

அன்பின் மற்றொரு வெளிப்பாடு கனிவு. கனிவுடன் மற்றவர்களுடன் சிறிது நேரத்தை செலவிடுதல், பிறருக்கு உதவி செய்தல், சேவை செய்தல் என கனிவுடன் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதுடன் உங்கள் ஆயுளையும் மேம்படுத்துகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
கனிவுடன் நீங்கள் மற்றவர்களுக்கு ஏதேனும் உதவும்போது உங்கள் மூளையில் ‘டோபோமைன்' சுரக்கிறது. இது உங்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி மனதை இயல்பாக வைத்திருக்க செய்கிறது. இதனால் உங்கள் இளமை நீட்டிக்கப்படுகிறது. மேலும், இரத்தத்தில் குளூக்கோஸ் அதிகரிக்கும் ஆபத்தும், இருதய அழற்சி பாதிப்புகளும் குறையும் என்கிறார் டாக்டர் டேவிட் ஆர்.ஹாமில்டன். இவர், ‘தி 5 சைடு எஃபெக்ட் ஆப் கைன்டுனஸ்' என்ற புத்தகத்தை எழுதியவர்.
பொதுநல சேவையில் ஈடுபடுவதால் சிறிய வயதில் மரணமடையும் வாய்ப்பு 32 சதவீதம் குறைகிறது. மேலும், 38 சதவீதம் மருத்துவமனைக்கு சொல்வதை தவிர்க்கும் சூழல் உருவாகும் என்கிறார்கள் இண்டியானா பல்கலைக்கழக உளவியல் ஆராய்ச்சியாளர்கள். கனிவுடன் செயல்படுகிறவர்களுக்கு அழற்சி தொடர்பான மரபணு செயல்பாடு குறைவாக இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. இதனால் புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் மூட்டு நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது என்கிறார்கள்.
பிறருக்கு நீங்கள் கனிவுடன் உதவும்போது மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது. காது கேட்கும் திறன் அதிகரிக்கிறது. நல்ல தூக்கம் மற்றும் இரத்த அழுத்தம் குறைவு போன்ற நல்ல பலன்கள் கிடைக்கின்றன. நீங்கள் கனிவுடன் நடந்து கொள்ள நடந்து கொள்ள, அது உங்கள் ஒவ்வொரு செல்களிலும் பதிவாகிறது. மகிழ்ச்சி அளிக்கும் அந்த செல்கள் திரும்பத் திரும்ப உங்களை கருணை செய்ய அது தூண்டுகிறது என்கிறார்கள். அது உங்களின் மரபணுக்களை கூட மாற்றும் ஆற்றல் உடையது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எப்போதாவது கனிவுடன் நடந்து கொண்டாலும் இதே பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இப்படிப்பட்ட பலன்கள் கிடைக்க உங்களின் அன்றாட வாழ்வில் இவற்றை செய்து வாருங்கள்.
நீங்கள் சந்திக்கும் அனைவருக்கும் முடிந்த மட்டும் ‘ஹலோ’ என்று வணக்கம் தெரிவியுங்கள். தாகமாக இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுங்கள். வயதானவர்களுக்கும், முடியாதவர்களுக்கும் படிகள் ஏறி வர, பஸ்கள் மற்றும் கார்களில் ஏறவும், இறங்கி வரவும் உதவுங்கள். வாழ்வில் நிம்மதியை தொலைத்தவர்களுக்கு ஆறுதலாக வழிகளைக் கூறுங்கள். ஒருவர் தன்னிலை விளக்கம் கொடுத்து பேசும்போது குறுக்கே பேசாதீர்கள். அவர் கூறுவதை கவனமாக, முழுமையாகக் கேளுங்கள். நீங்கள் தவறு செய்யும்போது தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். முடிந்தளவு மற்றவர்களை பாராட்டி மகிழுங்கள். முடிந்தளவு நண்பர்களுக்கு அவர்களுக்குப் பிடித்தவற்றை பரிசாகக் கொடுத்து மகிழ்ச்சிபடுத்துங்கள்.
ஒரு கியூவில் நீங்கள் நிற்கும்போது அவசரம் கருதி ஒருவர் முன்னால் செல்லக் கேட்டால் தயங்காமல் அனுமதியுங்கள். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் அனைவரும் முக்கியமானவர்கள். உங்கள் அலுவலக செக்கியூரிட்டி முதல் கடைசி வரை உள்ளவர்கள் அனைவரின் பெயர்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறருக்குக் கடிதம் எழுதும்போதும் சரி, பிறரிடம் பேசும்போதும் சரி கோபமான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்கள் புரளி பேசினாலும், நீங்கள் அமைதியாக இருங்கள். மற்றவர்களை மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எந்தவொரு பிரச்னையும் மறுபடியும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
கனிவு ஒரு போதை, இதனால் ஹேங் ஓவர் ஆவதில்லை. ஆனால், அது உங்கள் இதயத்திற்கு இதமளித்து உங்களை இளமையாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. எனவே, அன்றாட வாழ்வில் கனிவுடன் நடக்க சில நிமிடங்களை ஒதுக்குங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.