ஆகஸ்ட் 12 இந்திய தேசிய நூலக நாள்: நம் தமிழ்நாட்டில் இத்தனை நூலகங்களா? நாமும் உறுப்பினராவோம்!
இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் நாளன்று, ‘தேசிய நூலக நாள்’ (National Library Day) கொண்டாடப்பட்டு வருகிறது. ‘இந்திய நூலக அறிவியலின் தந்தை’ என்று போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த நாளான ஆகஸ்ட் 12ஆம் நாள், தேசிய நூலக நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சீர்காழியில் இராமாமிர்த ஐயர் - சீத்தாலட்சுமி இணையர்களின் முதல் மகனாக 1892 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று பிறந்த சீ. இரா. ரங்கநாதன் கணிதவியலாளரும், நூலகவியலாளரும் ஆவார். இவரால் 1931 ஆம் ஆண்டில்,
1. நூல்கள் பயன்பாட்டுக்கானவை,
2. ஒவ்வொரு வாசகருக்கும் அவரது நூல்,
3. ஒவ்வொரு நூலுக்கும் அதன் வாசகர்,
4. வாசகருடைய நேரத்தைச் சேமிக்க வேண்டும்,
5. நூலகம் ஒரு வளரும் உயிரினம்
என்கிற நூலகவியலின் ஐந்து விதிகள் முன்மொழியப்பட்டன. இவை, நூலக முறைமை ஒன்றை இயக்குவதற்கான கொள்கைகளை விளக்குகின்றன. உலகம் முழுவதிலும் உள்ள பல நூலகர்கள் இவற்றைத் தமது கொள்கைகளுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.
இதேப் போன்று நூலகங்களில் நூல்களை வகைப்படுத்துவதற்கான ‘கோலன் வகைப்படுத்தல்’ எனும் அறிவியல் வழியிலான புதிய முறையை உருவாக்கியவர். நூலகவியலில் இவரது அடிப்படையான சிந்தனைகள் மூலம் உலகிலுள்ள அனைத்து நூலகர்களிடமும் பெயர் பெற்றவர். நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு, 1957 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்தது. மேலும், இவரது பிறந்த நாளை, இந்திய அரசு, ‘தேசிய நூலக நாள்’ என்று அறிவித்தது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் 12191 நூலகங்களுடன் முதலிடத்தில் இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து, கேரளா - 8415 , கர்நாடகா - 6798, மேற்கு வங்காளம் - 5 251, தமிழ்நாடு - 4635, குஜராத் - 3464 நூலகங்கள் என்று முதல் ஆறு இடங்களுக்குள் இருக்கின்றன. மற்ற மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகள் ஆயிரத்துக்கும் குறைவான நூலகங்களையேக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் மாநிலம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் அதிக நூலகங்களைக் கொண்டிருக்கும் மாநிலமாக தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் கன்னிமாரா பொது நூலகம் - 1, அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் - 2, மாவட்ட மைய நூலகங்கள் - 32, கிளை நூலகங்கள் - 1926, நடமாடும் நூலகங்கள் -14, ஊர்ப்புற நூலகங்கள் - 1915, பகுதி நேர நூலகங்கள் - 745 என்று மொத்தம் - 4635 நூலகங்கள் இருக்கின்றன.
தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் - 1948 ஐ அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. அதன் பின்னர், பொது நூலகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 1972-ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. தமிழகமெங்கும் மாவட்ட நூலக ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலேக் குறிப்பிட்ட கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் மைய, கிளை, ஊர்ப்புற , பகுதி நேர மற்றும் நடமாடும் நூலகங்கள் செயல்படுகின்றன.
பொது நூலகச் சேவையானது, தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சாரக் கருப்பொருளை மையமாகக் கொண்டு, கீழ்க்காணும் செயல்பாடுகளை நோக்கங்களாகக் கொண்டிருக்கிறது.
* குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்துதல்.
* அனைத்துத் தரப்பினருக்கும் சுயகல்வி மற்றும் முறையான கல்விக்கு துணை நிற்றல்.
* தனிமனிதப் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
* குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கற்பனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுதல்.
* பாரம்பரியக் கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கலைகள், அறிவியல் சாதனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்.
* நடத்துக் கலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல்.
* அனைத்து தரப்பினருக்குமான கலை, இலக்கிய, கல்வி சார்ந்த செயல்பாடுகளில் பங்கெடுத்தல்.
தமிழ்நாட்டிலுள்ள நூலகங்களில் ரூபாய் ஆயிரம் செலுத்துபவர்கள் நூலகப் புரவலர்களாகவும், ரூபாய் ஐந்து ஆயிரம் செலுத்துபவர்கள் பெரும் புரவலராகவும், பத்து ஆயிரம் செலுத்துபவர்கள் கொடையாளர்களாகவும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
இதேப் போன்று, நூலகம் அமைந்துள்ள பகுதியில் இருப்பவர்கள் அந்த நூலகத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். உறுப்பினர்களாகச் சேர விரும்புபவர்கள், நூலகத்திற்கான உறுப்பினர் படிவத்தை நிரப்பி, அந்தப் பகுதியில் குடியிருப்பதற்கான ஆதாரமாக, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, நிரந்தர வருமானவரி அட்டை, மாணவர் அடையாள அட்டை, தொழிலுக்கான அடையாள அட்டை ஆகியவற்றுள் ஒன்றைச் சான்றுக் கையொப்பமிட்ட நகல் இணைத்துக் கொடுத்து, உரிய கட்டணங்களைச் செலுத்தி நூலக உறுப்பினராக இணைந்து கொள்ள முடியும்.
இதுவரை நூலகங்களில் உறுப்பினராகத் தங்களை இணைத்துக் கொள்ளாதவர்கள், இந்திய தேசிய நூலக நாளில் மேற்காணும் வழிமுறையினைப் பின்பற்றி உறுப்பினர்களாகத் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.