
பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.
மலைகளைப் பாதுகாக்கவும், மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், 2002 ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.
மலை என்பதற்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வரைவிலக்கணம் எதுவும் கிடையாது. உயரம், கன அளவு, புறவடிவம், சரிவு, இடைவெளி, தொடர்ச்சி என்பன மலை என்பதை வரையறுப்பதற்கான அடிப்படைகளாகப் கொள்ளப்படுகின்றன. "பிரமிப்பூட்டத்தக்கதாக அல்லது குறித்துச் சொல்லத்தக்க உயரத்துக்கு, சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து இயற்கையாகவே ஏற்றத் தாழ்வுகளுடன் உயர்ந்திருக்கும் நில மேற்பரப்பு" என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி, மலைக்கு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது.
ஒரு நில வடிவம் மலையாகக் கொள்ளப்படுகிறதா என்பதை உள்ளூர் மக்கள் அதனை எவ்வாறு அழைக்கின்றனர் என்பதிலும் தங்கியுள்ளது. கலிபோர்னியாவின் சான்பிரான்ஸ்கோவில் உள்ள 'டேவிட்சன் மலை' 300 மீட்டர் (980 அடி) மட்டுமே உயரம் கொண்டது. ஆயினும் அது மலை எனப்படுகிறது. இது போலவே, ஒக்லகோமாவின் லோட்டனுக்குப் புறத்தேயுள்ள 'ஸ்க்காட் மலை' 251 மீட்டர் (823 அடி) மட்டுமே உயரமானது. யாழ்ப்பாணக் குடா நாட்டில், கடல் மட்டத்திலிருந்து சற்றே உயர்ந்திருக்கும் பகுதி கீரிமலை என்று அழைக்கப்படுவதையும் குறிப்பிடலாம்.
ஆசியாவின் 64% நிலப்பகுதியும், ஐரோப்பாவின் 25% நிலப்பகுதியும், தென்னமெரிக்காவின் 22% நிலப்பகுதியும், ஆஸ்திரேலியக் கண்டத்தில் 17% நிலப்பகுதியும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் 3% நிலப்பகுதியும் மலைகளினால் மூடப்பட்டுள்ளன.
மொத்தமாக உலகின் 24% நிலப்பகுதி மலைகளாக உள்ளன.
உலகின் 10% மக்கள் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர்.
உலகின் பெரும்பாலான ஆறுகள் மலைப் பகுதிகளிலேயே உருவாகின்றன என்பதுடன் உலக மக்களில் பெரும்பகுதியினர் நீருக்காக மலைகளிலேயேத் தங்கியுள்ளனர்.
மலைகளை எரிமலை, மடிப்பு, பகுதி என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இம்மூன்று வகைகளும், பூமிக்கு அடியிலிருக்கும் பாறை அடுக்குகள் நகர்வதால் உருவாகின்றன.
பூமிக்கு அடியிலிருக்கும் பாறை அடுக்குகளின் அழுத்தத்தால் வெப்பநிலை உயர்ந்து எரிமலைகள் (Volcanoes) உருவாகின்றன. சப்பானிலுள்ள ஃவூஜி மலை மற்றும் பிலிப்பைன்சிலுள்ள பினாதுபோ சிகரம் ஆகியவை எரிமலைகளின் சான்றுகளாகும்.
மடிப்பு மலைகளானது (Fold mountains), பூமிக்கு மேலிருக்கும் பாறை அடுக்குகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து பாறைகள் மடிவதினால் உருவாகின்றன. ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியான ஜீரா மலைத்தொடர், மடிப்பு மலைகளுக்குச் சிறந்த உதாரணமாகும்.
பூமியின் மேலடுக்கிலுள்ள பாறை அடுக்குகள், ஒன்றோடு ஒன்று உராய்வதில் ஏற்படும் தவறுகளினால் பகுதி மலைகள் (Block Mountains) உருவாகின்றன. பாறைகள் உராய்வதால் மேலெழும்பப்பட்ட பகுதிகள், பகுதி மலைகளாகும். கிழக்கு ஆப்பிரிக்கா, வொஸ்கெஸ், வட அமெரிக்காவின் மேற்கிலுள்ள மலைத்தொடர் ஆகியவை, பகுதி மலைகளின் சான்றுகளாகும்.
மத்திய ஆசியா, ஆப்பிரிக்காப் பகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட மலைவாசி மக்கள் வாழ்கின்றனர். மரபு வழியிலான மலைசார் சமூகங்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். தாழ் நிலங்களை விட இங்கு விவசாயம் பொய்த்துப் போகும் ஆபத்து கூடுதலாக உள்ளது. மலைகளிலேயேப் பெரும்பாலும் தாதுக்கள் கிடைப்பதால், தாது அகழும் சுரங்கங்கள் சில சமயம் மலைவாழ் சமுதாய மக்களின் பொருளாதரத்தில் முதன்மை அங்கமாக இருக்கின்றன. மிக அண்மைக் காலமாக, மலைவாழ் சமுதாயத்தினருக்குச் சுற்றுலா சார்ந்த தேசியப் பூங்கா அல்லது தங்குமிடங்கள் போன்றவை கவர்ச்சிகரமான வளர்ச்சியைக் அளிக்கின்றன. மலைவாழ் மக்களில் சுமார் 80% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.
உலகின் பெரும்பாலான ஆறுகளுக்கான மூலமாக மலை உள்ளது, மலைகளில் பொழியும் பனிப்பொழிவால் படியும் பனியானது சமதள மக்களுக்கு ஆற்று நீரைக் கோடையில் வழங்கும் ஒரு சேமிப்புக் கருவியாக செயல்படுகிறது. மனிதக் குலத்தில் பாதிக்கும் மேலான மக்கள் தண்ணீருக்கு மலைகளைச் சார்ந்து உள்ளனர்.
இவ்வேளையில், மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பன்னாட்டு மலை நாளினை மலைப்பகுதியிலிருப்பவர்கள் மட்டும்தான் கொண்டாட வேண்டுமென்பதில்லை. சமவெளி நிலப்பரப்புகளில் இருப்பவர்களும், மலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டாடலாம்.