ஆகஸ்ட் 9: பன்னாட்டு உலகப் பழங்குடியினர் நாள் - இவர்களுக்கு நாம் இடையூறு செய்யாமல் இருந்தாலேப் போதும்!

International Day of the World's Indigenous Peoples
International Day of the World's Indigenous Peoples
Published on

உலகப் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் நாள், பன்னாட்டு உலகப் பழங்குடியினர் நாளாகக் (International Day of the World's Indigenous Peoples) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலகப் பிரச்சினைகளை மேம்படுத்த பழங்குடி மக்கள் செய்யும் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளையும் இந்த நிகழ்வு அங்கீகரிக்கிறது. 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஆகஸ்ட் 9 ஆம் நாளைப் பன்னாட்டுப் பழங்குடியினர் நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடிப்பது என்று ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

அதனைத் தொடர்ந்து, உலகமெங்கும் உள்ள பழங்குடியினர் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் இந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கடவுளுக்கு முன் தோன்றியவர்கள் நாங்கள் என்று பெருமிதம் கொள்ளும் பூர்வகுடி மக்களின் இருப்பைத் தக்க வைக்க உலக நாடுகள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டிய அவலநிலை உள்ளதைத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பு தெளிவுபடுத்தியது. 

பழங்குடிகள் என்போர், ஒரேப் பண்பாட்டுக்கு உரியவர்களாகவும், ஒரே மொழியை அல்லது கிளை மொழியைப் பேசுபவர்களாகவும், பொது வரலாற்றைக் கொண்டவர்கள் என்ற உணர்வு கொண்டவர்களாகவும், மையப்படுத்திய அதிகார அமைப்பு இல்லாதவர்களாகவும் உள்ள ஒரு குழுவினர் எனப் பொதுவாக வரையறுக்கப்படுகிறது. இக்குழுக்கள் குலங்களையும் (Bands), கால்வழி (Lineages) உறவுக் குழுக்களையும் தம்முள் அடக்கியவை. 

பொதுவாகப் பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனிப் பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள், சமயம், மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள்.

தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்காலத் தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். 

இதையும் படியுங்கள்:
நியூசிலாந்தின் மாவோரி பழங்குடி மக்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?
International Day of the World's Indigenous Peoples

உலகம் முழுவதும் வாழும் பழங்குடியினர் பற்றிய துல்லியமான கணக்கெடுப்புகள் எதுவும் இல்லையென்றாலும், சுமார் 37 கோடி பழங்குடியின மக்கள் 90 நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்ற புள்ளி விவரங்கள் கிடைக்கின்றன. இது உலக மக்கள் தொகையில் 6 சதவீதத்திற்கும் குறைவு எனினும், இவர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு அதிகமான பண்பாடுகளைக் கொண்டவர்களாகவும், 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட மொழிகளைப் பேசுபவர்களாகவும் இருக்கின்றனர். 

உலகில் வாழும் பழங்குடிகளில், நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பழங்குடிகள் இந்தியாவிலேயே வாழ்கின்றனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் பழங்குடியினர் வாழ்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 36 பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சுமார் 8 லட்சம் மக்கள் வாழ்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

பழங்குடியின மக்கள் தலைமுறை தலைமுறையாகத் தங்களின் பண்பாடுகளையும், வாழ்வியலையும் இயற்கையுடன் இணைந்து காப்பாற்றி வாழ்கின்றனர். இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெற்ற தங்கள் பாரம்பரிய அறிவின் மூலமாக இயற்கையிடம் இருந்தே உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் அனைத்தையும் பெற்று வாழ்கின்றனர். இன்று பெரும்பாலான மலைகள், காடுகள் அழிக்கப்படுவதால் பழங்குடிகளின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படுகின்றன. இதன் காரணமாக, அவர்கள் வாழ்க்கை போராடும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
அந்தமான் பகுதியில் வாழும் மர்மப் பழங்குடி மக்கள் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா?
International Day of the World's Indigenous Peoples

இதே போன்று, பெருவாரியாக அழியும் நிலையிலுள்ள மொழிகளைப் பேசுவது பழங்குடியினரே. இரண்டு வாரத்துக்கு ஒரு பழங்குடியின மொழி அழிவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், அவர்களது பண்பாடும், மரபு வழியும் அழியும் விளிம்பில் உள்ளன. பழங்குடியினர் என்பவர்கள் மனித சமூகத்தின் ஆதி வடிவம், இவர்களிடம் தனித்த மொழி, கலாச்சாரங்கள் இருந்தாலும் இவர்களிடம் மத அடையாளங்கள் எதுவும் இல்லை என்பதே இதற்கான சான்று. இவர்கள் பெரும்பாலும் இயற்கையை வணங்கும் முறையையேக் கடைபிடிக்கின்றனர். உலகம் முழுவதும் வாழும் பெரும்பாலான பழங்குடி மக்களின் கடவுள் என்பது இயற்கையே.

நாகரீகமடைந்த மனிதர்கள், தங்களின் தேவைகளுக்காகப் பழங்குடியின மக்களின் வாழிடங்களான காடுகளை அழித்து, இயற்கையை முற்றிலுமாகச் சிதைத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போதையக் காலத்தில் நாகரீக மனிதர்களிடமிருந்து இயற்கையையும், பழங்குடியின மக்களையும் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

பழங்குடியினருக்கான இந்நாளில், அவர்களது வாழ்வை மேம்படுத்தாவிடினும், அவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருந்தாலேப் போதுமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com