

அன்றாட வாழ்க்கை அழுத்தத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் சுற்றுலா செல்லும் போது, குறிப்பாக படகு சவாரி பலருக்கும் பெரும் இன்பம் தருகிறது. ஆனால் படகு கவிழும் விபத்துகள் உயிர் இழப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், பயணிகள் பீதி அடையாமல் லைஃப் ஜாக்கெட் அணிதல், படகை இறுகப் பற்றிக்கொள்வது, மீட்பு குழுவினருக்கு சைகை மூலம் இருப்பை தெரிவிப்பது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும்.
புதிய இடங்களை கண்டு ரசிப்பது, இயற்கை காட்சிகளை பார்த்து பரவசப்படுவது, படகில் பயணித்து ஆனந்தம் அடைவது, புதிய உணவு வகைகளை உண்டு ரசிப்பது, புதிய கலாச்சாரத்தை தெரிந்துகொள்வது போன்ற சிறப்பம்சங்கள் சுற்றுலாவில் இடம் பெறுகிறது.
அதிலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவது படகு சவாரியைதான். தண்ணீரை கிழித்துக்கொண்டு படகு செல்வதை காண்பதும், வேகமான காற்று முகத்தை துடைத்து செல்லும் அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஆனால் படகு சவாரியின்போது படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானால் உயிர் பலிகள் அதிகம் ஏற்படுகின்றன. அந்த வகையில் படகு கவிழ நேரிட்டால் படகில் பயணிப்பவர்கள் செய்ய வேண்டியவைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
படகு கவிழ்ந்தால் படகில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:
* படகு கவிழ்ந்தால் படகில் பயணிப்பவர்கள் உடனடியாக அச்சப்பட்டு பீதி அடையக்கூடாது. இதுதான் முதல் பாதுகாப்பு. படகு கவிழ்ந்ததும் உடனடியாக லைஃப் ஜாக்கெட்டை (Life Jacket) எடுத்து அணிந்துகொள்ள வேண்டும்.
*நீங்கள் அணிந்து கொள்வது மட்டுமல்லாமல் உங்களுடன் பயணிக்கும் அனைவரையும் லைஃப் ஜாக்கெட் அணிந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். பின்பு படகை இறுக்கமாக பற்றி கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் படகை விட்டு விலகக்கூடாது. படகை ஒரு கையால் பற்றி கொண்டு மறு கையால் நீங்கள் இருக்கும் இடத்தை மீட்பு படையினருக்கு சைகை மூலமாக வெளிப்படுத்த வேண்டும்.
*படகு மிதக்கும் தன்மையுடையது என்பதால் படகு கவிழ்ந்தால் படகை சுற்றி நீந்தாமல் முடிந்தவரை கவிழ்ந்த படகின் மீது ஏறி நிற்க முற்பட வேண்டும். முடியாத பட்சத்தில் உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் படகை இறுகப் பற்றிய படி காத்திருப்பது நல்லது.
*படகில் உங்களுடன் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்பதை ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மீட்பு குழுவினர் அல்லது உதவிக்கு யாராவது வந்தால் படகை விட்டு சென்று விடாமல் அவர்கள் வரும் வரை பொறுமையாக காத்திருப்பது சிறந்தது. ஏனென்றால் படகை விட்டு விலகிச் சென்றால் ஆபத்து நேரிடும்.
*உங்களைவிட படகு வேகமாக நகர்ந்து சென்றால் படகை நோக்கி நீந்துவதை விட்டு விடவேண்டும். ஏனென்றால் வேகமாக நீந்தும் போது ஆற்றல் அனைத்தும் வீணாகி சோர்வடைந்து போவீர்கள்.
*அடுத்தவர்களை உதவிக்கு அழைக்கவும், மீட்பு படையினருக்கு உங்கள் இருப்பை தெரிவிக்கவும் கத்தி முயற்சிப்பதை விட பிரகாசமான வண்ண ஆடைகளை அசைத்தால் உங்கள் இருப்பு அவர்களுக்கு தெளிவாக தெரிந்து விடும். மேலும் எமர்ஜென்சி சிக்னல்களை (emergency flares) பயன்படுத்தினாலும் காப்பாற்றுபவர் களுக்கு உங்கள் இருப்பு எளிதாக தெரிந்துவிடும்.
படகு சவாரி செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
1.படகு சவாரி செய்யும்போது லைப் ஜாக்கெட்டை கழட்டாமல் இருப்பதோடு அங்கே இங்கே வைத்துக் கொள்ளாமல் அணிந்து கொண்டு படகில் பயணிப்பது சிறந்தது.
2. படகின் முன் பகுதியில் அமராமலும், படகிலிருந்து காலை தொங்கவிட்டு தண்ணீரில் இருக்குமாறு பயணிப்பதும் சிறந்ததல்ல. அவ்வாறு பயணித்தால் அலையில் மோதி கீழே விழ வாய்ப்புள்ளது. மேலும் படகின் சக்கரங்களால் நசுக்கப்படுவதோடு, சுழலியில் (propeller).சிக்கி நசுங்கவும் வாய்ப்பு உள்ளது.
3. மதுபானங்கள் அருந்திவிட்டு படகில் பயணிப்பதை முற்றிலும் தவிர்த்து விடவேண்டும். எடை அதிகமான பொருட்களை எடுத்துக் கொண்டு படகில் பயணிக்க கூடாது.
மகிழ்ச்சியாக இருக்க படகு சவாரியை மேற்கொள்பவர்கள் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையுடனும், படகு கவிழ்ந்தால் செய்ய வேண்டியனவற்றை தெரிந்துகொண்டும் பயணித்தால் பயணங்கள் என்றுமே இனிமையாகவும், பாதுகாப்பாகவும் அமையும்.