
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் நாளில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்’ (National Day of the Girl Child) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வழியாக, 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பெற்ற இந்நாளானது, பெண் குழந்தைகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பாலினப் பாகுபாடுகளின்றி அவர்களுக்குச் சமவாய்ப்பு வழங்குதலை உறுதி செய்தல் போன்றவைகளை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
பெண்களுக்கான கல்வியை ஊக்குவித்தல், சமூகம் பெண்களைச் சமமாக மதித்தல், பெண் குழந்தைகள் மீதான சமூக அணுகுமுறைகளை மாற்றுதல், பெண் சிசுக்கொலைகளைத் தடுத்தல், சரிந்து வரும் பாலின விகிதத்தைச் சமன்படுத்துதல் போன்றவைகளிலும் இந்நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும், இந்நாட்டில் பிறக்கும் உயிர்களில் ஆண், பெண் என்கிற பாகுபாடுகளின்றி சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன என்பதை உணர்த்தவும் இந்நாளில் பல நடவடிக்கைகளை அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
பாலினச் சமனிலை (Gender equality) அல்லது பாலியற் சமனிலை என்பது ஆடவரும், பெண்டிரும் சமூகத்தில் சமமாக நடத்தப்பட வேண்டும், பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு பாகுபடுத்தலாகாது என்ற கருத்து நிலையினை ஐக்கிய நாடுகள் அவையின் உலக மனித உரிமைகள் சாற்றுரையின் நோக்கமாக இருக்கிறது. சட்டத்தின்படியும் மக்களாட்சி செயற்பாடுகள் போன்ற சமூகச் சூழலிலும் ஆண், பெண் சமமையை உருவாக்குவதும், சமமான பணிகளுக்குச் சமமான சம்பளம் வழங்கலும் இந்தச் சாற்றுரையின் இலக்குகளாக இருக்கின்றன.
இந்திய அரசின் சட்டப்படி, திருமணம் செய்து கொள்ள ஆண்களுக்கு 21 வயதும், பெண்ணிற்கு 18 வயதும் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், இந்தியாவின் பல கிராமப் பகுதிகளில் பெண் குழந்தைகளுக்குத் திருமண வயதிற்கு முன்பாகவே, திருமணங்கள் செய்து வைக்கும் நிலை இருக்கிறது. இதே போன்று, இந்தியாவில், ஆண்களுக்கு உயர் கல்வி அளித்தல், பெண்களுக்கு உயர்கல்விக்கு அனுமதி மறுத்தல் போன்ற செயல்பாடுகளும் பல்வேறு குடும்பங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், இந்நாளில் பெண் குழந்தைகளையும், ஆண் குழந்தைகளுக்குச் சமமாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பெண்களுக்கு கல்வி வழங்கப்படுவது முக்கியத்துவமானது என்பதை அனைவரும் உணர்ந்திட வேண்டும். இந்தியாவில் மட்டுமில்லை ஐரோப்பாவிலும் பெண் கல்வி மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அச்சு இயந்திரம் மற்றும் கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் ஆகியவற்றின் பரவலாக்கத்திற்கு முன்னர் பெண்கள் கல்வியறிவு பெறுவது என்பது அரிதானதாகவே இருந்தது.
இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் பெண்கள் கல்வியறிவு பெறக்கூடாடது என்பதற்கு விதிவிலக்காக இருந்த குறிப்பிடத்தகுந்த பெண் ஆவார். எலிசபெத்தின் தாய் ஆன் பொலின் தூக்கிலிடப்பட்ட பின்னர் அரியணைக்கான வாரிசாக இருந்த இவர் அரசியல் சூழ்ச்சியால் ஆபத்தான நிலையில் இருந்தார். மேலும் முறைகேடாகப் பிறந்தவராகக் கருதப்பட்டார். இவரது கல்வி பெரும்பாலும் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியால் புறக்கணிக்கப்பட்டது.
அவரது மரணத்திற்குப் பிறகு அவரது மனைவியான கேத்தரின் பார், எலிசபெத்தின் உயர் அறிவுத்திறனில் ஆர்வம் காட்டினார், மேலும் எலிசபெத்தின் 9 வயதில் இருந்து அவருக்கு மனநிறைவு ஏற்படக்கூடிய கல்வியை வழங்குவதற்கான முடிவை ஆதரித்தார். அந்த வேளையில் உயர்குடி ஆண்களுக்கு இணையான கல்வியறிவைப் பெற்றார். இவர் இலத்தீன், கிரேக்கம், எசுப்பானியம், பிரெஞ்சு, தத்துவவியல், வரலாறு, கணிதம் மற்றும் இசை ஆகியவற்றில் கல்வி கற்றார். எலிசபெத்தின் உயர்தரக் கல்வி அவர் வெற்றிகரமான அரசியாக வளர உதவியது என்று கருதப்படுகிறது.
நம் வீட்டுப் பெண் குழந்தைகள் எலிசபெத் போன்று அரசியாக வர முடியாவிட்டாலும், சமூகத்தில் மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும், அதற்கு அவர்களுக்கான கல்வி அளிக்கப்பட வேண்டுமென்கிற எண்ணம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வர வேண்டும். பெண்கள் உயர் கல்வி பெறுவது மிக மிக அவசியம் என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது.