடியும். இதனால்தான், அதிக அளவிலான தூய்மையான தங்கம், கொண்டு செல்வதற்காக பாரம்பரியமான முறையில், கட்டிகளாகவே வடிவமைக்கப்படுகின்றது. எனவே வனிக ரீதியாக அதனை தங்க பிஸ்கட் (Golden Biscuit) என்கிறார்கள்.

மேலும் ஒரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால் நமது உடலிலும் 0.2 மில்லி கிராம் அளவுக்கு தங்கம் இருக்கின்றது. அது பெரும்பாலும் நமது உடலில் ரத்தத்தில்தான் கலந்திருக்கின்றது. தங்கம் நச்சுத்தன்மை அற்ற ஒரு உலோகம் என்பதால், உணவிலும், அழகுசாதன பொருட்களிலும் கூட தங்கத்தை பயன்படுத்தலாம்.

உண்ணக்கூடிய தங்கம் என்பது 24 காரட் தூய தங்கத்தை மிக மெல்லிய தங்க இலைகளாக (gold leaf) மாற்றிப் பயன்படுத்தும் ஒரு நுட்பம். இவை சில மைக்ரோமீட்டர்கள் (ஒரு மைக்ரோமீட்டர் என்பது ஒரு மில்லியனில் ஒரு மீட்டர்) மட்டுமே தடிமன் கொண்ட மெல்லிய தாள்கள். இந்த தங்க இலைகளை இனிப்புகள், பானங்கள், கேக்குகள், மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களின் மேல் அலங்காரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வியர்வை பேசும் இரகசிய மொழி: நோய்களைக் காட்டும் உயிரியல் தகவல் பெட்டகம்!
தங்கம் ரகசியம் - gold rust science

பலருக்கு எழும் கேள்வி, "இது சுவையை மாற்றுமா?" என்பதுதான். இல்லை, உண்ணக்கூடிய தங்கம் உணவின் சுவையை எந்த விதத்திலும் மாற்றுவதில்லை. தங்கத்திற்கு தனிப்பட்ட சுவை அல்லது மணம் இல்லை. இது "சுவையற்ற அலங்காரப் பொருள்" என்று கூறலாம். இதை சாப்பிட்டால் உடலுக்கு என்ன ஆகும்? இது தீங்கு விளைவிக்குமா? நிச்சியமாக இல்லை!

அறிவியல் ரீதியாக, தங்கம் ரசாயன ரீதியாக வினைத் திறன் அற்ற உலோகம் (Chemically Inert Metal). அதாவது, அது மற்ற பொருட்களுடன் எளிதில் வினைபுரிவதில்லை. எனவே, நீங்கள் தங்கத்தை உண்ணும்போது, அது உங்கள் செரிமான மண்டலத்தில் எந்த வேதியியல் மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. உடல் அதை உறிஞ்சுவதில்லை, அது செரிக்கப்படாமல், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் உடலில் இருந்து வெளியேறிவிடும்.

logo
Kalki Online
kalkionline.com