
முதலைகள் கண்கவர் உயிரினங்கள் ஆகும். அவை ‘வாழும் புதை வடிவங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பூமியில் அவை வசிக்கின்றன. முதலைகளை அச்சுறுத்தும் உயிரினங்களாகப் பார்க்கிறார்கள். ஆனால், உண்மையில் அவை சுற்றுச்சூழல் அமைப்புகளை சமநிலையில் வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. துப்புரவுப் பணியில் ஈடுபடுகின்றன. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்களைப் பரப்பாமல் பாதுகாக்கின்றன.
சுற்றுச்சூழல் சமநிலை: முதலைகள் ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படும் உயிரினங்கள். பறவைகள், தவளைகள், ஓட்டு மீன்கள் மற்றும் பிற விலங்குகளை இவை உண்கின்றன. காட்டு முதலைகள் பதுங்கியிருந்து இரையை இறுக்கி பின்னர் அவற்றின் பெரிய தாடைகளைப் பயன்படுத்தி எலும்புகள் மற்றும் சதையை நசுக்குகின்றன.
முதலைகள் சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஈர நிலங்களின் பன்முகத்தன்மை மற்றும் உற்பத்தித் திறனைப் பராமரிக்க முதலைகள் அவசியம் தேவை. மீன்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான நீர்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கின்றன.
உப்பு நீர் முதலை 40 முதல் 50 அல்லது 60 முட்டைகள் வரை இடும். நைல் முதலைகள் 85 முட்டைகள் வரை இடும். சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக சில சமயம் தங்கள் சொந்த குஞ்சுகளை அவை உண்கின்றன. இவற்றின் கழிவுகளை மீன்கள் உண்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் அமைப்பு சமநிலைப்படுத்தப்படுகின்றது.
துப்புரவுப் பணியாளர்கள்: நிலத்தில் காக்கைகள் துப்புரவுப் பணியைச் செய்வது போல முதலைகள் ஆறுகள் மற்றும் ஏரிகளில் உள்ள அழுகும் விலங்குகளின் சடலங்களை உண்கின்றன. இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரப்புவதைத் தடுக்கிறது. இதனால் நீர்நிலைகள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகின்றன. பிலிப்பைன்ஸில் முதலைகள் விவசாயப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதால் உள்ளூர் விவசாயத்திற்குப் பயனுள்ளதாக இருக்கின்றது.
நோய் தடுப்பாளர்: முதலைகள் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கடுமையான செரிமான அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உணவு வாழ்விடங்கள் முதலைகளை நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாவலர்களாக ஆக்குகின்றன. அவை தங்களது இரையின் ஒவ்வொரு பகுதியையும் உண்கின்றன. இதனால் இறந்த உயிர்களின் சதை சிதைவடைவதையும், தீங்கு விளைவிக்கும் தொற்றுகளை பரப்புவதையும் தடுக்கின்றன. இதனால் முதலைகளால் மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் ஏற்படும் நோய்கள் தடுக்கப்படுகின்றன.
விலங்குகளின் பாதுகாவலன்: பெரும்பாலும் நீரிலேயே முதலைகள் இருப்பதால் நிலத்தில் வாழும் விலங்குகள் நீருக்குள் வர அஞ்சும். இதனால் நீர்வாழ் உயிரினங்களை அவை பாதுகாக்கின்றன. வறண்ட காலங்களில் கரையோரங்களில் முதலைகள் துளைகளை உருவாக்கி கூடுகளைக் கட்டுகின்றன. அதனால் மற்ற உயிரினங்களுக்கு தங்குமிடம் மற்றும் அடைக்கலத்தையும் வழங்குகின்றன.
முதலைகளுக்கு ஆபத்து: முதலைகள் வலிமையான உயிரினங்களாக இருந்தாலும் அவை மனிதர்களால் ஆபத்தை எதிர்கொள்கின்றன. அவற்றை சட்டவிரோதமாக மனிதர்கள் வேட்டையாடுவதும் அவற்றின் வாழ்விடங்களை அழிப்பதும் அவற்றை அழிவின் விளிம்புக்குத் தள்ளியுள்ளன. முதலைகளின் எண்ணிக்கை குறையும்போது நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்புகளும் பாதிக்கப்படும். இயற்கையான தொற்றுகளை எதிர்த்து நிற்கும் முதலைகளால் மனித நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. ரசாயனம் கலந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் மாசுபடுத்திகளால் முதலைகள் பாதிக்கப்படுகின்றன.
உலக முதலைகள் தினம்: இன்று (ஜூன்17) உலக முதலைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. முதலைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அவற்றைக் காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முதலைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு இனத்தை காப்பாற்றுவது மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்காக இயற்கையை சமநிலையில் வைத்திருக்கவும்தான்.