

இந்தியாவில் பிறந்து, இங்கிலாந்து நாட்டில் ஆய்வு செய்து, அமெரிக்காவில் குடியேறிய பின்னர் நோபல் பரிசைப் பெற்ற இரண்டாவது தமிழர், ‘இந்தியாவின் ஐன்ஸ்டீன்’ என்று புகழப்படும் சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி லாகூரில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தார். அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிகம் படித்தவர்கள். இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிப்பதை கெளரவமாகக் கருதியவர்கள்.
பள்ளியில் படிக்கும்போதே சந்திரசேகர் திறமையான மாணவராக விளங்கினார். எல்லா பாடத்திலும் முதல் மதிப்பெண் பெற்றவர். சில வேளைகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கே பாடம் சொல்லித் தந்து சந்தேகங்களை தீர்த்து வைப்பார். 1928ம் ஆண்டு சென்னை பிரிசிடென்சி கல்லூரியில் தன்னுடைய 18 வயதில் பட்டப்படிப்பை முடித்தார். அப்போதே உலகப் புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகளான பெர்மி, நீல் பேர் போன்றவர்களின் தியரிகளை கற்றுத் தேர்ந்தார்.
அர்னால்ட் சம்மர் ஃபீல்டு என்ற அறிவியல் மேதை இந்தியா வந்திருந்தபோது அவர் முன்னிலையில் தன்னுடைய முதல் அறிவியல் கட்டுரையை வாசித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்த சயின்ஸ் காங்கிரஸ் கூட்டம் அவருடைய மாமா புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி முதல் முறையாக இந்தியாவிற்கு நோபல் பரிசைப் பெற்று தந்த சர் சி.வி.ராமன் தலைமையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
1930ம் ஆண்டு சந்திரசேகர் தன்னுடைய இயற்பியல் துறை பட்டப்படிப்பை முதல் மாணவராகத் தேர்வு பெற்று முடித்தார். அதனால் இந்திய அரசின் ஸ்காலர்ஷிப் பெற்று இங்கிலாந்திற்கு உயர் கல்வி படிக்கச் சென்றார்.1933ம் ஆண்டு தன்னுடைய இயற்பியல் துறை டாக்டர் படிப்பை புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இது அவரின் இள வயதான 23 வயதில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் லலிதா என்ற பெண்ணை மணந்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் இருந்தபோதே சர் ஆர்தர் எடிங்டன் எனும் புகழ் பெற்ற விஞ்ஞானியுடன் கருத்து மோதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் அவர் திறமையை கண்டு வியந்து பாராட்டியவர். பின்னர் அவர் மீது கொண்ட பொறாமையால் சந்திரசேகர் மீது தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்தினார். ‘ரிலேடிவிஸ்டிக் சமன்பாடு’ பற்றிய அவருடைய புகழ் பெற்ற தனியுரிமை அறிவியல் மற்றும் கணிதவியல் அறிஞர்கள் ஆதரித்தபோதிலும் ஆர்தர் மட்டும் எதிர்த்தார்.
1937ம் ஆண்டு வரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்தார். பின்னர் சிகாகோ கல்லூரியில் சேர்ந்தார். அதன் பின்னர் ஆர்.கேஸ். வானிலை மையத்தில் 27 வருடங்கள் பணிபுரிந்தார். அந்த சமயத்தில்தான் ஜோதிடம் சம்பந்தப்பட்ட ‘அஸ்ட்ரோ பிசிக்ஸ் ஜர்னல்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அதன் பின்னர் அவர் தலைமையில் ஜோதிட இதழ் ஒன்று 1952 முதல் 1971 வரை வந்தது.
சந்திரசேகர் கடினமான உழைப்பாளி மற்றும் தீவிரமான விஞ்ஞானி. அதையே தனது சக விஞ்ஞானிகளிடமும் ஏற்படுத்தினார், வலியுறுத்தினார். இதனால் பல விருதுகளை தனது திறமைக்காகப் பெற்றார். 1953ம் ஆண்டு அமெரிக்காவின் நேஷனல் மெடல் ஆப் சயின்ஸ் பெற்றார். 1966ல் அமெரிக்க நேஷனல் அகடமி ஆஃப் சயின்ஸ் சந்திரசேகருக்கு ‘ஹென்றி டிராபர்’ மெடலை வழங்கியது.1974ம் ஆண்டு புரூஸ் தங்க மெடலை ‘அஸ்ட்ரனமிக்ஸ் செசைட்டி ஆப் பசிபிக்’ வழங்கியது. சுப்பிரமணியன் சந்திரசேகர் அமெரிக்கவாழ் இந்தியராக இருந்தாலும், அவரை இந்திய அரசு பெருமைப்படுத்தி 1968ல் பத்மபூஷன் விருது வழங்கியது.
நட்சத்திரங்கள் பிறக்கின்றன. அவை அழிந்தும் போகின்றன..நட்சத்திரங்களுக்கு சக்தி அளிப்பது அதில் உள்ள ஹைட்ரஜன்தான். அது தீரும்போது நட்சத்திரங்கள் பலம் இழக்கின்றன. இதனால் ஈர்ப்பு விசை அதிகமாகி கொஞ்சம் கொஞ்சமாக தாமாக அழியும் நிலை ஏற்படுகிறது. ஒரு நட்சத்திரம் அழிந்து போவதோ அல்லது உடைந்து நொறுங்குவதோ என்பது அதன் எடையைப் பொறுத்து அமைகிறது. இவ்வாறு ஒரு நட்சத்திரம் அழிந்து போவதற்கு உரிய 1.4 சூரியனின் எடை என்ற கணக்குதான் ‘சந்திரசேகர் லிமிட்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பிற்காக, சுப்பிரமணியன் சந்திரசேகருக்கு 1983ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வில்லியம் ஃபௌலருடன் இணைந்து இந்த விருதை அவர் பெற்றார். நோபல் பரிசைப் பெற்ற பின்னர் இந்தியா வந்தார் சந்திரசேகர். அப்போது இந்திய வானொலி நிலையத்தில் நடந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது, ‘இந்திய இளம் விஞ்ஞானிகளுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்’ என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘அறிவுரை கூறுவது என்பது கத்தி விளிம்பில் நடப்பதற்கு சமம். மக்களில் இரு வகையான முட்டாள்கள் உள்ளனர். ஒன்று அறிவுரை கூறுபவர்கள், மற்றொன்று அறிவுரையை கேட்காதவர்கள்’ என்றார்.
1980ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முழுநேரப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற அவர் தொடர்ந்து சிகாகோவில் வசித்து வந்தார். மேலும், அவரது அறிவியல் புத்தகங்களின் வெளியீடு தொடர்ந்தது. அவரது இறுதிப் புத்தகம் நியூட்டனின் ‘பிரின்சிபியா ஃபார் தி காமன் ரீடர்’ ஆகும். இது அவர் இறப்பதற்கு சற்று முன்பு வெளியிடப்பட்ட ஒரு தலைசிறந்த படைப்பாகும். சுப்பிரமணியன் சந்திரசேகர் ஆகஸ்ட் 21, 1995 அன்று தனது 84 வயதில் மாரடைப்பால் இறந்தார். நாசா அவரை பெருமைபடுத்த உலகின் மிக உயர்ந்த டெலஸ்கோபிற்கு ‘சந்திரா’ என்று பெயரிட்டது. அதனை கொலம்பியா விண்கலம் தனது ஆய்விற்கு எடுத்துச் சென்றது.