சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் 2012 ஆம் ஆண்டு, பிப்ரவரி 26 ஆம் நாளில் நடைபெற்ற சீனிவாச இராமானுஜரின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத் தொடக்க விழாவில் பங்கேற்ற அப்போதைய இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், 2012 ஆம் ஆண்டை ‘தேசியக் கணித ஆண்டு’ என்று அறிவித்ததுடன், இராமானுஜர் பிறந்த டிசம்பர் 22 ஆம் நாள் ‘தேசியக் கணித நாள்’ என்று கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாளில், தேசியக் கணித நாள் (National Mathematics Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி தெருவில் வாழ்ந்த சீனிவாசன் - கோமளம் இணையருக்கு 1887 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் நாளில் ஈரோட்டில் பிறந்தவர் இராமானுஜன். இவர், சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆம் ஆண்டுக்கும் 1918 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதியக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ்ந்த உண்மைகள், இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எவருடைய உதவியுமின்றி, 16 வயதுக்குள் கணித இயலர் என்ற சிறப்புத் தகுதியைப் பெற்று, உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதையாக உயர்ந்த சீனிவாச இராமானுஜனின் சிறப்புகள் என்று கீழ்க்காணும் செயல்களைக் குறிப்பிடலாம்.
* 1918 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் ஆனார் (எஃப்.ஆர்.எஸ் பட்டம்).
* கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியின் ஃபெல்லோசிப் இவருக்குக் கிடைத்தது.
* ராமானுஜன் ஆய்வுகளில் 'தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்', 'தியரி ஆஃப் நம்பர்ஸ்', 'டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்', 'தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்', 'எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ்' எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.
* இவருடைய 'மாக் தீட்டா ஃபங்சன்ஸ்' எனும் ஆராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாகும்.
* கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது மரணத்துக்குப் பின் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
* சீனிவாச இராமானுசனின் 125வது பிறந்த நாளான டிசம்பர 22 2012 இல் கூகுள் தனது தேடுபொறியின் முகப்பு பக்கத்தில் அவரின் டூடுலை வெளியிட்டு சிறப்பு செய்தது.
* ஞான ராஜசேகரன் என்பவர் உலகப் புகழ்பெற்ற இந்தியக் கணிதவியலாளர் சீனிவாச இராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை, 'இராமானுஜன்' எனும் பெயரில் திரைப்படமாக எழுதி இயக்கி 2014 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இப்படம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் படமாக்கப்பட்டது.
மேலும் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இராமானுஜர், 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாளில் கும்பகோணத்தில், 32 வயதில் இறந்தார். இவரது வாழ்வு குறைந்த காலம் என்றாலும், இவரது கணிதக் கண்டுபிடிப்புகள் காலம் முழுவதும் போற்றக் கூடியதாக இருக்கின்றன என்பது இவருக்கான பெரும் சிறப்பு என்றேச் சொல்லலாம்.