சிரிப்பு என்பது மனதின் காயங்களுக்கான மருந்து மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்தும் கூட. அதிலும் வயிறு குலுங்க சிரிப்பதால் உடலுக்கும் மனதிற்கும் ஏராளமான நன்மைகள் உண்டாகும். உலகளாவிய வயிறு குலுங்க சிரிக்கும் தினம் 2005ம் ஆண்டில், சிரிப்பு யோகா சிகிச்சையாளரான எலைன் ஹெல் என்பவரால் நிறுவப்பட்டது. மனம் விட்டு வயிறு குலுங்க சிரிப்பதால் உடலுக்கும் மனதிற்கும் ஏற்படும் ஆரோக்கியம், நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
வயிறு குலுங்க சிரிப்பதால் உண்டாகும் உடல் ரீதியான நன்மைகள்:
1. இரத்த ஓட்ட மேம்பாடும், இதய ஆரோக்கியமும்: உதர விதானத்திலிருந்து ஆழமான இதயபூர்வமாக சிரிப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்கிறது. இது கார்டியோ உடற்பயிற்சியின் ஒரு வடிவமாக செயல்படுகிறது. இதயத்துடிப்பு மற்றும் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும்.
2. தசைகளின் செயல் மேம்பாடு: மனம் விட்டு வயிறு குலுங்க சிரிக்கும்போது அது பல்வேறு தசைகளுக்கு குறிப்பாக நல்ல பயிற்சியாக அமைகிறது. வயிறு சுருங்கி விரியும்போது அது வயிற்றுக்கும் வயிற்று தசைகளுக்கும் நல்ல பயிற்சியாக அமைகிறது.
3. வலி நிவாரணம்: ஆழ்ந்த சிரிப்பு உடலின் இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறது. உற்சாகமூட்டும் எண்டார்ஃபின்களை வெளியிடத் தூண்டுகிறது. இது உடலில் ஏற்படும் வலியை பொறுத்துக்கொள்ளக்கூடிய சகிப்புத்தன்மையை உயர்த்துகிறது. நாள்பட்ட உடல் வலிகளின் அறிகுறிகளையும் போக்க உதவுகிறது.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: வயிறு குலுங்க சிரிக்கும்போது அது உடலில் உள்ள செல்கள் மற்றும் தொற்று எதிர்ப்பு ஆன்டிபாடிகளின் உற்பத்திகளை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
5. விரைவான கலோரி எரிப்பு: 10 முதல் 12 நிமிடங்கள் சிரிக்கும்போது தோராயமாக 40 கலோரிகள் எரிக்கப்படும். இது காலப்போக்கில் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. தினமும் வாய் விட்டு சிரிக்கும் ஒருவரது உடல் எடை விரைவில் குறையும்.
6. சுவாச நன்மைகள்: ஆழ்ந்த சிரிப்பு ஆழ்ந்த சுவாசத்தை ஊக்குவிக்கிறது. இது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் திறம்பட செயல்படுகின்றன.
மனநல நன்மைகள்: வயிறு குலுங்க சிரிப்பது நல்வாழ்வு உணர்வை ஊக்குவிப்பதன் மூலம் மனநிலையை உயர்த்துகிறது. மனச்சோர்வு மற்றும் பதற்றம் போன்ற உணர்வுகளைக் குறைக்கிறது. ஒரு மனிதனின் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும். ஒருவரது சவாலான சூழ்நிலைகளில் கூட நேர்மறையான கண்ணோட்டத்தை பராமரிக்க உதவுகிறது.
அறிவாற்றல் மேம்பாடு: நினைவாற்றலை மேம்படுத்தி ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தருகிறது. மேலும், சிக்கல் தீர்க்கும் திறனையும் மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக சிறந்த மன செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது.
சமூகத் தொடர்பு: சிரிப்பு சமூகப் பிணைப்புகளை வளர்க்கிறது. தனி மனிதர்களிடையே நட்புறவு மற்றும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒருவருக்கொருவர் உறவுகளை மேம்படுத்த உதவுகிறது. சிரிப்பு என்பது தொற்றிக் கொள்ளக்கூடியது. சமூக அமைப்புகளில் மிகவும் சாதகமான சூழலை உருவாக்கி மற்றவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.