
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 அன்று ‘இந்தியத் தியாகிகள் நாள்’ (India Martyrs' Day) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி மறைந்த ஜனவரி 30 ஆம் நாளில், இந்திய விடுதலைக்காகத் தங்கள் உயிரைத் தந்த விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஜனவரி 30
மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸே என்பவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 அன்று, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக, தியாகிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது.
இன்றைய நாளில், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் ராஜ்காட் நினைவிடத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் கூடி இந்தியத் தியாகிகள் மற்றும் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகின்றனர். உயிர்த் தியாகம் செய்த இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் நினைவாக மக்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துகின்றனர். இந்த நாளில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழாக்களை ஏற்பாடு செய்து, மாணவர்கள் தேசபக்திப் பாடல்கள் பாடுதல், தேசப்பற்று நாடகங்கள் நடத்துதல் மற்றும் மகாத்மா காந்தி அவர்களின் அறப்போராட்டங்களை நினைவு கூரும் நிகழ்வுகளை நடத்துகின்றனர்.
இந்தியாவில் மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30 மட்டுமின்றி, இந்தியாவில் மேலும் சில நாட்கள், தியாகிகள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.
மார்ச் 23
இந்திய விடுதலைப் போராட்ட வீரரான லாலா லஜபதி ராயை பிரித்தானிய இந்தியக் காவல்துறையினர் அடித்துக் கொன்றமைக்குப் பழி வாங்க, இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற இயக்கத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு மூவரும் ஆங்கிலேயக் காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்சைக் கொன்றனர். காவல் துறை அதிகாரியைக் கொன்ற வழக்கில், பிரித்தானிய இந்திய அரசின் நீதிமன்றம், ராஜகுரு, பகத்சிங் மற்றும் சுக்தேவ் மூவருக்கும் விதித்த தூக்கு தண்டனை தீர்ப்பின்படி, 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 அன்று மூவருக்கும் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மகாத்மா காந்தியின் அகிம்சை தொடர்பான கொள்கைகளில் இருந்து மாறுபட்டு, புரட்சி வழியைத் தேர்வு செய்து செயல்பட்ட இவர்களின் பங்கும் இந்திய விடுதலைக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, இந்தத் துணிச்சலான, இளம் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூரும் வகையில், மூவரும் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 அன்றும், இந்தியத் தியாகிகள் நாள் கொண்டாடப்படுகிறது.
மே 19
அசாம் மாநிலத்திலிருக்கும் பராக் பள்ளத்தாக்கின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் சில்ஹெட்டி மொழி பேசும் வங்காளிகளாக இருந்தாலும், 'அஸ்ஸாமி'யை மாநிலத்தின் ஒரே அலுவல் மொழியாக மாற்றும் அஸ்ஸாம் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில், 1961 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி சில்சார் ரயில் நிலையத்தில் மாநில காவல்துறையால் 15 பேர் கொல்லப்பட்டனர். அவர்களை நினைவு கூரும் வகையில் அசாமில் மே 19 ஆம் நாளில் தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஜூலை 13
காஷ்மீர் மகாராஜா ஹரி சிங்கின் ஆட்சிக்கு எதிராக, 1931 ஆம் ஆண்டு ஜூலை 13 அன்று அரசப் படை வீரர்களால் கொல்லப்பட்ட 22 பேரை நினைவு கூரும் வகையில், காஷ்மீரில் ஜூலை 13 அன்று, தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
நவம்பர் 17
'பஞ்சாப் சிங்கம்' என்று அழைக்கப்பெற்ற இந்திய விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராய், 1928 ஆம் ஆண்டில் சைமன் கமிஷன் லாகூருக்குச் சென்ற போது, அதற்கு எதிராக நடைபெற்ற ஒரு அகிம்சைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அப்போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறை பயங்கரமான தடியடி மூலம் தாக்கியது. அத்தாக்குதலில், லாலா லஜபதி ராய் கடுமையாகக் காயமடைந்தார். அதன் பின்னர், அவர் 1928 ஆம் ஆண்டு, நவம்பர் 17 அன்று மாரடைப்பால் இறந்தார். அவர் மறைந்த நாளான நவம்பர் 17 ஆம் நாளை, தியாகிகள் நாளாக ஒடிசா கடைப்பிடிக்கிறது.
நவம்பர் 19
1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது, மராத்தாவை ஆட்சி செய்த ஜான்சி சமஸ்தானத்தின் பெரிய ராணி தனது உயிரைத் தியாகம் செய்தார். 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் இறந்த அனைவரின் பங்களிப்பையும் நினைவு கூரும் வகையில், ஜான்சி ராணி, ராமி லட்சுமிபாயின் பிறந்த நாளான நவம்பர் 19 ஆம் நாள், தியாகிகள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
நவம்பர் 24
ஒன்பதாவது சீக்கியக் குருவான தேக் பகதூர், முஸ்லீம் அல்லாதவர்களின் கட்டாய மதமாற்றத்தை எதிர்த்தார். அதனால் கோபமுற்ற முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பால் 1675 ஆம் ஆண்டில் நவம்பர் 24 அன்று சீக்கியக் குரு தேக் பகதூரைத் தூக்கிலிட்டுக் கொன்றார். சீக்கிய சமூகத்தினர், தேக் பகதூரின் நினைவு நாளான நவம்பர் 24 ஆம் நாளை தியாகிகள் நாளாகக் கடைப்பிடிக்கின்றனர்.
இந்தியாவில் ஆண்டுக்கு ஏழு நாட்கள் தியாகிகள் நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட்டாலும், இந்திய தேசியத் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தி அவர்களது நினைவு நாளான ஜனவரி 30 ஆம் நாளில், இந்தியா முழுவதும் ‘தியாகிகள் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.