
கிறிஸ்தவ தமிழ் இலக்கிய விழா மே 12, 13 ஆம் தேதி வரும் (திங்கட்கிழமை) மற்றும் மறுநாள் (செவ்வாய்க் கிழமை) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை கொழும்பிலுள்ள தேசிய நூலகத்தில் (சுதந்திர சதுக்கம் அருகில்) நடைபெற உள்ளது.
அவ்வாறாக உரைநடை, நவீன இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, மொழிபெயர்ப்பு, மொழியியலாளர்கள், அகராதி மற்றும் பல வகைகளை உள்ளடக்கிய புதிய தமிழ் எழுத்துரு அமைப்பை அறிமுகப்படுத்தி பல புத்தகங்கள் வெளியிடப்பட்டதோடு, கிறிஸ்தவ கவிஞர்களால் தமிழில் பல கவிதைகள் எழுதப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. அத்தோடு கிறிஸ்தவர்கள் கருத்தரங்குகள் பலவற்றை நடத்தியும் தமிழுக்கும், கிறிஸ்தவ இலக்கியத்திற்கும் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அவ்வாறாக அந்த காலத்திலிருந்தே பல இலக்கியங்களை பாதுகாத்து பதிவு செய்து வெளியிட்ட கிறிஸ்தவர்கள் மத்தியில் மேலும் இலக்கிய ஆர்வத்தை தூண்டும் விதமாகவும், கிறிஸ்தவ இலக்கியத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் கிறிஸ்தவ இலக்கிய விழா கொழும்பில் இரண்டாவது தடவையாக நடைபெறுகிறது.
விழாவில் கருத்தரங்குகள், எழுத்தாளர்களுக்கான பயிற்சி பட்டறைகள், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், கீர்த்தனை கச்சேரி, சிறந்த இலக்கிய விருது - விருதுகள், பணப்பரிசுகள், நூல் வெளியீடுகள் போன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அத்தோடு புத்தக கண்காட்சிக்கான அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் மற்றும் தங்களது வருகையை பதிவு செய்வதற்கு உலகளாவிய பல தமிழ் வேதவிளக்க நூல்கள், ஆங்கில ஆராய்ச்சி நூல்களின் ஆசிரியர், ஆசியாவில் பல கல்லூரிகளில் இறையியல் கற்பித்துள்ள முனைவர் எம் மார்க் அல்ரோய் அவர்களை markalroy@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், எழுத்தாளர் ரகு (சாந்தி ஜொ) அவர்களை 0761769689 என்ற இலக்கத்தின் ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்.
தேசிய நூலகத்தின் அருமையான சுற்றுசூழலில் நடைபெறும் இவ்விழாவிற்கு, இலங்கை மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் கிறிஸ்தவ தலைவர்களும், கிறிஸ்தவ எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும், இறையியல் கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
முக்கியமாக விழாவில் சிறந்த புத்தகங்களுக்கான தோமஸ் மில்டன் கிறிஸ்தவ இலக்கிய விருது முதல் தடவையாக கிறிஸ்தவ நூல்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. உலகில் தமிழ் கிறிஸ்தவ நூல்களுக்கு இப்படியொரு விருதுகளும், அத்தோடு பரிசுகளும் கொடுக்கப்படுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விழாவில் தேசமானிய கொட்பிறி யோகராஜா (தேசிய இலங்கை இவான்ஜலிக்கல் அலையன்ஸ் தலைவர், ஆசிய இவான்ஜலிக்கல் அலையன்ஸ் தலைவா்) அவா்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
வாசிப்பு பழக்கமே சிந்தனையை தூண்டும். வாழ்வில் மேலோங்க வாசிப்பு வழி வகுக்கும். “புத்தகத்தைப் போல ஒரு விசுவாசமான நண்பன் இல்லை” என்றார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே. இலக்கியத்தின் முக்கியத்துவத்தையும் அதன் பலனையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தான் சர்வ வல்லவர் தன் வார்த்தைகளை புத்தக வடிவில் நம் கையில் தந்துள்ளார். அதுபோல கிறிஸ்தவ இலக்கிய உலகில் தங்களது திறமைகளை வளர்த்து சாதிக்க ஆர்வமுள்ளவர்களும், வாலிபர்களும், மக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு இலக்கியத்தின் பலனையும் அதன் பயனையும் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எழுத்தாளரும், தமிழ்ப் புத்தகாலயம் - தாகம் பதிப்பகம் உரிமையாளரும், தமிழில் முதல் ஞான பீட விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலனின் மகனான கண்ணன் அவர்கள் கிறிஸ்தவ தமிழ் இலக்கிய விழாவிற்கு தனது வாழ்த்துரையை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
“மே மாதம் 12, 13 ஆம் தேதிகளில் தேசிய நூலக வளாகத்தில் (கொழும்பு சுதந்திர சதுக்கம் அருகில்), இலங்கையில் இரண்டாவது முறையாக கிறிஸ்தவ தமிழ் இலக்கிய விழா நடைபெற உள்ளது. இந்த கிறிஸ்தவ தமிழ் இலக்கிய விழா பல தளங்களில் கண்ணுக்கும் கருத்துக்கும், செவிக்கும் சிந்தனைக்கும் விருந்து படைக்க உள்ளது மிக்க மகிழ்ச்சி தருகிறது. நடைமுறை வாழ்வில் இலக்கியத்தின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், கீர்த்தனைக் கச்சேரி பல்வகை நிகழ்ச்சிகள் நமக்குப் பயன்தரும் என்று நம்புகிறேன். இரு மாத காலமாக இந்த இலக்கிய விழாவிற்காக தொடர்ந்து பல நிலைகளிலும் செயல்பட்டு வந்த நண்பர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்! இந்த இலக்கிய விழா, தனது நோக்கத்தை முழுமையாகச் செயல்படுத்தி வெற்றி காண எனது இதயப் பூர்வ வாழ்த்துக்கள்!”