
தாவரங்களில் மிகவும் ஆச்சரியமூட்டுவது, அதிசயமானது என்றால் அது மூங்கில் தான். புல் வகையைச் சேர்ந்த இந்தத் தாவரத்தின் வளர்ச்சி படுவேகம். 24 மணி நேரத்தில் 4 அடி உயரம் வளர்ந்து விடும். 3 வருடங்களில் முழு வளர்ச்சி பெறும்போது 120 அடி உயரத்தை எட்டி விடுகிறது. சாதாரணமாக நீளமாக வளரும் மூங்கில் 1904ம் ஆண்டு மிகப்பெரியதாக திருவிதாங்கூர் பட்டாழியில் வளர்ந்தது. அந்த மூங்கில் சாய்ந்து விழுந்தபோது அதன் நீளம் 122 அடி இருந்தது. இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதில் கிட்டத்தட்ட 1000 வகைகள் உள்ளன. அண்டார்டிகா கண்டம் தவிர, வேறு எல்லா இடங்களிலும் மூங்கில் வளரும். 13 ஆயிரம் அடி உயரத்தில் கூட மூங்கிலை வளர்க்க முடியும். எந்தத் தாவரமாக இருந்தாலும் அதன் வளர்ச்சியை கண்கூடாகப் பார்க்க முடியாது. ஆனால், மூங்கில் மரத்தின் வளர்ச்சியை மட்டும் கண்கூடாகப் பார்க்கலாம். மூங்கில் நம் கண்ணெதிரில் ‘பட்டப்’ என சத்தத்துடன் புடைத்து வளரும். மூங்கில் மரங்கள் 30 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை உடையது. மூங்கிலின் வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் ஆதரவு ஆகியவற்றிற்காக இது பல்வேறு துறைகளில் பயன்படுகிறது.
உலக மூங்கில் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 18ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. மூங்கில் விரைவாக வளர்வதால், குறைந்தபட்ச நீர் இருந்தாலே போதும். இதனை தாவரத்தின் வேர் அமைப்புக்கு தீங்கு விளைவிக்காமல் அறுவடை செய்யலாம். மூங்கில்களில் 30 பிரிவுகளும் அதில் 550 இனங்களும் இருக்கின்றன. மூங்கிலில் 320 இனங்கள் ஆசியாவிலும்,170 இனங்கள் தென் அமெரிக்காவிலும் உள்ளன. இந்தியாவில் மட்டுமே 130 இனங்கள் உண்டு. மியான்மர், மலேசியா, சீனா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆப்பிரிக்காவிலும் இவை நன்றாக வளர்கிறது. இமயமலைத் தொடரில் 12,000 அடிகள் வரை ஏறக்குறைய பனிக் கோட்டின் அருகே வரையிலும் மூங்கில்கள் வளர்கின்றன. மூங்கிலில் பூக்கள் பூத்த பிறகு அதில் அரிசி உருவாகும். அதை மூங்கில் அரிசி என்கிறார்கள். அது மருத்துவ குணங்கள் அதிகம் கொண்டது.
மூங்கில் அரிசியை பொறுத்தவரை, பச்சை நிறத்தில் வாசனையுடன், இனிப்பாக இருக்கும். கோதுமை சுவையுடன் உள்ள இந்த மூங்கிலரிசியில், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் போன்றவை நிறைந்திருக்கும். கொழுப்பு கொஞ்சமும் இருக்காது. ஒரு கப் மூங்கில் அரிசியில் 160 கலோரிகள் இருக்கிறதாம். மற்ற அரிசிகளை விட இந்த அரிசியில் புரதச்சத்து அதிகமாக உள்ளதுடன், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், லினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம் போன்றவையும் அடங்கியிருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக இதை உட்கொள்ளலாம்.
இது மற்ற மரங்களை விட அதிக ஆக்ஸிஜனை உருவாக்குகிறது மற்றும் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை சமநிலையில் வைக்கிறது. காற்று மாசு தவிர்க்க அதிகளவில் மூங்கிலை வளர்க்க வேண்டும் என்கிறார்கள். இதற்கு நீர்ப்பாசனம் தேவையில்லை. இது மண் அரிப்பைத் தடுக்க சிறந்தது.
மூங்கிலை வியட்நாம் நாட்டினர் ‘சகோதரன்’ என்கிறார்கள். சீனர்கள் ‘நண்பன்’ என்கிறார்கள். தாமஸ் ஆல்வா எடிசன் பல்பிற்கு முதல் முறையாகப் பயன்படுத்தியது மூங்கில் இழையைத்தான். ஜப்பான் நாட்டில் தோட்டத்தில் நீர்க்குழாய்களாக மூங்கிலை பயன்படுத்துகிறார்கள். இன்று, உலகில் அதிகமான மக்கள் மூங்கில் வீடுகளில் வசிக்கின்றனர். மூங்கில்கள் 16 டன் எடையுள்ள லாரிகளைத் தாங்கும் திறன் கொண்டது.
புல்லாங்குழல் தவிர வேறு பல வாத்தியங்கள் செய்யவும் இது பயன்படுகின்றது. வீடுகளுக்கு கூரைகள் வேய, ஆற்றைக் கடக்கும் ஓடங்களாக, பிரம்பு நாற்காலிகள் செய்ய என் பல வகைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. மீன் பிடி தூண்டிலுக்கு மூங்கில்தான் மிகவும் பயன்படுகிறது. மூங்கில் இலை, தண்டு மருந்தாகப் பயன்படுகிறது.
குமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும், வட மாநிலங்களில் மிசோரம், திரிபுரா, மணிப்பூர், அசாம், நாகாலாந்து பகுதிகளிலும் அதிகமாக மூங்கில் வளர்கிறது. மூங்கில் மரங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூக்கும் தன்மை கொண்டவை. பூத்தால் அவ்வளவுதான்.அதன் பின் அதற்கு வளர்ச்சி கிடையாது. பட்டுப்போய் விடும்.
உலகில் சில வகை மூங்கில் மரங்கள் 3 வருடங்களுக்கு ஒருமுறை பூ பூக்கும். சில 120 வருடங்களுக்கு ஒரு முறை பூ பூக்கும். இப்படிப் பட்டுப் போவதை வட மாநிலங்களில் மக்கள் கெட்ட சகுனமாகக் கருதுகின்றனர். மூங்கில் பூ பூத்தால் நாட்டில் பசி, பஞ்சம் நிலவும், தீயவை நடக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால், அதெல்லாம் வீண் பயம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.