செவ்வாய் கிரகத்திலிருந்து பாறை உள்ளிட்ட மாதிரிகளைக் கொண்டு வர நீண்ட காலமாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா முயன்று வருகிறது.
நாஸா அனுப்பிய பேர்சீவரன்ஸ் ரோவர் (Perseverance Rover) 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாயை அடைந்தது. இதில் இந்த மாதிரிகளைக் கொண்டு வரவேண்டும்.
மார்ஸ் சாம்பிள் ரிடர்ன் (Mars Sample Return -MSR) என்ற பெயர் கொண்ட இந்தத் திட்டதை சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் அதிக செலவு ஆகிறது என்பதால் நாஸா நிறுத்தி வைத்தது.
இப்போது 2025 ஜனவரி 7ம் தேதி பத்திரிகையாளரிடம் பேசிய நாஸா நிர்வாக அதிகாரிகளான பில் நெல்ஸன் மற்றும் நிகோலா, செவ்வாய் மாதிரிகளைக் கொண்டு வரும் திட்டத்தைப் பற்றிக் கூறி, தாங்கள் புது மாதிரியான இரு திட்டங்களை பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தனர்.
முன்னதாக ஏற்பாடு செய்த திட்டத்திற்கு ஆகும் செலவு 1100 கோடி டாலர் ஆகும். (ஒரு டாலர் = ரூ 86.55) அதைக் கொண்டு வருவதும் 2040ம் ஆண்டில் தான் முடியும்.
ஆனால் அங்கிருந்து குறைந்த செலவில் மாதிரிகளைக் கொண்டு வர இப்போது புதிதாக இரு திட்டங்கள் உள்ளன என்று நெல்ஸன் தெரிவித்தார்.
ஸ்கை க்ரேன் திட்டம் என்ற முந்தைய திட்டம் செயல்படுத்த முடியாததற்குக் காரணம் செவ்வாயிலிருந்து எடுக்கப்படும் மாதிரிகள் அதை எடுத்து வர வேண்டிய ரோவரின் அளவை விடப் பெரியவை.
இதை ஆராய்ந்த குழு முன்னால் அன்று இல்லாத தொழில் நுட்பம், இப்போது நாலைந்து வருடங்களுக்குள் ஏற்பட்டிருப்பதால், ஸ்கை க்ரேன் திட்டத்திற்கு ஆகும் செலவை வெகுவாகக் குறைத்து விட முடியும் என்று கண்டறிந்துள்ளது.
இன்னொரு புதிய திட்டமாக இப்போது கமர்ஷியல் ஹெவி லேண்டர் என்று ஒரு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.
ஸ்கை க்ரேன் திட்டத்திற்கு ஆகும் செலவு 660கோடி டாலரிலிருந்து 770 கோடி டாலராகும். ஆனால் ஹெவி லேண்டார் திட்டத்திற்கு ஆகும் செலவு 580 கோடி டாலரிலிருந்து 710 கோடி டாலராகும். சாம்பிள்கள் நமக்கு 2035லிருந்து 2039க்குள் பூமியில் கிடைத்து விடும். பின்னர் அதை ஆராய்ச்சி செய்து செவ்வாயைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம்.
இதன் பின்னரே அங்கு இறங்குவது, பின்னர் அங்கு குடியேறுவது பற்றித் தீர்மானிக்க முடியும்.
சாம்பிள்கள் அனைத்தும் பெர்சீவரன்ஸ் ரோவர் வயிற்றுக்குள் இருக்கிறது. அதைக் கொண்டு வருவதும் வராததும் அரசின் கையில் இருக்கிறது என்கிறது நாஸா.
இவ்வளவு பணத்திற்கு அரசு தனது ஒப்புதலைத் தர வேண்டும். ஆனால் விஞ்ஞானிகளோ எங்களுக்கு சீக்கிரம் இந்த செவ்வாய் மாதிரிகள் வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இந்த மாதிரிகள் பூமிக்கு வந்தால் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வது, அங்கு குடியேறுவது பற்றிய சாத்தியக்கூறுகள் தெரியவரும்.
அதற்குள் சந்திரனில் நமக்கு ஒரு குடியிருப்பு அமைந்து விட்டால் அங்கிருந்து செவ்வாய்க்குச் செல்வது பல விதத்தில் சுலபமாகும்.
சந்திரனில் குடியிருப்பு, செவ்வாய்க்குப் பயணம் என்பதையெல்லாம் காலம் தான் முடிவு செய்யும்.
பொறுத்திருப்போம். மங்களன் என்று பெயர் பெற்ற செவ்வாய் பற்றிய விஷயங்கள் மங்களமாகவே முடியட்டும்!